பசுமை நிறைந்த நினைவுகள் 5
பசுமை நிறைந்த
நினைவுகள் 5
ஆசான பூதூர் ஆரம்ப
பள்ளி கற்றுக் கொடுத்தவை ஏராளம்! குக்கிராமம் தான்!கடும் மழை பெய்தால் ஊருக்கு வர
வழி இருக்காது. ஓர் ஆசிரியர் பள்ளி! ஆசிரியர் திடீரென விடுப்பு எடுத்தால் பள்ளி
விடுமுறைதான்! இப்படி எல்லாம் இருந்தபோதும் அந்த பள்ளி எனக்கு நல்ல போதனைகளை
கற்றுத் தந்தது. நல் ஒழுக்கங்கங்களையும் கற்றுத் தந்தது. ஆசிரியை திருமதி
ஜம்பகவல்லி எங்கள் குடும்பத்திற்கு நன்கு பழக்கப்பட்டவர் என்பதற்காக எனக்கு எந்த
சலுகையும் அளிக்க வில்லை! நன்குபாடங்களை போதித்தார்.அத்துடன் ஒழுக்கங்களையும்
போதித்தார்.
அதற்கு ஒரு உதாரணமான நிகழ்ச்சியை கூறுகிறேன்.
ஒரு சமயம் அவர் எங்கள் இல்லத்திற்கு வரும்போது மண்ணால் செய்யப்பட்ட சிறு அடுப்பு
ஒன்றை வைத்து விளையாடிக் கொண்டிருந்தேன். அதை அவரிடம் பெருமையாகவும் காண்பித்தேன்.
மறு நாள் பள்ளியில் மாலை வேளையில் கணக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். வாய்
கணக்காக எதோ இரண்டு எண்களை கழித்துக் கூறும்படி என்னிடம் கேட்டார். என்னால்
உடனடியாக விடை கூறமுடியாமல் விழித்தேன்.பிரம்பை எடுத்து விளாசி விட்டார். பொட்டை
பயலாட்டும் அடுப்ப எடுத்துகிட்டு விளையாடு! சாதாரண கழித்தல் தெரியலை!
படிச்சாத்தானே வரும் என்று கண்ணாபின்னாவென்று ஏசவும் செய்தார்.
எப்படியோ தப்பித்தால் போதுமென்று அன்று
அவரிடமிருந்து மீள்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. படிப்பில் இவ்வளவு
கெடுபிடி செய்வாரே தவிர கலை ஆர்வம் மிக்கவர் பள்ளி ஆண்டுவிழா கலை நிகழ்ச்சிகளை
அருமையாக நடத்துவார்.
நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது நடந்த
ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் ஆசிரியர் வேடமும், கிளி வேடமும் போட்டிருக்கிறேன்.
அவரின் ஆர்வத்திற்கு ஊராரும் அதிகாரிகளும் ஒத்துழைக்க ஆண்டு விழா அருமையாக
நடந்தேறியது. ஆனால் எதிர்பாராத நிகழ்ச்சியாக தலைமை ஆசிரியர் கையில் பிடித்திருந்த
மைக் வழியாக கரண்ட் பாய்ந்து ஷாக் அடித்துவிட்டது. ஆனால் பெரும் விபரீதம் எதுவும்
நடக்கவில்லை. முதலுதவி சிகிச்சைகள் அளித்த பின் விழா சிறப்பாக நடந்தேறியது.
அப்போது இலங்கை தமிழர்களின் பிரச்சனை விசுவரூபம் எடுத்த காலம் தமிழக முதல்வராக
எம்.ஜி.ஆர் பதவி வகித்த காலம். இலங்கைத் தமிழர்களுக்காக ஆசிரியர்களும்
போராட்டத்தில் குதித்தனர்.
உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு
சிறையும் சென்றனர். அந்த சமயங்களில் எங்கள் ஆசிரியரும் போராட்டங்களில் கலந்து
கொண்டு வந்துள்ளார். பின்னர் அதை அவர் விவரிக்கும் போது சுவாரஸ்யமாக இருக்கும்.
