நான் ரெடி! நீங்க ரெடியா? நித்தி சவால்! கலக்கல் கதம்பம்!

விஜயகாந்த் இப்போது சட்டசபைக்கு வராதது சென்சேஷன் ஆகிப் போய் விட்டது. நாக்கை கடித்து மிரட்டி பேசினார் என்று அவரை சஸ்பெண்ட் செய்தார் சபாநாயகர்! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பார்த்தார் கேப்டன்! தோனி போல அங்கு அவருக்கும் அடி சறுக்க கம்மென்று இருந்துவிட்டார். சபைக்கு வருவதில்லை! அவர் அவைக்கு வராததை அதிமுக அமைச்சர்களும் உறுப்பினர்களும் தினம் தினம் கிளப்பி தேமுதிக உறுப்பினர்களை வம்புக்கிழுத்து வருகிறார்கள்.  நேற்றும் சபைக்கு வராமல் நடிக்க போய் விட்டாரா? என்று கிண்டல் செய்தனர் அதிமுகவினர்.அலோ கேப்டன் சார்! நீங்க சபைக்கு போய் இதை கேப்பீங்களா? இவர் மட்டுமல்ல திமுக தலைவரும் அவைக்கு வருவதில்லை! இந்த பழக்கத்தை முதலில் துவக்கி வைத்த பெருமை இப்போதைய முதல்வரையேச் சாரும். நம்முடைய குறைகளை சட்டசபையில் எடுத்து சொல்லி பேச இவர்களை அனுப்பிவைத்தால் இவர்கள் போகமாட்டேன் என்று அடம் பிடித்தால் எப்படி?

தமிழகத்தில் புதிதாக ஒன்பது வட்டங்களை உருவாக்கியுள்ளார் அம்மா! இப்படி அதிரடியாக ஏதாவது செய்வதில் அவருக்கு நிகர் இல்லைதான்! ஆனால் இது உருப்படியான விசயம்! நிர்வாக சிக்கல் தீரும்! மக்கள் பலரும் இதை வறவேற்றுள்ளனர். இப்படியே நல்லதாவே எதாவது செய்யுங்க மேடம்!

தமிழகத்தில் மின்வெட்டு மீண்டும் தொடங்கிவிட்டது ஒரு நாளு நாள் வெட்டில்லாமல் கிடைத்த மின்சாரம் கடந்த இரண்டு நாட்களாக பழையகுருடி கதவை திறடி என்ற கதையாக பழையபடி எட்டு மணி நேர மின்வெட்டாக தொடர ஆரம்பித்துவிட்டது! என்ன காரணம் என்று தெரியவில்லை! கத்திரி வெயிலின் தாக்கத்தில் தவிக்கும் மக்கள் மின் வெட்டு தளர்வடைந்ததும் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டார்கள் ஆனால் அவர்களின் நிம்மதி நிலைக்கவில்லை! காற்றாலைகள் உற்பத்தி குறைந்துவிட்டதா? இல்லை அந்த மின்சாரத்தை வாங்க வக்கில்லையா? ஒன்றுமே புரியவில்லை! மின்சார தளர்வு குறித்து பக்கம் பக்கமாய் எழுதியவர்கள் இந்த வெட்டை குறித்து ஒன்றுமே எழுதவில்லை! ஒன்னுமே புரியல இந்த உலகத்துல!


பொன்னேரியில் ஹரியும் ஹரனும் சந்திக்கும் சந்திப்பு உற்சவம் சிறப்பாக வெகு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த பேரூரின் ஓர் சாலைக்கே ஹரிஹரன் சாலை என்று பெயர்! இங்கு நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் ஹரியும் அரனும் சந்திக்கும் சந்திப்பு நிகழ்ச்சி முக்கியமானது. பொன்னேரி அகத்தீஸ்வர பெருமானும் கரிக்கிருஷ்ண பெருமாளும் உற்சவ மூர்த்தங்களாய் சர்வ அலங்காரத்துடன் வீதி உலா வந்து ஆஞ்சநேயர் கோயில் அருகே எதிரும் புதிருமாய் சந்தித்து கொள்ளும் காட்சி கண்கொள்ளா விருந்து! இந்த ஆண்டின் சந்திப்பு உற்சவம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது. அதை தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது.


