பசுமை நிறைந்த நினைவுகள் 4

பசுமை நிறைந்த நினைவுகள் 4

பள்ளிச் சுற்றுலா சென்றது குறித்து நேற்று கூறியிருந்தேன் அல்லவா? அந்த பள்ளியில் படித்த போதுதான் அதிக முறை சுற்றுலா சென்றோம். அதாவதுஐந்தாம் வகுப்பு படிக்கும் வரையில் குறைந்தது மூன்று முறை சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்றிருந்தார் அந்த ஆசிரியர். ஆசிரிய பணியை ஆர்வமுடன் திறம்பட செய்தவர் திருமதி ஜம்பக வல்லி. இப்போது ஓய்வு பெற்ற போதிலும் ஒரு தனியார் பள்ளியின் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். இப்போதெல்லாம் சுற்றுலாவிற்கு அழைத்து செல்வதே கிடையாது. சில பள்ளிகள்தான் ஆர்வமுடன் சுற்றுலா ஏற்பாடுகளை செய்கின்றன. ஆனால் முப்பது வருடங்கள் முன்னதாக ஒரு குக்கிராமத்தின் பள்ளி ஆசிரியை தனியாக ஒரு இருபது மாணவர்களை சுற்றுலா அழைத்துச் சென்றது மறக்க முடியாத ஒர் நிகழ்வு.
   மற்றைய ஆசிரியர்கள் அனைவரும் கூட இந்த ஆசிரியர் மீது பொறாமைப்பட்டனர். அது இந்த சுற்றுலாவிலேயே தெரிந்தது.மகாபலி புரம் செஞ்சிகோட்டை, திருக்கழுகுன்றம் சாத்தனூர் அணை, படாளம் சர்க்கரை ஆலை வேடந்தாங்கல் முதலிய இடங்களை அந்த சுற்றுலாவில் கண்டு களித்தோம். மிகவும் சிறு வயது என்பதால் பல விசயங்களை நினைவு கூற முடியவில்லை! படாளம் சர்க்கரை ஆலையில் எவ்வளவு சர்க்கரை வேண்டுமானாலும் சாப்பிடு என்று ஒரு தொழிலாளி சர்க்கரையை அள்ளிக் கொடுத்ததும், வேடந்தாங்களில் அந்த ஏரிக்கரையின் மீது சென்றவாறு பறவைகளை ரசித்ததும். சாத்தனூரில் மாலை பொழுதில் குளிரில் விரைத்தவாரே அங்கிருந்த மீன் காட்சி சாலையில் கண்ணாடி வழியே கலர் கலர் மீன்களை கண்கொட்டாமல் பார்த்ததும் நினைவுக்கு வந்து இன்றும் இனிமையை தருகிறது.
    மகாபலி புரத்தில் எங்கள் ஆசிரியருக்கும் பெரும்பேடு பள்ளி ஆசிரியருக்கும் ஒரு சின்ன சச்சரவு ஏற்பட்டது.மகாபலி புரத்தில் எங்கள் ஆசிரியரின் உறவினர் இருந்தார். அவரை சந்தித்துவிட்டு வர ஆசிரியருக்கு சற்று தாமதமாகி விட்டது.அதனால் பெரும்பேடு பள்ளி ஆசிரியருக்கும் எங்கள் ஆசிரியருக்கும் சற்று வாக்குவாதம் முற்றி பின்னர் சமாதானம் ஆகினர். இந்த சுற்றுலா இரண்டு நாட்கள் கழிந்தது. பின்னர் அனைவரும் வீடு திரும்பினொம். வீட்டில் ஓய்வு எடுக்க ஒரு நால் விடுமுறை வேறு கிடைக்க செம சந்தோஷமாகிப் போனது எனக்கு!
     அந்த பள்ளியில் படித்த போது அருகில் உள்ள பழவேற்காடு பகுதிக்கு ஒரு முறை சுற்றுலா அழைத்து சென்றனர். ஆசானபூதூரில் இருந்து வஞ்சி வாக்கம் வரை நடை பயணம். ஏரிக்கரை ஓரமாக வயல் காட்சிகளை ரசித்தபடிஒரு மணி நேரம் நடந்தால் வஞ்சிவாக்கம் வரும். அங்குதான் டீச்சரின் வீடு. அங்கு சென்று ஓர் பத்துநிமிடம் ரெஸ்ட் எடுத்துவிட்டு அங்கிருந்து நடப்போம் அங்கிருந்து காட்டூர் செல்லும் கூட்டு ரோடு வரை நடந்து பின்னர் பஸ் பயணத்தில் ஓர் அரை மணியில் பழவேற்காடை அடைந்தோம்.