சில சமயம் அவர் மெடிக்கல் லீவ் போட்டுவிட எங்களுக்கு கஷ்டமாக இருக்கும். அருகில்
உள்ள பெரும்பேட்டில் உள்ள பள்ளியில் உள்ள ஆசிரியர்களில் ஒருவரை இன்சார்ஜாக
அனுப்புவர்.
பெரும்பாலும்,முனுசாமி ஆசிரியர், வேதவல்லி
என்ற ஆசிரியை, கங்காதரன் ஆசிரியர் மூவர்தான் இங்கு வருவார்கள். இதில் ஆசிரியர்
முனுசாமி உள்ளூர்க் காரர். அக்காலத்தில் ஹையர் கிரேடு செகண்டரி கிரேடு என்ற முறை
ஆசிரியர்களிடையே இருந்தது. இப்போது உள்ளதா என்று தெரிய வில்லை!
இதில் எங்கள் ஆசிரியர் செகண்டரி கிரேடு
முடித்தவர். முனுசாமி ஆசிரியர் ஹையர் கிரேடுதான் முடித்தவர். அதாவது அந்த காலத்து
எஸ் எஸ்.எல்.சி படிப்பு பெயிலாகி ஆசிரியர் பயிற்சி முடித்து பணிக்கு சேர்ந்தவர்.
உள்ளூர்க்காரர். முதலியார் வகுப்பை சேர்ந்தவர்.
இவர் பணிக்கு வந்தால் பாடங்கள் ஏதும்
நடத்தமாட்டார். முன்பே சொல்லிக் கொடுத்தவைகளை ரிவிசன் செய்யவைப்பார். எண்களை
எழுதச் சொல்வார். வாய்ப்பாடு மனனம் செய்யவைப்பார். மதிய வேளைகளில் சேரில்
அமர்ந்தபடி ஒரு குட்டித் தூக்கமும் போடுவார். மாணவர்களின் இரைச்சல் அவருக்குத்
தாலாட்டு போல.
பல
பிள்ளைகளுக்கு இவரைக் கண்டாலே ஆகாது. அவரது முதுகுக்கு பின்னால் சேட்டைகள்
செய்வார்கள்.
வேதவல்லி ஆசிரியை ஒரு கைத்தொழில் ஆசிரியை!
இவர் வந்தால் சில கைத்தொழில்களை கற்றுத் தருவார். ஆனால் இவர் ஒரு நாள் அல்லது இரு
நாட்கள்தான் பள்ளிக்கு வருவார். அதற்குள் வேறு நபர் வந்துவிடுவார்.
பள்ளிக்கு
பின் புறம் மண்பாண்டத் தொழிலாளிகளின் வீடுகள் இருக்கும் ஜன்னல் வழியாக பார்த்தால்
அவர்கள் பாணை செய்வது தெரியும்.
சுழலும் சக்கரத்தில் மண்ணை குழைத்து வளைத்து
பானை செய்யும் அழகே தனி! என்னுடைய நண்பன் சங்கரும் ஒரு மண்பாண்டத் தொழிலாளியின்
மகனே! இன்றைய அவசர யுகத்தில் மண்பாண்டங்கள் மறைந்து வருகின்றன. சங்கரும் இப்போது
டைலராக இருக்கிறான்.
என் பாட்டி வீட்டில் அன்று
மண்பாண்டங்களில்தான் சமையல் நடந்தது. சட்டியில் வைக்கும் சாம்பாரும் ரசமும் தனி சுவையாக
இருக்கும். அடிபிடிக்காது பயன்படுத்த எளிதாகவும் இருக்கும். இன்று போல் அன்று கேஸ்
அடுப்புகள் கிடையாது. விறகு அடுப்புகளும் அவசரத்திற்கு என மண்ணெண்ணெய்
நாடாதிரியில் எரியும் அடுப்புகளுமே இருந்தன.