கரண்ட்தான் தட்டுப்பாடுன்னு பார்த்தா டீசலுக்கும் இப்ப தட்டுப்பாடு வந்திடுச்சு! மங்களூர் எண்ணை சுத்திகரிப்பு ஆலையில் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டதால் இங்கிருந்து டீசலை அங்க அணுப்பி இருக்காங்க! அதாம்பா கர்னாடாகவிற்கு அவங்க தண்ணி தரலேன்னாலும் நாம டீசல் தருவோம்லன்னு கர்ண மகாபிரபு பட்டம் வாங்க கொடுத்துகிட்டு இருக்காங்க! இப்ப சென்னை சுத்திகரிப்பு ஆலையிலும் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு போச்சு! சென்னையிலும் சுற்றியுள்ள பகுதிகளான திருவள்ளூர் காஞ்சிபுரம் பகுதிகளில் சுமார் 300 பங்குகளில் டீசல் ஸ்டாக் இல்லை என்ற போர்டு தொங்குகிறது. வாகன ஓட்டுனர்கள் பாடு ரொம்பவே திண்டாட்டமா இருக்குது! டிராவல்ஸ் வச்சிருக்கவங்க கஷ்டம் சொல்லி தெரியவேண்டியது இல்லை! இதுல ஜெனரேட்டர் மூலம் கரண்ட் தயாரிக்கற கம்பெனிகளும் ரொம்பவே கஷ்டத்துல தவிக்குது! இன்னும் ரெண்டு மூணு நாள்ல நிலைமை சீரடையும்னு சொல்றாங்க!


நித்தியானந்தா கடும் சவால் விட்டிருக்காரு! தன்னோட அறையில் ரகசிய கேமரா மாட்டத் தயார்! என்னை குறைகூறும் ஆதினங்களின் அறையில் ரகசிய கேமரா பொறுத்த தயாரா? அப்படி பொறுத்தினால் எத்தனை ஆதினங்கள் மாட்டுவார்கள் என்று எனக்குத் தெரியும் தனியார் துப்பறியும் நிறுவனம் மூலம் இதை செய்ய வேண்டும்! இந்த சவாலை ஆதினங்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்று பேட்டியளித்துள்ளார்! ஆதினங்களே நித்தியின் சவாலை ஏற்க தயாரா? அடுத்த கில்மா வீடியோவிற்கு ஜனங்க ரொம்ப ஆவலா காத்துகிடக்கறாங்க!


வரும் கல்வியாண்டு முதல் ஜாதிச்சான்றிதழ்! வருமான சான்றிதழ்! இருப்பிடச் சான்றிதழ் ஆறாம் வகுப்பிலேயே பள்ளிகளில் வழங்கப்படும் என்று அம்மா அறிவித்துள்ளார்! இதனால் பெற்றோர்கள் பலரும் நிம்மதி பெருமூச்சுவிடுகின்றனர். இந்த சான்றிதழ்களை வழங்கி காசு பார்க்கும் அதிகாரிகள் கலங்கிப் போயுள்ளனர். ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகளை பள்ளிகளில் சேர்ப்பதற்கு முன் இந்த சான்றிதழ்களுக்காக விஏஒ, ஆர்டிஓ, தாசில்தார், என அலைந்து பலருக்கும் லஞ்சம் கொடுத்து காத்திருந்து பெற்ற சான்றிதழ் இனி பள்ளிகளில் கிடைக்க போகிறது என்ற அறிவிப்பு வறவேற்கத் தக்க ஒன்றே! இது மாதிரி நல்ல திட்டங்களை செயல் படுத்துங்கள் முதல்வரே!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2