  பழவேற்காடு பயணத்திற்கு எங்களுடன் என்மாமா, மற்றும் ஊரிலிருந்து வில்வமணி என்ற மாமாவின் நண்பரும் வந்திருந்தார்கள். பஸ் நிலையத்தில் இறங்கியதும் மேரி மாதா கோயில் தரிசனம். அது வரை இந்து கோயில்களை மட்டும் பார்த்திருந்த எனக்கு முதல் முதலாக கிறித்துவ ஆலய தரிசனம்! மேரி மாதா குழந்தை ஏசுவுடன் காட்சி அளிக்க மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு செய்து கொண்டிருந்தனர். ஆலய மண்டபத்தில் இருபக்கமும் வரிசையாக பெஞ்சுகள் இருந்தன. அந்த ஆலயம் விசாலமாக பெரியதாகவும் எளிமையாகவும் காட்சி அளித்தது.
   அங்கிருந்து டச்சுக் கல்லறை சென்றோம். ஒரு காலத்தில் பழவேற்காடு டச்சுக்காரர்களின் துறைமுகமாக இருந்திருக்கிறது. அதற்கு சான்று கூறிக் கொண்டு இன்னமும் இருக்கிறது அந்த டச்சுக் கல்லறை பல கல்லறைகள் அருகருகே இருக்கும் அதில் ஒரு கல்லறை சுரங்கம் போல பூமிக்கடியில் இருக்கிறது. ஒரு புறம் இறங்கி மறு புறம் வரவேண்டும்.
  இதில் இறங்காதே பேய் பிடித்துக் கொள்ளும் என்று சக மாணவர்கள் பீதி கிளப்பியதில் நான் உள்ளே இறங்கவில்லை! அதற்குள் ஒரு மாணவன் துணிச்சலாக உள்ளே இறங்கி மறு வழியே வந்தான். அவன் வரும் வரை எனக்கு நெஞ்சு பக்பக்கென அடித்துக் கொண்டிருந்தது.
   அங்கிருந்து இஸ்லாமியர்களின் தர்கா ஒன்றிற்கு சென்றோம் அங்கு நிழல் கடிகாரம் ஒன்று இருந்தது. அதன் மீது நிழல் விழுவதை வைத்து துல்லியமாக நேரத்தை காட்டும். முன்னோர்களின் அறிவியலை வியந்து பார்த்துவிட்டு கடற்கரைக்குச் செல்ல கழி முகம் வந்தோம்.
   இப்போது இங்கு பாலம் கட்டப்பட்டுவிட்டது. ஆனால் அன்றோ கழிமுகம் எனப்படும் அந்த உப்பு ஏரியை கடக்க படகுகளே வழி அதுவும் துடுப்பு படகுகளே! அந்த படகுகளில் தலைக்கு இவ்வளவு என்று கட்டணம் பேசிஏறினொம். மீனவர்கள் துடுப்பு போட அருமையாக சென்றது படகு.
  பயந்த சுபாவம் கொண்ட எனக்கு திக் திக் என நெஞ்சு அடித்துக் கொண்டது. முதல் முறையாக நீரின் மேல் படகுப் பயணம். சிறிது நேரத்தில் படகு தரை தட்டியது. பெரியவங்க எல்லாம் எறங்கி தள்ளுங்க என்றனர் படகோட்டிகள்! முழங்கால் நீரில் இறங்கி பெரியவர்கள் சிறிது தூரம் படகு தள்ளினார்கள் பின்னர் கொஞ்ச தூரம் சென்றதும் படகில் ஏறிக் கொண்டனர்.
   ஒரு இருபது நிமிட பயணத்தில் பழவேற்காடு கடற்கரையினை அடைந்தது படகு! ஆசைதீர கடலில் கால் நனைத்தோம். பெரியவர்கள் கடலில் குளித்தார்கள். அங்கிருந்த ஆலமரத்தின் விழுதுகளை பற்றி ஊஞ்சல் ஆடினோம். லைட் அவுஸ் பழையது ஒன்றிருந்தது அதில் ஏறி ரசித்தோம். பின்னர் அங்கேயே உணவருந்தி மாலையில் படகுபயணத்தில் பழவேற்காடு வந்து பின்னர் பஸ் மூலம் வஞ்சி வாக்கம் வந்து அங்கு சற்று ஓய்வு எடுத்து பின்னர் ஊர்வந்து சென்றோம்.
   இந்த இரண்டு பயண அனுபவங்களும் அருமையாக இருந்தன எனக்கு! உங்களுக்கு எப்படி என்று பின்னூட்டம் அளியுங்கள்! மீண்டும் நாளை ஒரு புதிய அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபல படுத்தலாமே!

Comments

  1. உங்கள் நினைவுகளை சுவாரஸ்யமாக எழுதுறீங்க வாழ்த்துக்கள் பாஸ்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2