ஈர விறகுகள் எரியாமல் அடம் செய்யும்! புகை
மண்டும்! சமையலறை புகை மண்டிக் கிடக்கும். ஆனாலும் சுவையான உணவு கிடைக்கும். பழம்
சாதம் மிகவும் சுவையாக இருக்கும். பெரும்பாலும் காலை உணவு பழம் சாதமே! பொன்னி
சிறுமணி போன்ற அரிசிகள் சாதம் வைக்க பயன்பட்டன. அவைகளின் சுவை வேறு இப்போது
கிடைக்கும் அரிசிகளின் சுவை வேறு.
பழைய சாதத்தில் மோர் ஊற்றி பிசைந்து உப்பு
போட்டு தொட்டுக் கொள்ள மாங்காய் ஊறுகாய் அல்லது மோர் மிளகாய் தருவார் பாட்டி சில
சமயம் கிச்சலிக்காய் ஊறுகாயும் உண்டு அதை ஒரு தட்டு உண்டுவிட்டு தட்டு நிறைய நீராகாரம் குடித்து முடித்தால்
வயிறு நிரம்பி விடும். மதியம் வரை சுகமாக இருக்கும்.
பாட்டியின் கைப்பக்குவத்தில் எனக்கு பிடித்த
இன்னொரு சுவையான பலகாரம் தவளடை என்பது. அரிசி நொய்யில் செய்யப்படும் இது
இட்லியைப்போல மூன்று மடங்கு சைசில் இருக்கும். அரிசி நொய்யில் மிளகு சீரகம் பொடி
செய்து போட்டு தேங்காய் துறுவிப் போட்டு வேகவைத்து அடையாக தட்டி அதை இட்லி
பானையில் எண்ணெய் விட்டு மீண்டும் வேக விடுவார்கள் ஒரு புறம் மொறு மொறுவென்றும்
மறுபுறம் மிருதுவாகவும் இருக்கும். ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் சாப்பிட
முடியாது. வயிறு நிறைந்துவிடும்.
அவ்வளவு சுவையான பண்டம் அது. பாட்டியின் கைப்
பக்குவத்தில் எனக்கு பிடித்த இன்னொரு உணவு ஆருத்ரா அன்று செய்யும் உக்களி! இது
இனிப்பு பண்டம்! இது இரண்டும் இப்போது எனக்கு கிடைப்பதில்லை! என் அன்னையை செய்ய
சொன்னாலும் செய்வதில்லை! செய்தாலும் அந்த பக்குவத்தில் வருவதில்லை!
ஆசான பூதூரில் வீட்டில் பூனைகளும் நாய்களும்
நிறைய வளர்த்து வந்தனர். வீட்டில் எலி தொல்லையும் உண்டு அதனால் பூனைகளை வளர்க்க
ஆரம்பித்தனர். ஒரு காலத்தில் வீட்டில் பூனை பண்ணையே என்று சொல்லும் அளவிற்கு
இருபது பூனைகள் வரை இருந்தது.
பூனை குட்டிகளோடு விளையாடுவது எனது பொழுது
போக்காகவும் இருந்தது. இரவில் அவை எங்களுடன் படுக்கையில் படுத்துக் கொள்ளும்
பொல்லாத பூனைகளான அவை சில சமயம் படுக்கைகளில் மலம் கழித்துவிடுவதும் உண்டு!
அப்போது பாட்டி புலம்பிக் கொண்டே படுக்கைகளை அலசிப் போடுவார். இந்த பூனைப் பாசம்
பின்பு என்னைத் தொற்றிக் கொண்டு நானும் வீட்டில் பூனை வளர்க்க ஆரம்பித்தேன்.
மீண்டும் நாளை!
தங்கள்
வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து
பிரபலப்படுத்தலாமே!
புதிய தலைமுறைக்கு புதிய அனுபவம்..
ReplyDelete