எம்ஜிஆர்... ஒரு நிகரில்லா மனிதரின் நினைவு நாள்!

உன்னை நம்பி எம்புள்ளைய படிக்க வச்சேன்... நீ வேலை தருவியா மாட்டியா?' - ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து கோபத்துடன் ராமாவரம் தோட்டத்துக்கு வந்து, எந்தக் கட்டுக்காவலுமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்து எம்ஜிஆரிடம் நேருக்கு நேர் சண்டை பிடிக்கிறார் ஒரு தந்தை. அதைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்ட எம்ஜிஆர், 'போங்க... முதல்ல சாப்பிட்டுவிட்டு வாங்க... பேசலாம்' என்கிறார். ஆனால் அந்த தந்தை கோபம் தணியாமல், 'இல்ல, நீ எனக்கு பதில் சொல்லு. எம்புள்ளைக்கு வேலை தருவியா மாட்டியா?'

'போய் சாப்பிட்டுவிட்டு வாங்க. அடுத்த மாசம் உங்க கையில அரசாங்க சம்பளம் இருக்கும்' என மீண்டும் அதே மாறாத புன்னகையுடன் தலைவர் சொல்ல, அதன் பிறகு சமாதானமாகி சாப்பிட்டுவிட்டு வருகிறார் அந்த பெரியவர்.

உடனே, அவரிடம் விவரங்களை வாங்கிக் கொண்ட எம்ஜிஆர், கையில் ஐந்நூறு ரூபாய் கொடுத்து, பத்திரமாக அவரை பஸ் ஏற்றி அனுப்புமாறு உதவியாளருக்கு கட்டளை இடுகிறார். அன்று அவர் தமிழகத்தின் முதல்வர்... அதுவும் இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கிறார்!

அடுத்த மாதம் மீண்டும் அதே தந்தை ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார். இந்த முறை அவர் கையில் மாலை, தேங்காய், பழங்கள்... கூடவே அரசாங்க சம்பள கவர். புன்னகையுடன் அவரை வரவேற்ற எம்ஜிஆர், இப்போதும் அவரை சாப்பிட வைக்கிறார். தாம் கொண்டு வந்ததை எம்ஜிஆர் என்ற கடவுளின் முன் வைத்து கும்பிட்டுவிட்டுப் போகிறார் அந்த தந்தை.

அந்தக் குடும்பம் முதல் முதலாகப் பெற்ற அரசு சம்பளம் அது. இன்றும் அந்தப் பெரியவர் இருக்கிறார். அவர் மனசுக்குள், அந்த குடும்பத்துக்குள், அவர்கள் பூஜையறையில் அதே ஈரத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்ஜிஆர். இப்படி நிறைய தந்தைகள், குடும்பங்கள் தமிழ்நாட்டில் உள்ளன!

இன்றைக்கு ஒரு மாநில முதல்வரை யாராவது இப்படிச் சந்தித்துவிட முடியுமா... உரிமையாக சண்டை போட்டு தனக்கு வேண்டியதைப் பெற முடியுமா... அல்லது இதையெல்லாம் அனுமதிக்கும் பெரிய மனசுதான் யாருக்காவது வருமா?

மனிதருள் புனிதர் என்ற பெயர் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ.... சமகால சரித்திர நாயகரான புரட்சித் தலைவர், பொன் மனச் செம்மல், மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு மிகப் பொருந்தும்... அவர் கருணைப் பார்வையில் நல்ல கல்வியும் வளமான வாழ்க்கையும் பெற்றவர்கள் எண்ணிக்கை கொஞ்சமல்ல.

ஒரு மனிதன் கடவுளை வேண்டுவது பெரும்பாலும் இந்த இரண்டிற்காகவும்தான். அந்த வகையில் வாழ்ந்தபோதே பலருக்கும் கடவுளாகத் திகழ்ந்தவர் பொன்மனச் செம்மல். தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் மத்தியில் தமிழனுக்கு தனி நாடு அமையவே பாடுபட்ட புரட்சியாளர் இந்த பெருமகன்!

அவரைப் பற்றி ஏதாவது சொல்லத் தொடங்கினால்... அல்லது எழுத ஆரம்பித்தால் கண்களை நீர் மறைக்கிறது. இந்த வாழ்நாளில் இன்னொரு முறை இப்படியொரு மனிதரின் அருள் பார்வை கிடைக்குமா? மக்களை மட்டுமே நினைத்த ஒரு தலைவர் கிடைப்பாரா என்ற ஏக்கத்தின் விளைவு அது!

'என் மனதை நானறிவேன்.. என் உறவை நான் மறவேன்... எதுவான போதிலும் ஆகட்டுமே' என நெஞ்சில் உரமும் நேர்மைத் துணிவும் கொண்டு தமிழருக்காக பாடுபட்ட தலைவர் அவர்.

பெருந்தலைவர் காமராஜருக்குப் பின் கல்வியின் அருமையை உணர்ந்த ஒரே தலைவர் எம்ஜிஆர்தான். இன்றைய முதல்வர்கள் தனியார் கல்வி கொள்ளையர்களை மட்டுமே ஊக்கப்படுத்துகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் காலத்தில் மட்டும் திறக்கப்பட்ட அரசுப் பள்ளிகள் 47000!

புதிய அரசுக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள், தமிழுக்கென்று தனிப் பல்கலைக் கழகம், பெண்களுக்கு தனி பல்கலைக்கழகம் என அவர் செய்த கல்விப் புரட்சிக்கு நிகரில்லை.

எம்ஜிஆர் என்றவுடன், தமிழகத்தில் உள்ள படித்தவர், பாமரர், விமர்சகர், பத்திரிகையாளர் என அத்தனை பேருமே ஏதோ ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை- நினைவைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.

எம்ஜிஆர் எனும் பெருமழை தந்த ஈரம் இன்னும் கூட வற்றாமல் இருப்பதற்கு சான்று அது!

எம்ஜிஆர் என்ற அரசியல்வாதியை விமர்சித்தவர்கள் கூட, எம்ஜிஆர் என்ற ஈகைப் பெருந்தகையாளரை மனமார வாழ்த்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். இன்று அவரை விமர்சிக்கும் துணிச்சல் எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது. காரணம், மக்கள் தங்கள் மனங்களில் அவருக்குக் கொடுத்திருக்கும் சிம்மாசனம் அத்தகையது!

வாழ்ந்த போதும், வாழ்ந்து மறைந்து பின்னும் வாழ்வு தரும் வள்ளல் என்றால், அவர் எம்ஜிஆர் மட்டுமே. வள்ளல்களுக்கு வயதில்லை... என்றுமே வாழ்பவர்கள் அவர்கள்!

(இன்று டிசம்பர் 24 புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நினைவு நாள்)

-எஸ்எஸ்

நன்றி  தட்ஸ் தமிழ்

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2