பசுமை நிறைந்த நினைவுகள் 3

பசுமை நிறைந்த நினைவுகள் 3

கடந்த இரண்டு பதிவுகளில் என் குழந்தை பருவம் பற்றி பகிர்ந்து கொண்டேன்! உங்களுக்கு இதில் சுவாரஸ்யம் இல்லாவிட்டாலும் எனது மனது லேசானது. வயது நாற்பதை நெருங்குகையில் ஒரு முப்பத்தைந்து வருடங்கள் முன்னோக்கி பயணிக்கையில் மனது சுகமான அனுபவத்தை பெறுகிறது. மீண்டும் கிடைக்காத குழந்தை பருவநாட்களை மீண்டும் அசை போடுகையில் மனம் புத்துணர்வு பெறுகிறது.
     ஆகாயத் தாமரைகள் மண்டிகிடக்கும் குளத்தில் அதன் இலைகளையும் நீலக் கலரில் கொத்தாக பூத்திருக்கும் பூக்களையும் பறித்து பெண்கள் விளையாடுவார்கள்!. அப்படி ஒரு சமயம் மாலதியும் அவரது தோழிகளும் விளையாடிக் கொண்டிருந்தனர். நானும் என் வீட்டு வாசலில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். மாலதியின் தாயார் கஸ்தூரி அம்மாள் மாலதியை எதற்கோ அழைக்க மாலதி வர மறுத்தார். பசங்களும் இருக்குதே கல்லும் மண்ணும் கட்டிகிட்டு விளையாடுதுங்கோ! இதோ பாரு ஐயர் ஊட்டு பையனை சமத்தா உட்கார்ந்து கிட்டு இருக்குது! இதுவும் இருக்குதுங்களே! என்று அவர் திட்டிக் கொண்டு போனார். உண்மையில் நாணும் அவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தேன்! ஆனால் அவர் வரும் சமயம் என் வீட்டு வாசலில் நான் அமர்ந்திருக்கவே புகழ்ந்து பாடிச் சென்றார். இதொ பார்றா சமத்தை! நாமதான் அசடுடி! என்று தோழிகள் வேறு கேலி பேசினர்
  நாள்கள் ஓடின! பள்ளியில் புரட்சி தலைவரின் சத்துணவு திட்டம் தொடங்கியது. என்னுடைய மாமாதான் அமைப்பாளராக பதவியேற்றார். பள்ளியில் மொத்தம் 40 பேர் இருந்தால் அணைவரையும் சத்துணவு திட்டத்தில் உணவருந்தும் மாணவர்களாக பதிவு செய்து விட்டனர். நானும் அவர்களில் ஒருவனானேன். ஆனால் மதியம் உணவைவீட்டில் தான்  சாப்பிடுவேன். பெயர் மட்டும் இருக்கும். தீபாவளி பொங்கல் போன்ற சமயங்களில் ஜாங்கிரி லட்டு போன்ற இனிப்புகளும் மாதம் ஒரு முறை பல்பொடியும் இரண்டு செட் சீருடை மற்றும் காலணியும் அக்காலத்தில் சத்துணவு உண்போருக்கு வழங்கப் பட்டன. எனக்கும் இவை கிடைத்தது.
   நாங்கள் ஒன்றும் பெரிய வசதி படைத்த குடும்பம் இல்லை! எனவே இந்த சீருடைகள் காலணி,பல்பொடி போன்றவை எனக்கு மிகவும் உபயோகமாகவே இருந்தது. மதிய உணவை மட்டும் வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்த எனக்கு ஒரு நாள் ஆப்பு வந்தது.
  பள்ளிக்கு ஆய்வு செய்ய பள்ளித் துணை ஆய்வர் அவர்கள் வருவதாகவும் அனைத்து மாணவர்களும் வீட்டில் சாப்பிடாமல் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளியிலே சாப்பிட வேண்டுமென தகவல் காலையில் வந்தது. சொன்னவர் மாமாவே தான்!
சும்மா தட்டிலே சாப்பாடு வாங்கிக்க அதிகாரி கணக்கு பார்க்க போகிறார். அவர் அப்படி போனதும் சாப்பாட்டை யாருக்காவது கொடுத்திட்டு வீட்டுக்கு போயிடு என்று அவர் பல முறை சொல்லியும் எனக்கு உதறல் எடுத்து விட்டது.
  அதிகாரி வந்தார் ஆய்வுகளை முடித்தார்! மதிய உணவு நேரத்தில் உணவு வரிசையாக வழங்கப்பட்டது. நாணும் வரிசையில் சென்று வாங்கினேன்.வரிசையில் அமர்ந்தோம் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என கோரஸாக திருக்குறள் பாடி அனைவரும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர். அதிகாரி அப்படி சென்று விடுவார் இப்படி நான் கிளம்பலாம் என்று நினைத்தால் அவர் கிளம்பாமல் அப்படியே நின்று கொண்டிருந்தார்.
   நான் திரு திரு வென முழித்தேன்! பக்கத்தில் இருந்த சதிஷ், டேய்! அழாதடா! என் தட்டுல கொஞ்சம் கொஞ்சமா உன் சோத்த எடுத்து போடு! என்றான்! ஆனால் எங்கே போடுவது எனக்கு கை கால் உதற  கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது! சதிஷ் அழாதே எனும்போதுதான் எனக்கு அழுகை பிறீட்டுக் கிளம்பியது!
