ஷேவாக்கை மொய்க்கும் விளம்பர நிறுவனங்கள்!

டெல்லி: தலைமுடி கொட்டியதால், விளம்பர நிறுவனங்கள் ஷேவாக்கை ஒப்பந்தம் செய்ய தயங்கின. தற்போது ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்தைத் தொடர்ந்து ஷேவாக்கை நோக்கி விளம்பர நிறுவனங்கள் பாய்ந்தோடி வரத் தொடங்கியுள்ளன. இதனால் அவரது விளம்பர வருமானம் மேலும் ரூ.10 கோடி வரை அதிகரிக்கலாம் என்று தெரிகிறது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனி நபரின் அதிகபட்ச ரன்னாக 219 ரன்கள் எடுத்து சாதனை படைத்த வீரேந்திர ஷேவாக்கை, தங்கள் கம்பெனி விளம்பரங்களில் நடிக்க வைக்க பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் ஷேவாக்கின் வருமானம் ரூ.10 கோடி அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க பேட்ஸ்மேனாக களங்கிறங்கி அதிரடியாக விளையாடி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் வீரேந்தர ஷேவாக். டெஸ்ட், ஒருநாள் போட்டி, டுவென்டி20 என்ற வேறுபாடு இல்லாமல் எப்போதும் அதிரடியாக விளையாடும் தன்மை கொண்டவர் ஷேவாக். இதனால் டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் போட்டிருக்கிறார், ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்து சாதனையின் உச்சத்தில் அமர்ந்திருக்கிறார்.

இந்த மாத துவக்கத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் 219 ரன்கள் எடுத்து ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன் எடுத்த வீரர் என்ற புதிய உலக சாதனையை படைத்தார்.

இதனால் ஷேவாக் மீது விழுந்துள்ள புதிய புகழ் வெளிச்சத்தைப் பயன்படுத்தி லாபம் காண பல முன்னணி நிறுவனங்கள், தற்போது ஷேவாக்கை தங்களது நிறுவனங்களுக்காக விளம்பரத்தில் நடிக்க வைக்க அணுகி வருகின்றன. ஷேவாக் ஏற்கனவே 10 நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிக்க 2-3 ஆண்டுகள் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த நிலையில் மேலும் சில நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய ஷேவாக் தீர்மானித்துள்ளார்.

இது குறித்து ஷேவாக்கை விளம்பரத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ள பிஎம்ஜி நிறுவனத்தின் சிஓஓ மெல்ராய் டிசோசா கூறியதாவது,

விளம்பர நிறுவனங்களுடன் நீண்டகால ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு தானும், விளம்பர நிறுவனமும் பயன் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் ஷேவாக். தொலைத்தொடர்பு, ஆட்டோமொபைல்ஸ், எண்ணெய் தொடர்பான விளம்பரங்களில் நடிக்க ஷேவாக்கிற்கு அதிக வாய்ப்புகள் வருகின்றன. இதில் அதிகபட்சமாக 15 நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிக்க ஷேவாக் ஒப்புக் கொள்வார் என்று தெரிகிறது.

ஜிகே சிமெண்ட்ஸ், நிராலா குரூப் உள்ளிட்ட நிறுவனங்களின் விளம்பரங்களில் ஷேவாக் தனியாக நடிக்கிறார். ராயல் சேலஞ்சர்ஸ், ஹீரோ மோட்டார்ஸ், பூஸ்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் விளம்பரங்களில் குழுவாக தோன்றுவார்.

இதுவரை ஒரு விளம்பர ஒப்பந்தத்தை ஏற்க ரூ.2 கோடி முதல் ரூ.2.5 கோடி வரை சம்பளமாக ஷேவாக் பெற்று வந்தார். ஆனால் தற்போது ஒருநாள் போட்டிகளில் ஷேவாக் புதிய சாதனை படைத்துள்ளதால், அவரது சம்பளம் ஒரு விளம்பரத்துக்கு ரூ.3.5 கோடியாக உயர வாய்ப்பு உள்ளது. 3 முதல் 4 நிறுவனங்கள் ஷேவாக்கை ஒப்பந்தம் செய்ய அணுகி வருகின்றன. ஆனால் டோணி, சச்சினின் விளம்பர சம்பளத்தை ஷேவாக் நெருங்குவது கடினம் என்றார்.

கடந்த 2001ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு ரிலையன்ஸ், ஜே அண்டு ஜே உள்ளிட்ட நிறுவனங்களின் விளம்பரங்களில் ஷேவாக் தனியாக தோன்றினார். அதன்பிறகு 2003-05 ஆண்டுகளில் சாம்சங், அடிடாஸ், கோக் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் விளம்பரங்களில் ஷேவாக் தோன்றினார்.

ஆனால் கடந்த 2006ல் ஷேவாக் தனது மோசமான ஆட்டத்தால் இந்திய அணியில் இருந்து சிறிது காலம் வெளியேற்றப்பட்டார். மேலும் தலைமுடி கொட்டியதால், விளம்பர நிறுவனங்கள் ஷேவாக்கை ஒப்பந்தம் செய்ய தயங்கின. தற்போது ஷேவாக்கை அணுகி உள்ள நிறுவனங்களின் மூலம் அவரது விளம்பர வருமானம் மேலும் ரூ.10 கோடி வரை அதிகரிக்கலாம் என்று தெரிகிறது.

இது குறித்து காலேஜ் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் இயக்குனர் லத்திகா கனிஞ்சா கூறியதாவது,

கிரிக்கெட் விளையாட்டில் ஏற்றம், இறக்கங்கள் இருப்பது சகஜம். ஷேவாக் தற்போது ஏறுவரிசையில் உள்ளார். இருப்பினும் சச்சின், டோணி உள்ளிட்டோரின் முக்கியத்துவம் ஷேவாகேகிற்கு கிடைப்பதில்லை. வருங்காலத்தில் ஷேவாக்கின் ஆட்டத்தை பொறுத்தே அவருக்கு விளம்பர வாய்ப்புகள் வரும் என்றார்.

நன்றி தட்ஸ் தமிழ்

Comments

Popular posts from this blog

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா?