இறுதி”யை சந்திக்கும் உறுதி! ஒரு அதிசய தம்பதி

கருவறை முதல் கல்லறை வரை...! வாழ்வின் யதார்த்தத்தை வெளிக்காட்டும் வாக்கியம் இது. முதல் பருவமும், கடைசிப் பருவமும் குழந்தைத் தனமானது. தவழ்வது, எழுந்து நிற்பது, முக்கியமாக, சொந்தக் காலில் நிற்பது என, தொடர் பயணத்தில் தடைகளை தாண்டிச் செல்லும் போது, ஒவ்வொரு பிரச்னை தலைதூக்கும். யுவன் பருவத்தை கடக்கும் போது தான், பெற்றோர் பலர், கடந்த கால பிரச்னைகளை எல்லாம் மறக்கும் வகையில், புதிய பிரச்னைகளை சந்திக்கின்றனர். வாரிசின் திருமணத்துக்கு பின், அவர்களால் புறக்கணிக்கப்படும் போது, வாழ்வின் மொத்தமும் போய் விட்டதாக நினைக்கின்றனர். அதனால் தான், இவர்களை அரவணைத்துக் கொள்கிறது முதியோர் இல்லங்கள்.

விளையாட்டுப் பருவத்தில், வீட்டை நிராகரிக்கும் நிலை தாண்டி, முதியோர் பருவத்தில், வீட்டால் நிராகரிக்கும் நிலை வந்து விடுகிறது. அதிகரித்து வரும் மாற்றங்களால், அனைத்தையும் இழந்து நிர்கதியாகி, பாசத்துக்கு ஏங்குவோர் பலர். அதில், தங்களை இணைத்துக் கொண்டு, மரணத்துக்கு பின்பும் கூட யாருக்கும் சிரமம் தரக்கூடாது என்பதற்காக, தங்களுக்கு தாங்களே கல்லறை அமைத்து, அவர்களின் வருத்தத்தை முகத்தில் தெரிவிக்கின்றனர், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த வயதான தம்பதியினர்.

பந்தலூர் கையுன்னி அடுத்துள்ள பைங்கால் பகுதியை சேர்ந்த தம்பதியினர் திம்மாகவுடர், லட்சுமியம்மா. இவர்களுக்கு இரு மகன்களும், இரு மகள்களும் உள்ளனர். இவர்களது வாரிசுகள், ஓரளவு வசதியாக உள்ள நிலையில், தத்தம் வேலைகளை பார்க்க துவங்கி விட்டனர். 9 ஏக்கர் நிலத்தில், பாகப்பிரிவினை செய்தது போக, எஞ்சியுள்ள 1.82 ஏக்கர் நிலத்தில் உள்ள பெரிய வீட்டில் தனியார் வசித்து வருகின்றனர் திம்மாகவுடர், லட்சுமியம்மா தம்பதியினர். எதற்கு மற்றவர்களுக்கு தொந்தரவு என்று நினைத்தார்களோ என்னவோ... ஓராண்டுக்கு முன், வீட்டை ஒட்டியுள்ள ஒரு பகுதியில், தங்களுக்கு கல்லறை அமைக்கும் பணியை மேற்கொண்டார். கல்லறையின் மேல் இருவது பெயர் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு, இறப்பு தேதிக்கும் இடம் விட்டு விபரங்களை குறிப்பிட்டு, சலவைக்கல் பதித்துள்ளனர். குழியின் உள்பகுதியில் மணல் நிரப்பி, மேல்பகுதியில் சிமென்ட் தடுப்பு அமைத்து தயார் நிலையில் வைத்துள்ளனர். சொத்துகள், உறவுகள் இருந்தாலும், வாழ்வின் முடிவை யாராலும் கணிக்க முடியாத நிலையில், தங்களின் செயலால், இப்பகுதியினரின் மனங்களை கனக்க வைத்துள்ளனர்.

தங்களின் கல்லறையை உயிருடன் இருந்தபடியே பார்த்து வரும் இந்த தம்பதியினர், இறப்பிலும் இணை பிரியாதிருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். இதயத்தை வருடும் என்னே ஒரு அதிசய தம்பதி.

நன்றி தினமலர்

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2