தேவர்களின் வைகறைப் பொழுதான மார்கழி மாதம்

மாதங்களில் நான் மார்கழியாக இருப்பேன் என்று பகவத் கீதையில் கண்ணன் அருளியிருக்கிறார். அத்தகைய பெருமைக்குரிய மார்கழி மாதம் சனிக்கிழமை பிறக்கிறது. தட்சிணயனத்தின் கடைசி மாதமாக விளங்கும் மார்கழி மாதத்தின் பெருமைகளை தெரிந்து கொள்வோம்.

வைகறைப் பொழுது

மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒருநாள் ஆகும். இந்த ஒருநாளின் வைகறைப் பொழுதாக மார்கழி அமைகிறது. உடல் சுறுசுறுப்பும், உள்ளத் தெளிவும் நிறைந்த வைகறைக் காலை வழிபாடு எப்போதும் சிறந்தது. எனவே வைகறைப் பொழுதான மார்கழி, தேவர்களை வழிபடுவதற்கு மிகப் பொருத்தமான மாதம் என்பது இந்த மாதத்தின் சிறப்பாகும்.

மார்கழி மாதத்தில் கன்னிப்பெண்களுக்குரிய மார்கழி நோன்பு, பெருமாளுக்குரிய வைகுண்ட ஏகாதசி, சிவனுக்குரிய திருவாதிரை, மற்றும் பழையன கழியும் போகிப்பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.

பிரம்ம முகூர்த்தம்

அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை உள்ள காலம் பிரம்ம முகூர்த்தம் எனப்படுகிறது. வழிபாட்டுக்கு ஏற்ற காலமும் இதுவே. இந்த நேரத்தில் ஓசோன் வாயு நில உலகத்தில் மென்மையாகப் படர்ந்து பரவுகிறது. இது உடலுக்கு நலம் தரும்; புத்துணர்ச்சி தரும். உள்ளத்துக்கு இதம் தரும்; புதுக் கிளர்ச்சி தரும். மார்கழி விடியற்காலையில், ஓசோன் வாயு நிலவுலகத்தில் சற்று அதிகமாகப் பரவுகிறது. இதன் காரணமாகவே பண்டைய தமிழர்கள் மார்கழி விடியற் காலையில் நோன்பிருந்து இறைவனை வணங்கினர்.

சரணாகதி தத்துவம்

மார்கழி மாதத்திற்கு சூன்ய மாதம் என்ற பெயரும் உண்டு சூன்யம் என்றால், ஒன்றுமில்லாதது எனப் பொருள். நம் வாழ்க்கை ஒன்றுமில்லாதது, நிலையற்றது. இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி கொள்ள வேண்டுமானால், சரணாகதி எனும் உயர் தத்துவத்தை கடைபிடிக்க வேண்டும்.

மார்கழி மாதத்தை, “மார்கசீர்ஷம்’ என்று வடமொழியில் சொல்வர். ‘மார்கம்” என்றால், வழி – “சீர்ஷம்’ என்றால், உயர்ந்த – “வழிகளுக்குள் தலைசிறந்தது’ என்பது இதன் பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது. இறைவனை அடையும் உயர்வழியே சரணாகதி. “உன்னைத் தவிர யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்; நீ வந்து என்னை ஆட்கொள்…’ என, இந்தப் பூமியில் பிறந்த ஆண்டாள், திருமாலைச் சரணடைந்தாள்.

மருத்துவ நூல்களில் மார்கழியைப் பீடை மாதம் என்று குறிப்பிடுகின்றன.

மார்கழியின் பனிக்குளிர்ச்சி சிலருக்கு நோய்த் துன்பங்களைத் தரலாம். எனவே, இது பீடை மாதமாகலாம். பீடு-பெருமை. பன்னிரு மாதங்களில் மிக்க பெருமையை உடையது பீடை மாதம் என்று மற்றொரு பொருளும் கூறலாம். பல காரணங்களால் மார்கழி பெருமையுடைய மாதம்.

மார்கழிப் பாடல்கள்

திருப்பாவை ஆண்டாள் இயற்றியது வைணவத் தொடர்புடையது. திருவெம்பாவை மாணிக்கவாசகர் இயற்றியது; சைவத் தொடர்புடையது. இந்த

இரண்டும் பாவை நோன்பு அல்லது மார்கழி நோன்பினைப் பாடுகின்றன.

மார்கழியில், திருப்பாவை, திருவெம்பாவை, தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிய திருப்பள்ளி எழுச்சி, மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளி எழுச்சி ஆகிய நான்கு நூற்பாடல்களை வீடுகளிலும், கோயில்களிலும் பாராயணம் செய்கின்றனர். மார்கழியில், சிறப்பாக பாராயணம் செய்ய வேண்டும் என்ற பெருமை இந்த நான்கு நூல்களுக்கே உண்டு.இவை தவிர வைணவக் கோயில்கள் சிலவற்றில் மார்கழியில் ராப்பத்து, பகல் பத்து என்ற முறையில் நாலாயிர திவ்ய பிரபந்தம் முழுவதையும் பாராயணம் செய்கின்றனர்.

நல்ல வாழ்க்கைத்துணை

மார்கழி நோன்பு முழுக்க முழுக்க கன்னிப்பெண்களுக்கே உரியது. விடியலுக்கு முன் எழுந்து ஆற்றில் நீராடி நல்ல கணவன் கிடைக்க பாவை நோன்பு நோற்கின்றனர். பாவையை, வைணவக் கன்னியர்கள் கவுரி தேவியாகவும், சைவக் கன்னியர்கள் பார்வதி தேவியாகவும் போற்றி வழிபடுகின்றனர். பாவைப் பாடல்களைப் பாடி வணங்குகின்றனர்.

வாசல் நிறையும் கோலங்கள்

மார்கழி மாதம் வந்து விட்டாலே இளம் பெண்கள் வாசலை அடைத்து தெருவெங்கும் கோலமிடுகின்றனர். செம்மண்ணைப் பூசி அலங்கரித்து கோலத்தின் நடுவே ஒருபிடி சாணத்தை வைத்து அதில் பூசணிப் பூ அல்லது அருகம்புல்லைச் சூட்டுகின்றனர். விளக்கேற்றுகின்றனர்.

பூசணிப் பூவின் மஞ்சள் நிறம், மங்கலத்தின் சின்னம். கோலத்தின் வெண்மை-பிரம்மன்; சாணத்தின் பசுமை-விஷ்ணு; செம்மண்ணின் செம்மை-சிவன். முற்றத்திலுள்ள வண்ணங்கள் மூன்றும் மும்மூர்த்திகளை நினைவுபடுத்துகின்றன. மார்கழி மாதத்தில் எங்கும் பக்தி; எதிலும் தெய்வீகம் இவை அனைத்தும் இந்த மாதத்தின் சிறப்புகளாகும்.

நன்றி தட்ஸ் தமிழ்

Comments

  1. பகிர்விற்கு நன்றித் தோழரே!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2