     ஓவென அழ ஆரம்பித்தேன்! அந்த அதிகாரி பெயர் திரு ராமாமிர்தம் குள்ளமாக இருப்பார். அவர் என்ன தம்பி ஏன் அழுவுறே? என்று அருகே வரவும் மேலும் வீறிட்டு அழ ஆரம்பித்தேன்! இதற்குள் சமயோசிதமாக தலைமை ஆசிரியை சார் அவன் வீட்டுக்கு எடுத்து பொயி சாப்பிட்டு பழக்கம் வீட்டுல செல்லமா ஊட்டி விடுவாங்க! அந்த ஞாபகத்தில அழறான்!  என்று சொல்ல அப்படியா  சரி தம்பி நீ அழாதே நீ வீட்டுக்கு போ! என்று என்னை அனுப்பினார் அந்த அதிகாரி.
     அழுதபடியே தட்டுடன் வீட்டுக்கு ஓடி வந்தேன்! ஏண்டா கண்ணா அழறே என்று ஆளாளுக்கு கேட்க இதற்குள் வீட்டுக்கு வந்த மாமா! சரியான பேரன்! ஐஞ்சு நிமிசம் சமாளிக்க தெரியல! தட்டுல சாப்பாடு வச்சதுமே அழுது அடம் பிடிச்சு ஓடி வந்துட்டான்! நல்ல வேளை அந்த ஆபிசர் நல்லவரா இருந்ததாலே தப்பிச்சேன் என்றார்.
   அந்த ஆபிசருக்கு என் மாமா வீட்டில் இருந்து உணவு சென்றது! சாப்பிட்டு பாராட்டு தெரிவித்துச் சென்றார்.பக்கத்து ஊரில் ஒர் முருகன் ஆலயமிருந்தது. பெரும்பேடு என்பது அவ்வூரின் பெயர். அங்கு பூமிக்கடியில் இருந்து சுமார் ஆறரை அடி உயரமுள்ள முருகன் சிலையும் வள்ளி தெய்வானை சிலைகளும் கிடைத்தது. முத்துக் குமரன் என பெயரிட்டு கோயில் கட்டி வழி பட்டனர். என்னுடைய தாத்தாதான் முதலில் பூஜை செய்து வந்தார். பின்னர் அவரது மைத்துனர் திரு நடராஜ குருக்களை அங்கு பணியமர்த்தினார்.
  அந்த ஆலயத்தில் கிருத்திகை சமயங்களில் பல்வேறு ஊர்களிலிருந்து பக்தர்களின் கூட்டம் குவியும். ஒரு சமயம் எங்களையும் ஆசிரியை ஆலயத்திற்கு அழைத்துச் சென்றார். ஆசான பூதுரிலிருந்து பெரும்பேடு செல்ல அப்போது சாலை வசதி கிடையாது. வயல்களுனுடே வரப்புகளில் செல்ல வேண்டும்! அழகான பயணம் அது! சிறியதும் பெரியதுமான வரப்புகளில் வரிசையாக எறும்பு கூட்டம் போல ஒருவர் பின் ஒருவராக நடந்து சென்றோம்!
   வரப்பு முடிந்து ஏரிக்கரை வரும் அதில் ஏறி செல்வோம்! வழியில் ஏரியிலும் மடுவிலும்பூத்திருக்கும் அல்லி மலர்களையும் குவளை மலர்களையும் பெரிய மாணவர்கள் பறித்து மாலையாக செய்வார்கள். அப்படியே சென்று திரும்பி வரும் வரை பெரும் சுகமாக இருக்கும்.
ஆசான பூதூரில் படிக்கும் சமயம் இருமுறை கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்றார்கள்! இரண்டுமே சில நிகழ்வுகளை கண் முன்னே இன்றும் கொண்டு வருபவைதான்! ஒரு சமயம் மாலை ஐந்து மணி வாக்கில் பெரும்பேடு சென்று அங்குள்ள பள்ளியில் தங்கினோம். ஏனேனில் அந்த பள்ளி மாணவர்களோடுதான் நாங்களும் செல்ல இருந்தோம்! பொழுது இருட்டியதும் பஸ் வந்தது!
    வேதாசலம் பஸ்டா! என்றான் சதிஷ். பஸ்ஸினுள்ளே ஏறிப் பார்த்தான் சூப்பர்டா! என்றான். இரவு தூங்கி போனோம். விடியலில் எழுப்பினார்கள் அருகில் உள்ள குளத்தில் முகம் கால் கழுவி பல் விளக்கி புதிய துணி மணிகள் அணிந்து கொண்டோம். பள்ளியில் இருந்து வரிசையாக பஸ் ஸ்டாண்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்குள்ள ஜானகிராம ஐயர் ஓட்டலில் அனைவருக்கும் டீ வாங்கி கொடுத்தார்கள்!
    கண்ணாடி கிளாஸில் தொட முடியாத அளவிற்கு சூடாக அது இருந்தது. எப்போதும் வீட்டில் பாட்டி ஆற்றித் தரும் காபியை பருகிய எனக்கு அதை பருக கஷ்டமாகத் தான் இருந்தது. பக்கத்தில் இருந்த நண்பன் அன்பு ஊதி ஊதி குடித்துக் கொண்டிருந்தான். நான் என் மாமாவையே பார்த்தேன்.அவரும் எங்களுடன் தான் வந்திருந்தார். அவர் கண்டு கொள்ளவே இல்லை! எப்படியோ நாக்கில் சூடு பட்டுக் கொண்டு குடித்து முடித்து பள்ளிக்கு வந்தோம். பஸ்ஸில் முண்டி அடித்து மாணவர் கூட்டம் ஏற பின் தங்கினேன்.
   சுரேஷ் இங்க வாடா என்று அன்பு இடம் பிடித்துக் கொடுத்தான். விடிந்தும் விடியாதா காலை பனி பொழுதில் எங்களை சுமந்து கொண்டு அந்த பேருந்து புறப்பட்டது!
   மீண்டும் நாளை சொல்கிறேனே!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!



Comments

  1. தொடர்ந்து சிறப்பான பதிவுகள் எழுதும் தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2