விஜயகாந்த், அதிமுக உரசல் எதிரொலி- திமுகவை விட்டு விட்டு அதிமுகவில் சேருகிறார் வடிவேலு?

சென்னை: அனைவரும் எதிர்பார்த்தபடியே அதிமுக, தேமுதிக இடையிலான உறவு மோசமாகி விட்டது. அதிமுக ஆட்சியையும், முதல்வர் ஜெயலலிதாவையும் சமீபத்தில் சென்னையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தின்போது வாய் வலிக்க விமர்சித்து விட்டார்கள் விஜயகாந்த்தும், அவரது மனைவி பிரேமலதாவும். இந்த நிலையில் விஜயகாந்த்தின் பரம வைரியான நடிகர் வடிவேலுவும், விஜயகாந்த்தின் முன்னாள் உயிர் நண்பரான இப்ராகிம் ராவுத்தரும் அதிமுகவில் சேரப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜயகாந்த்- இப்ராகிம் ராவுத்தர்- வடிவேலு. இந்த மூவருக்குமே நிறைய ஒற்றுமை உண்டு. மூவருமே மதுரைக்காரர்கள். மூவருமே ஒருகாலத்தில் உயிருக்கு உயிரான நண்பர்களாக விளங்கியவர்கள். ஆனால் காலப் போக்கில் மூவருமே பரம வைரிகளாக மாறிப் போனவர்கள். இப்ராகிம் ராவுத்தர் மகா அமைதியாக ஒதுங்கிப் போயிருந்தார். வடிவேலு அப்படி இல்லை. அதுதான் இந்த மூவருக்கும் இடையே இருந்த ஒரே வித்தியாசம்.

தமிழக சட்டசபை பொதுத் தேர்தலுக்கு முன்பே விஜயகாந்த்தும், வடிவேலுவும் கடுமையான சண்டையில் ஈடுபட்டிருந்தனர். இது உலகத்திற்கேத் தெரியும். விஜயகாந்த் ஆட்கள் தனது வீட்டில் கடும் தாக்குதல் நடத்தியதாக வடிவேலு போலீஸில் புகார் கொடுத்தார். பதிலுக்கு விஜயகாந்த் தரப்பும் புகார் கொடுத்தது. அந்த சண்டையின்போது விஜயகாந்த் எங்கு தேர்தலில் நின்றாலும் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன் என்று சவால் விட்டார் வடிவேலு.

இதனால் சட்டசபைத் தேர்தலின்போது விஜயகாந்த்தை எதிர்த்து வடிவேலு போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இருப்பினும் வடிவேலு அமைதி காத்தார். இந்த நிலையில்தான் விஜயகாந்த்தும், அதிமுகவும் கூட்டணி வைக்கும் செய்தி வெளிவந்தது. இதனால் வடிவேலு அப்செட்டாகி விட்டார். இதை பகிரங்கமாகவே கண்டித்த அவரை திமுக கப்பென பிடித்து இழுத்துக் கொண்டது.

திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வடிவேலு பிரசாரம் செய்வார் என்ற தகவல் வெளியானது. இதனால் திமுக தரப்பு பெரும் உற்சாகமடைந்தது. வடிவேலுவும் ஊர் ஊராகப் போய் திமுகவுக்காக வாக்கு சேகரித்தார். ஆனால் அவரது பிரசாரத்தின் மையப் புள்ளியே விஜயகாந்த்தாகத்தான் இருந்தது. விஜயகாந்த்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு டேமேஜ் செய்து பேசினார் வடிவேலு. இதற்கு மக்களிடையே ஏகோபித்த வரவேற்பு காணப்பட்டாலும் கூட வடிவேலு சற்று ஓவராகப் பேசுவதாகவும் கருத்து எழுந்தது.

துரதிர்ஷ்டவசமாக வடிவேலுவின் பிரசாரத்திற்குப் பலன் கிடைக்காமல் போய் விட்டது. திமுக படு தோல்வியைச் சந்தித்தது. அதிமுக பெரும் வெற்றியைப் பெற்றது. அதிமுகவுடன் சேர்ந்ததால் தேமுதிகவுக்கும் அரசியல் அங்கீகாரம் கிடைத்தது, விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார்.

