'உச்சிதனை முகர்ந்தால்'... - சிங்கள வெறியர்களால் சிதைக்கப்பட்ட ஒரு ஈழத்துச் சிறுமியின் கதை!


ஈழப்போரில் தமிழ்ப் பெண்கள், இளம் சிறுமிகளுக்கு எதிராக சிங்கள ராணுவம் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை கொஞ்சமல்ல.

பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாமல் மடிந்த சோகங்கள் சொல்லி முடியாதவை.

அத்தகைய சோகக் கதைகளில் ஒன்றுதான் உச்சிதனை முகர்ந்தால் என்ற தலைப்பில் படமாக வருகிறது. தமிழ் உணர்வாளரும் காற்றுக்கென்ன வேலி போன்ற மாற்று சினிமா படைப்பாளியுமான புகழேந்தி தங்கராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

தமிழீழத்தில் சிங்கள ராணுவத்தால் சூறையாடப்பட்ட 13 வயது தமிழ்ச் சிறுமியின் கதைதான் இந்தப் படம். நீனிகா என்ற சிறுமி இந்த வேடத்தில் நடித்துள்ளார்.

இந்தப் பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்துக் காத்த தம்பதியர்களாக சத்தியராஜும் சங்கீதாவும் நடித்துள்ளனர். சீமான், நாசர், லட்சுமி ராமகிருஷ்ணன் என தேர்ந்தெடுத்த நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களைச் செய்துள்ளனர்.

ஈழத்தின் துயரங்களுக்கு இந்தியாவும் ஒரு காரணம் என்பது படத்தில் மறைபொருளாக சுட்டிக்காட்டப்பட்டிருப்பதால், இந்தப் படம் சென்சாருக்குப்போனபோது, ஏகப்பட்ட பிரச்சினைகள், வெட்டுக்களைச் சந்திக்க நேர்ந்தது. இறுதியில் யு ஏ சான்றுடன் வெளியாக அனுமதிக்கப்பட்டது.

இதையெல்லாம் விட மிக முக்கியம், இந்தப் படத்துக்கு வணிக சினிமாவில் முன்னணியில் உள்ள ஜெமினி பிலிம் சர்க்யூட் ஆதரவளித்திருப்பது. படத்தை தங்கள் பேனரிலேயே ஜெமினி நிறுவனம் விநியோகிக்கிறது.

வரும் 16-ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளி்ல் உச்சிதனை முகர்ந்தால் படம் வெளியாகிறது.

தன் இனத்துக்கு நேர்ந்து கொடுமைகளை திரும்ப நினைத்துப் பார்ப்பது, அந்த சோகத்தை நினைத்து கண்ணீர் விட மட்டுமல்ல, இனவிடுதலையின் அடுத்த நகர்வு குறித்த விழிப்புணர்வையும் கோபத்தையும் நீர்த்துப் போகாமல் இருக்கச் செய்யவுமே.

அந்த வகையில் உச்சிதனை முகர்ந்தால் தமிழர் வாழ்வில் முக்கிய சினிமாவாக அமையும் என்கின்றனர் தமிழ் உணர்வாளர்கள்!

நன்றி தட்ஸ் தமிழ்

Comments

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா?