பசுமை நிறைந்த நினைவுகள்! பகுதி 2

பசுமை நிறைந்த நினைவுகள்! பகுதி 2

  அன்பார்ந்த வாசகர்களே  கடந்த பதிவில் என்னுடைய குழந்தை பருவ அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். இன்று அதன் தொடர்ச்சியாக சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்!
   சென்ற பதிவை படித்திட்டு கருத்திட்ட பதிவர் ம.தி.சுதா அவர்களுக்கு எனது நன்றி! பதிவு சுவாரஸ்யமாக இருப்பதாக அவர் கூறி இருந்தார். இருந்தும் இதை நிறைய பேர் படிக்க வில்லை என்பது எனக்கு வருத்தமே இது ஒன்றும் அண்ணா பெரியார், லிங்கன் போன்றோரின் வாழ்க்கை சரிதம் இல்லைதான்! இருந்தாலும் தன் படைப்பை பலர் படித்து பாராட்டும்பொழுதுதான் படைப்பாளி பெருமிதம் அடைகிறான்! அவன் மேலும் மெருகடைகிறான். சரி கதைக்கு வருவோம்!
    இனிமையாக சென்ற என் பள்ளிக்கூட வாழ்க்கையில் வில்லன் முளைத்ததாக கூறினேன் அல்லவா? அதை பார்ப்போம்! சிறு வயதில் நான் மிகவும் பயந்த சுபாவம் யாராவது ஒரு வார்த்தை உயர்த்தி கூறினாலே ஓவென்று அழுது விடுவேன்! மின் விசிறிக்கெல்லாம் பயந்து இருக்கிறேன் என்றால் பாருங்கள் அப்படி பயந்த சுபாவம் மிக்க என்னை நன்கு புரிந்து கொண்டிருந்தது ஒரு இளவட்ட கும்பல்!
  அவர்களுக்கு வேறு வேலை இல்லை! படித்து கோட்டை விட்டவர்கள்! நில புலன்களுக்கு சொந்தக் காரர்கள்! காலையில் கழனிக்கு சென்று வந்தபின் இப்படி தெருவில் அமர்ந்து போகிற வருகிற சிறுவர்களை வம்புக்கு இழுத்துக் கொண்டிருப்பார்கள்.
   இப்பொழுது நானிருக்கும் ஊரென்றால் நடப்பதே வேறாக இருக்கும் இங்கு என் தந்தைக்கு இருக்கும் தனி மதிப்பில் நானும் பங்கெடுப்பேன்! ஆனால் ஆசான பூதூர் என் தாய் மாமா ஊர்! அங்கு முதலியார்கள் வசித்து வந்தார்கள்! அவர்களின் செல்வாக்கே தனி!  அப்படி ஒரு செல்வந்தரின் மகன் தான் சுகுமாறன், அவரோடு அவரது நண்பர்கள் பாஸ்கரன்,பாலு இன்னும் சிலர்!
       இவர்கள் பொழுது போக்கு என்னை மிரட்டுவது நான் அழுவதை கண்டு சிரிப்பது! இது தினம் தோறும் வாடிக்கை ஆகி போனது!
 வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்ல இரண்டு தெருக்களை கடக்க வேண்டும்! பெரிய வீதி ஒன்றும் இல்லை!சிறிய தெருதான் ஒரு வரிசையில் 10 முதல் 11 வீடுகள் தான் இருக்கும்! இதை கடந்தால் தெருக் கோடியில் ஊர் கடைசியில் பள்ளிக் கூடம்!.
   இந்த கும்பல் பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள இரண்டாவது தெருவில் முனுசாமி வாத்தியார் வீட்டு திண்ணையில் அமர்ந்திருக்கும். நான் போகும் போது இவர்கள் இருக்க மாட்டார்கள். மதியம் உணவு இடைவேளையின் போது திரும்பும் போது அங்கிருந்து குரல் கொடுப்பார்கள்!
    டேய்! டேய்! என்றதுமே நான் வேக அடி வைக்க மறிப்பார்கள்! ஏதாவது ஏடாகூடமாய் கேட்பார்கள் நான் தெரியாது முழிப்பேன்! மிரட்டுவார்கள் நான் ஓவென்று அழுவேன்! சிறிது வேடிக்கை பார்த்துவிட்டு அனுப்பி விடுவார்கள்!
  பள்ளி எனக்கு வசந்த காலமாய் இருக்கையில் இவர்களின் மிரட்டல் இலையுதிர்காலமாக மாறி விட்டது. கரும்பாய் இனித்த பள்ளி வேம்பாய் கசக்க தொடங்கி விட்டது இவர்களின் வம்பால்!
    தாத்தா பாட்டியிடம் முறையிட்டேன்! அவர்கள் கேட்கிறேன் என்றார்கள் பெரிய இடத்து பிள்ளையாயிற்றே என்று பதவிசாக ஏம்பா சுகுமாரு!  பேரப் பிள்ளையை அழ விடறியாமே! அறியாததுப்பா! வேணாம்! என்று சொல்லிவிட்டார்கள்!
  அப்போது சும்மா இருந்த சுகுமார் அன்று மதியம் திரும்புகையில் மடக்கினான். ஏய் நில்லுடா! உன் பேரு என்ன?