இதையடுத்து வடிவேலு திரையுலகில் ஒதுக்க ஆரம்பிப்பதாக பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் அவரோ, நானாகத்தான் ஒதுங்கியிருக்கிறேன் என்று கூறினார்.

இந்த நிலையில் வடிவேலு திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணையப் போவதாக பரபரப்புச் செய்தி பரவியுள்ளது. காட்டுத் தீ போல பரவியுள்ள இந்த செய்தியால் அதிமுக தரப்பில் சற்று குஷியும் காணப்படுவதாக கூறப்படுகிறது.

அதிமுக தரப்புக்கு வடிவேலு வந்து சேர கிரீன் சிக்னல் மேலிடத்திலிருந்து வந்து விட்டதாகவும் கூறுகிறார்கள். உண்மையில் தேர்தல் முடிந்ததுமே கூட வடிவேலு அதிமுகவில் சேர்ந்திருப்பாராம். ஆனால் அப்போது விஜயகாந்த் கூட்டணியில் இருந்ததால் வடிவேலு வர சிக்னல் தரப்படவில்லையாம். வடிவேலுவும் கூட 'அண்ணன் கிளம்பட்டும், அப்புறம் திண்ணையை மாத்தலாம்' என்ற எண்ணத்தில் அமைதியாக இருந்து வந்தாராம். அவரது அமைதிக்கு இதுதான் காரணம் என்கிறார்கள்.

வடிவேலு அதிமுகவுக்கு வருவதில் அதிமுக தரப்பிலும் சரி, அவரது கூட்டணிக் கட்சிகளான சரத்குமார் உள்ளிட்டோர் தரப்பிலும் சரி யாருக்குமே ஆட்சேபனை இல்லையாம். காரணம், வடிவேலு தனது பிரசாரத்தின்போது அதிமுகவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதே. மேலும், அவரது எதிரி விஜயகாந்த் மட்டுமே என்பது சின்னப் புள்ளைக்குக் கூட தெரியும் என்பதாலும், வடிவேலு ஒரு பிறவி அதிமுக விசுவாசி என்பது காலம் காலமாக திமுகவில் இருந்து வருபவர்களுக்கும் தெரியும் என்பதாலும், வடிவேலுவின் அதிமுக விஜயம் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது.

தற்போது விஜயகாந்த் அதிமுகவை விட்டு வெகு தூரத்திற்குப் போய் விட்டார் என்பது அவரது பேச்சிலிருந்து தெரிகிறது. மேலும், இனிமேலும் அவர் அதிமுக கூட்டணியில் நீடிக்க மாட்டார் என்பது விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவின் சென்னை போராட்ட பேச்சுக்களின் மூலம் நிரூபணமானது.

இந்த நிலையில்தான் வடிவேலு அதிமுகவில் சேரும் செய்தி கசியத் தொடங்கியுள்ளது. மேலும், வடிவேலுவை அதிமுகவுக்கு கூட்டிக் கொண்டு வரும் பணியை சரத்குமார்தான் முன்னின்று மேற்கொண்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

வடிவேலு தவிர இப்ராகிம் ராவுத்தரும் அதிமுகவுக்கு வருகிறாராம். விஜயகாந்த்தின் உயிர் நண்பராக ஒரு காலத்தில் இருந்தவர் இப்ராகிம் ராவுத்தர். நண்பராக இருந்த அவர், விஜயகாந்த் திரைத் துறையில் கடும் சவால்களை சந்தித்தபோதெல்லாம் உடன் இருந்து ஊக்கம் அளித்தவர். பின்னர் விஜயகாந்த்தை வைத்து பல வெற்றிப் படங்களையும் தயாரித்தார். ஆனால் காலம் இவர்களைப் பிரித்து விட்டது.

பல காலமாக ஒதுங்கியே இருக்கும் இப்ராகிம் ராவுத்தரும் தற்போது அரசியலில் புக முடிவு செய்து விட்டார். வடிவேலு சமீபத்தில் ராவுத்தரை நேரில் சந்தித்துப் பேசியதாகவும், அப்போதுதான் இணைப்பு குறித்து முடிவெடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எப்போது அதிமுகவில் இருவரும் இணைவார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் அவர்கள் அதிமுகவில் இணையும் நாள், அதிமுக-தேமுதிக கூட்டணி அதிகாரப்பூர்வமாக முறியும் நாளாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி தட்ஸ் தமிழ்

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2