பீமனின் கர்வம்! பாப்பா மலர்!
பீமனின் கர்வம்!
பாண்டவர்கள் ஐவரில் தான் தான் பலசாலி என்ற எண்ணம் பீமனுக்கு மேலோங்கியது. தன்னை வெல்ல உலகில் யாரும் இல்லை! தன்னால் முடியாதது எதுவும் இந்த பூமியில் இல்லை என்று மிகவும் ஆணவம் கொண்டான் அவன்.மற்ற சகோதரர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டாலும் இளையவனாக பிறந்ததால் இவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டியுள்ளதே என்று வருத்தப்பட்டுக் கொள்வான்.தன்னுடைய உடல் பலத்தில் அசாத்திய நம்பிக்கை கொண்டிருந்தான் பீமன்.
ஒருநாள் அவன் காட்டு வழியே சென்று கொண்டிருந்தான்.தான் பலசாலி என்று நிரூபிக்கும் வண்ணம் எதிர்பட்ட செடி கொடிகளை எல்லாம் பிடுங்கி எறிந்து கொண்டே வந்தான். அப்போது அவனது கால் இடறியது. தடுக்கியது வேர் என்று மகா பலசாலியான என்னையே தடுக்கிறாயா? உன்னை என்ன செய்கிறேன் பார் என்று அந்த வேரை பிடுங்க முற்பட்டான்.
பலமாக முயன்றும் அவனால் முடியவில்லை! வேர்த்து வழிய நின்றவன். இது ஏதோ சூழ்ச்சியாக இருக்குமோ என்று நினைத்துக் கொண்டான் இது கண்டிப்பாக வேர் இல்லை! வேறு ஏதோ என்று வேரின் மூலத்தை தேடினான். தொலைவில் ஒரு குரங்கு ஒன்று அமர்ந்து கொண்டிருந்ததை கண்டான். அந்த குரங்கின் வால்தான் பீமனை தடுத்தது.
பீமன் ஆணவத்துடன் ஏய் குரங்கே வாலைச் சுருட்டிக் கொண்டு உட்காரக்கூடாதா? இப்படி வழியில் வாலை போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறாயே யாராவது மிதித்து தொலைத்தால் செத்து விடுவாயே என்று எரிந்து விழுந்தான். குரங்கோ வீரனே நானொ வயதானவன்! என்னால் வாலை நகர்த்த முடியவில்லை! நடக்க முடியாமல் அப்படியே அமர்ந்துவிட்டேன்! நீதான் கொஞ்சம் வாலைத் தூக்கி சுருட்டி ஓரமாக வைத்துச் செல்லேன்! என்றது.
அதிர்ந்து போன பீமன்! இது தன் வீரத்திற்கு சவால் என நினைத்து மீண்டும் வாலைத் தூக்க முயற்சித்தான்.அவனால் இம்மி அளவு கூட வாலை அசைக்க முடியவில்லை! குரங்கு ஏளனம் செய்தது.ஏம்பா பார்த்தால் மிகப்பெரிய பலசாலியாகத் தெரிகிறாய்! வீரன் போல பேசினாய்!கேவலம் ஒரு குரங்கின் வாலைக் கூட உன்னால தூக்க முடியவில்லையே என்றது.
உடனே பீமன் நான் மலையைக் கூட பெயர்த்துவிடுவேன்!என்று தன் இரு கைகளாலும் வாலை நகர்த்த முனைந்தான்.அவன் உடல் துடித்தது. பெருமூச்சு விட்டான்! இருந்தும் இம்மிக்கூட வால் நகரவில்லை!
அப்போதுதான் அவனது அகந்தை அழிந்தது! குரங்கை வணங்கினான்! சுவாமிதாங்கள் யார்? நீங்கள் கண்டிப்பாக பெரும் பலசாலியாக இருக்க வேண்டும் என் கர்வம் அழிந்தது! என்று வணங்கி நின்றான்.
குரங்கு அனுமனாக மாறியது. பீமன் அனுமனின் கால்களில் சரணடைந்தான்.உடனே அனுமன், பீமா எழுந்திரு! உன்னை திருத்தவே இந்த நாடகம்! கர்வம் மனிதனை மிருகமாக மாற்றிவிடும்! ஒரு போதும் கர்வம் அடையக் கூடாது! வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டு! கர்வத்தை விட்டொழிப்பாயாக! புகழ் அடைவாயாக என்று வாழ்த்தினார்.
சுவாமி என்னை மன்னியுங்கள்! இனி அகம்பாவம் கொள்ள மாட்டேன்! அனைவரிடமும் பணிவாக நடந்து கொள்வேன்! என்னை ஆசிர்வதியுங்கள் என்று வணங்கினான் பீமன்!
அனுமன் ஆசி அளித்துவிட்டு மறைந்தார்!.
அறவுரை!
சிறு பஞ்ச மூலம்
பிழைத்தல் பொறுத்தல் பெருமை சிறுமை
இழைத்தீங்கு எண்ணி இருத்தல் - இழைத்த
பகைகெட வாழ்வதும் பல்பொருளார் நல்லார்
நகைகெட வாழ்வதும் நன்று
விளக்கம்} பிறன் ஒருவன் செய்த பிழை பொறுத்து கொள்ளுதல் பெருமையாகும். மற்றவன் செய்த பிழையை நினைத்து கொண்டே இருப்பது சிறுமையாகும். தான் செய்த பிழைகள் கெடுமாறு வாழ்தலும் சான்றோர் நகைப்புக்கு ஆளாகாமல் வாழ்தலும் நன்றாம்.
உங்களுக்குத் தெரியுமா?
அதிக முறை விம்பிள்டன் பட்டம் வென்ற வீராங்கணை பில்லிஜீன் கிங் அமெரிக்கா, 20 முறை
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபல படுத்தலாமே!
Comments
Post a Comment