ஜெயலலிதாவை கவிழ்த்து விட்டு ஆட்சியைப் பிடிக்க சசி தரப்பு சதி?- நீக்கத்திற்கு அதுவே காரணம்??

சென்னை: ஜெயலலிதாவுக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கில் ஒரு வேளை பாதகமாக தீர்ப்பு வந்தால் அதைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்க சசிகலா தரப்பு திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதனால்தான் ஜெயலலிதா, ஒட்டுமொத்தமாக அத்தனை பேரையும் அதிமுகவை விட்டு விரட்டி விட்டதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

என்ன நடந்தது என்று யோசிப்பதற்குள் என்னவெல்லாமோ நடந்து விட்டது என்று ஒரு வார்த்தை சொல்வார்கள். ஜெயலலிதா விஷயத்தில் அதுதான் நடந்திருக்கிறது. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை யோசித்துப் பார்ப்பதற்குள் என்னவெல்லாமோ நடந்தேறி விட்டதை பார்த்து அதிர்ந்து போய்த்தான் சசிகலா கும்பலை விரட்டி விட்டுள்ளார் ஜெயலலிதா என்கிறார்கள்.

விஷயம் ரொம்ப சிம்பிள். பெங்களூர் கோர்ட்டில் கடந்த 14 வருடங்களுக்கும் மேலாக நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கை மையமாக வைத்து சசிகலா தரப்பு ஒரு அபாரமான திட்டத்தை வகுத்து செயல்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதாவது இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு பாதகமாக நிச்சயம் தீர்ப்பு வரும். எனவே அவர் பதவி விலக நேரிடலாம். அப்படி நடந்தால், ஆட்சியைப் பிடிப்பது என்பதுதான் இந்த சதித் திட்டத்தின் மையப் புள்ளி என்கிறார்கள் 'கார்டனுக்கு' நெருக்கமானவர்கள்.

ஜெயலலிதா 3வது முறையாக முதல்வர் பதவிக்கு வந்த நாள் முதலே இந்த சதித் திட்டத்தை படிப்படியாக அமல்படுத்த ஆரம்பித்து விட்டது சசிகலா தரப்பு என்கிறது விவரம் அறிந்த வட்டாரங்கள்.

முதலில் ஜெயலலிதாவுக்கு அரசு நிர்வாகத் தகவல்கள், முக்கியத் தகவல்கள் எதுவும் போகாமல் தடுக்க ஆரம்பித்துள்ளது இந்த 'குரூப்'. உளவுத்துறைத் தகவல்களை ஜெயலலிதாவிடம் போகாமல் திட்டமிட்டு தடுத்துள்ளது. இதற்கு வசதியாகவே நேர்மையான அதிகாரியாக அறியப்பட்ட கூடுதல் டிஜிபி ராஜேந்திரனை உளவுத்துறை பொறுப்பிலிருந்து திட்டமிட்டு அகற்றியுள்ளனர். அவருக்குப் பதில், ஐஜியான பொன்.மாணிக்கவேலை கொண்டு வந்துள்ளனர்.

பொன்.மாணிக்கவேல் உளவுத்துறை தகவல் எதையும் நேரடியாக ஜெயலலிதாவுக்குக் கொண்டு போகவே இல்லை என்கிறார்கள். மாறாக சசிகலாவிடமே நேரடியாக உளவுத் தகவல்களை கொடுத்து வந்துள்ளார். இதில் சந்தேகம் வந்து விடக் கூடாது என்பதற்காகவே மாலைக்கு மேல் ஜெயலலிதாவை யாரும் சந்திக்காத வகையில் திட்டமிட்டு ஜெயலலிதாவையே குழப்பி வைத்துள்ளனர்.

இதனால் மாலைக்கு மேல் ஜெயலலிதாவை உளவுத்துறையினர் மட்டுமல்லாமல் யாருமே தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், கட்சித் தலைவர்கள் என யாருமே ஜெயலலிதாவை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அத்தனை பேருமே சசிகலாவை பார்க்க வேண்டிய நிலையை செட்டப் செய்து உருவாக்கியுள்ளனர். அதாவது திட்டமிட்டு செய்துள்ளனர்.

இதெல்லாம் ஆரம்பத்தில் ஜெயலலிதாவுக்குப் புரியவில்லை என்கிறார்கள். பொன்.மாணிக்கவேலின் செயல்பாடுகள் குறித்து ஜெயலலிதாவுக்குச் சந்தேகம் வந்தபோதுதான் நடந்தது, நடக்கிறது, நடந்து கொண்டிருப்பது என்ன என்பது லேசாக அவருக்குப் புரிந்திருக்கிறது. இதனால்தான் பொன்.மாணிக்கவேலை அவர் தூக்கினார்.

இதையடுத்து சசி தரப்பில் என்ன நடக்கிறது என்பதை அவர் சற்று சீரியஸாகவே கண்காணிக்க ஆரம்பித்தார். அப்போதுதான் தன்னைச் சுற்றி எவ்வளவு பெரிய சதி வலை பின்னப்பட்டுள்ளது என்பது அவருக்குப் புரிந்து அதிர்ந்திருக்கிறார். அதாவது கடந்த 6 மாதமாக தான் பெயரளவுக்கே முதல்வராக இருந்திருப்பதையும், உண்மையில் நிர்வாகத்தில் முழு அளவில் சசிகலாவே தலையிட்டு வந்திருப்பதும் அவருக்குப் புரிந்திருக்கிறது.

இதையடுத்து சசிகலாவுக்கு நெருக்கமான மூத்த ஐஏஎஸ் அதிகாரி பன்னீர்செல்வத்தை திட்ட செயலாக்கல் துறை செயலாளர் பதவியிலிருந்து தூக்கினார். இந்தத் துறைதான், அதிமுக அரசின் இலவச திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்த இலவசத் திட்டங்களை இந்த துறை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனது குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவரான பன்னீர்செல்வத்தை வைத்து பெரிய அளவில் விளையாடியுள்ளார் சசிகலா என்கிறார்கள். மேலும் பன்னீரை வைத்து நடராஜனும் பெருமளவில் காரியங்கள் சாதித்துள்ளாராம். பல முக்கிய நியமனங்களில் தனக்கு வேண்டியவர்களை போட்டிருக்கிறார் நடராஜன் என்கிறார்கள்.

மேலும் தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கியிடமே சசிகலா தரப்பு நேரடியாக உரச, விஷயம் ஜெயலலிதாவுக்கு போயுள்ளது. சாரங்கியே இதுகுறித்து நேரடியாக புகார் தர கோபமான ஜெயலலிதா, பன்னீர்செல்வத்தைத் தூக்க முடிவு செய்தார். இதை உணர்ந்து பன்னீரே பதவியை விட்டு போய் விட்டார்.

மொத்தத்தில் ஆட்சியைப் பிடிக்கும் சதி, அவர்களை மீறி நாம் நடந்து விடக் கூடாது என்று நடராஜனுடன் சேர்ந்து சசிகலா போட்ட திட்டம் உள்ளிட்டவைதான் ஜெயலலிதாவின் விஸ்வரூப கோபத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

போயஸ் தோட்டத்தை மையமாக வைத்து நடந்துள்ள இந்த ரகசிய செயல்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

நன்றி தட்ஸ் தமிழ்

Comments

 1. இன்னும எத்தனை ரகசியங்களோ சொல்லுங்கள். நன்றி

  ReplyDelete
 2. எவ்வளவு பெரிய சதி...?
  எல்லாம் சனிப் பெயர்ச்சி மகிமை...

  ReplyDelete
 3. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  www.ChiCha.in

  www.ChiCha.in

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2