5 ஆவது முறையாக உலக சாம்பியன் ஆனார் வி. ஆனந்த்!

மாஸ்கோ: உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஐந்தாவது முறையாக கைப்பற்றி அசத்தினார் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த். இன்று நடந்த பரபரப்பான "டை- பிரேக்கரில்' இஸ்ரேலின் ஜெல்பாண்டை வீழ்த்தி, மீண்டும் மகுடம் சூடினார்.

ரஷ்யாவின் மாஸ்கோவில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், 42, இஸ்ரேலின் போரிஸ் ஜெல்பாண்டு, 43, மோதினர். மொத்தம் 12 சுற்றுகள் கொண்ட இப்போட்டியின், 7வது மற்றும் 8வது சுற்றில் மட்டும், இருவரும் தலா ஒரு வெற்றி பெற்றனர். மற்ற 10 சுற்றுகள் "டிரா' ஆனது. 12 சுற்று முடிவில் இரு வீரர்களும் தலா 6 புள்ளி பெற்றனர். இதையடுத்து வெற்றியாளர் யார் என்பதை முடிவு செய்ய, போட்டி "டை பிரேக்கருக்கு' சென்றது. "ரேபிட்' முறையில் நான்கு போட்டிகள் நடந்தது. இருவருக்கும் தலா 25 நிமிடங்கள் தரப்பட்டன.

முதல் "டிரா': முதல் போட்டியில் கறுப்பு காய்களுடன் ஆனந்த் விளையாடினார். இப்போட்டி 32வது நகர்த்தலின் போது "டிரா' ஆனது.

ஆனந்த் முன்னிலை: பின் இரண்டாவது போட்டியில் வெள்ளை காய்களுடன் போட்டியை துவக்கிய ஆனந்த், அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து 77 வது நகர்த்தலின் போது, ஜெல்பாண்டு தனது தோல்வியை ஒப்புக்கொள்ள, ஆனந்த் 1.5-0.5 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.

மீண்டும் சமன்: மூன்றாவது போட்டியில், ஜெல்பாண்டு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், குறிப்பிட்ட நேரத்துக்குள் போட்டி முடியாத நிலையில், 41வது நகர்த்தில் போட்டி மீண்டும் "டிரா' ஆனது. ஆனந்த் தொடர்ந்து முன்னிலையில் (2.0-1.0) இருந்தார்.

அசத்தல் வெற்றி: கடைசியாக துவங்கிய நான்காவது போட்டியை ஆனந்த் "டிரா' செய்தாலே போதும் என்ற நிலையில், வெள்ளை காய்களுடன் ஆனந்த் போட்டியை துவக்கினார். இப்போட்டியும் 56 வது நகர்த்தலுக்குப் பின், "டிரா' ஆக, 2.5 புள்ளிகள் பெற்ற ஆனந்த், மீண்டும் உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். இவர் ரூ. 8.5 கோடி பரிசாக தட்டிச் சென்றார். இரண்டாவது இடம் பெற்ற ஜெல்பாண்ட் ரூ. 5.7 கோடி பரிசு பெற்றார். செஸ் அரங்கில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய ஆனந்த் ஐந்தாவது முறையாக (2000, 07, 08, 10, 12) பட்டம் வென்றது, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிஸ்கி} சென்னையின் சிங்க குட்டியான ஆனந்த் மீண்டும் மகுடம் சூடியதில் மட்டற்ற மகிழ்ச்சி! இவரால் தமிழகம் தலை நிமிர்கிறது. ஐபிஎல் தோல்விக்கு ஆறுதலாகவும் இவரது வெற்றி அமைந்தது குறிப்பிடத் தக்கது! வாழ்த்துக்கள் ஆனந்த்!

தகவல் உதவி} தினமலர்

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!