  வேகமாக நடையை போட்டேன்! ஏய் ஏங்க ஓடறே! தாத்தாகிட்ட சொல்லிறீயா? சொல்லுப் போ! நாங்க என்ன பயந்து விடுவோமா? என்று மிரட்ட அழுதுகொண்டு நின்றேன் நான்.
   ஏய் அழுதா விட்டுடுவமா? ஆனா ஆவன்னா சொல்லுடா!
 சொன்னேன்! ஒண்ணு ரெண்டு தெரியுமாடா?
  தெரியாது! அப்ப என்னாத்த படிக்கிற நீ?
  அவர்கள் கேட்க அழுதேன்! அப்போது! என் பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது!
  ஏய் உங்களுக்கெல்லாம் வேற வேலையே கிடையாதா? சின்ன பையனை போட்டு மிரட்டிகிட்டு இருக்கீங்க! இவனை அழவச்சு பாக்கிறதுல அப்படி என்ன லாபமோ! என்று கடிந்து கொள்ள அவர்கள் கலைந்தனர்.
  குரல் வந்த திசை நோக்கினேன்! மாலதி நின்று கொண்டிருந்தார்! மாலதியின் அண்ணன் தான் சுகுமார்!  எனக்காக அண்ணனையே திட்டிய மாலதி!  இவங்களுக்கெல்லாம் பயப்பட கூடாது தைரியமா இருக்கணும் கண்ணை துடைச்சிக்கோ வா வீட்டுக்கு நான் கூட்டிட்டு போறேன்! என்றார்.
  கண்ணை துடைத்துக் கொண்டு அவர் கைப் பிடித்து நடக்க ஆரம்பித்தேன்!
  அப்பொழுது அவர் ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தார். நான் முதல் வகுப்பு! அவரை ஒரு அக்காவாக உணர்ந்தேன்.அன்று முதல் அவர் என் தோழியானார். அவரது தோழிகளும் எனது தோழிகளாக மாறினர்.
  நாங்கள் கோயில் குருக்கள் என்பதால் கோயில் அருகிலேயே வீடு இருக்கும் கோயிலும் வீடும் சேர்ந்தார்ப் போல மதில் சுவர் அமைந்திருக்கும். கிழக்கு பார்த்த வீடு.நீண்டு நிற்கும் வீடு அகலமில்லை! நாட்டு ஓடு வேய்ந்திருக்கும் முன்னால் திண்ண  இருக்கும் பெரிய திண்ணை கிடையாது சிறிய இரு திண்ணைகள் அதில் வலப்புற திண்ணையின் மீது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்திருக்கும் வீட்டினுள் நுழையும் போது கால் கழுவிக் கொண்டு நுழைய வேண்டும்.
   அதே போல பள்ளியில் இருந்து வந்ததும் அந்த ஸ்கூல் டிரஸ்ஸை கழட்டி தனியாக ஒரு கொடியில் போட வேண்டும் . பின்னர் கை கால் கழுவிக் கொண்டு வீட்டில் உள்ள வேறு துணியை அணிந்து கொள்ள வேண்டும். மடி ஆசாரம், என்று மிகவும் கண்டிப்பாக ஆசாரங்களை கடைபிடித்து வந்த குடும்பம் அது.
   வீட்டின் எதிரில் சிவன் கோயில்! காசி விசுவநாதர் விசாலாட்சி அம்பாள் குடி கொண்ட சிறு கோயில் அது! இரு வேளை தினமும் பூஜை! விசேசங்கள் நடக்கும் போது ஊரே திரண்டு கோயிலுக்கு வரும் என்னொத்த மாணவர்கள் கோயில் பிரகாரத்தில் விளையாடுவோம்.
   கோயிலிலும் சரி வீட்டிலும் சரி மின் விளக்குகள் கிடையாது! மண்ணெணெய் விளக்குகள் தான்! அந்த குறைந்த வெளிச்சத்திலும் கோயில் கொள்ளை அழகாக காட்சி அளிக்கும் வித விதமான பிரசாதங்கள்! புளிசாதம் தயிர் சாதம் எலுமிச்சை சாதம்சர்க்கரை பொங்கல் சுண்டல் என வினியொகம் நடக்கும். இதில் ஆருத்ரா, அன்னாபிஷேகம் எனில் இன்னும் கொண்டாட்டம் தான்! உக்களி, வடை பாயசம் எல்லாம் கிடைக்குமே!
   கோயில் எதிரே ஒரு குளம் இருந்தது. பராமரிப்பில்லாமல் ஆகாயத்தாமரைகள் மண்டிகிடக்கும் ஆனாலும் படித்துறையில் இறங்கி குளித்து விடுவார் என் பாட்டி! என் நண்பர்கள் அக்குளத்தில் மீன் பிடிப்பர் அதை நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்!
  பெண் தோழிகள் அந்த ஆகாயத் தாமரை இலைகளையும் பூக்களையும் பறித்து விளையாடுவார்கள் இப்படி இனிமையாக கழிந்தது என் இளமைக் காலம்!
 பிறகு!நாளை தொடர்கிறேனே!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

  1. enakkum asanaputhur ghapagam varudu anna nee seitha thillu mullum

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2