ஓட்டுக்கு வாங்கிய பணத்தை திருப்பித்தர கவுன்சிலர்கள் முடிவு

ஓசூர்: ஓசூர் நகராட்சியில், ஒரு கோடி ரூபாய் செலவழித்து துணைத்தலைவரான பாஸ்கரன், விபத்தில் பலியானதால், துணைத்தலைவர் தேர்தலில் ஓட்டுபோடுவதற்காக, அவரிடம் வாங்கிய, 77 லட்சம் ரூபாயை அனைத்து கட்சி கவுன்சிலர்களும், ஆதரவற்ற அவரது மூன்று குழந்தைகளுக்கு திருப்பி வழங்க முடிவு செய்துள்ள சம்பவம், அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் அதிக வருவாய் உள்ள ஓசூர் நகராட்சி தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., வை சேர்ந்த பாலகிருஷ்ணாரெட்டி வெற்றி பெற்றார். ஆனால், 45 வார்டுகளில் அ.தி.மு.க., வெறும், 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதனால், துணைத்தலைவர் தேர்தலில் அக்கட்சி வெற்றி பெறுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த பரபரப்பான நிலையில் துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிட்ட, 9வது வார்டு, அ.தி.மு.க., கவுன்சிலர் பாஸ்கரன், கவுன்சிலர் தேர்தல் மட்டுமின்றி, துணைத்தலைவர் தேர்தல் வரை வெற்றிக்காக, ஒரு கோடி ரூபாய் செலவு செய்தார். குறிப்பாக துணைத்தலைவர் தேர்தலில் கட்சி பாராபட்சமில்லாமல் மொத்தம், 33 கவுன்சிலர்களுக்கு பணம் கொடுத்தார். இவற்றில், 18 அ.தி.மு.க., கவுன்சிலர்களுக்கு, தலா, 1.5 லட்சம் ரூபாயும், மற்ற கட்சி மற்றும் சுயேச்சை கவுன்சிலர்களுக்கு, 3 முதல் 4 லட்சம் ரூபாய் வரையும் மொத்தம், 77 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தார். அதனால், துணைத்தலைவர் தேர்தலில் பாஸ்கரன் எளிதாக வெற்றி பெற்றார். இந்நிலையில், துணைத்தலைவராக பதவியேற்ற ஒரு மாதத்தில் அந்த பதவி சுகத்தை கூட அனுபவிககாமல் பாஸ்கரனும், அவரது மனைவி ஜலஜாவும் கடந்த வாரம் கோவில்பட்டி அருகே நடந்த சாலைவிபத்தில் பலியாகினர்.

பாஸ்கரனுக்கு, ஷாலினி, சஞ்சய், சரன் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். சாதாரண அசோக்லேலேண்ட் தொழிலாளியாக இருந்த பாஸ்கரன், இரு ஆண்டில் கட்சியில் அசுர வளர்ச்சி பெற்று முதல் முதறையாக நகராட்சி கவுன்சிலராகி துணைத்தலைவரானார். அவர் தேர்தல் செலவுக்காக சில சொத்துகளை விற்றும், கடன் பெற்றும் கவுன்சிலர்களுக்கு வழங்கியுள்ளார். தற்போது விபத்தில் இறந்ததால், பலர் பாஸ்கரன் தனக்கு கடன் தர வேண்டியுள்ளதாக, அவரது வீட்டை முற்றுகையிட்டு வருகின்றனர். இதனால், அவரது வீடு மற்றும் அவரது சொத்துகள் கூட கைக்கு மிஞ்சுமா? என்ற பரிதாப எழுந்துள்ளது. இதனால், அ.தி.மு.க., நகராட்சி தலைவர் பாலகிருஷ்ணாரெட்டி, சூளகிரி ஒன்றிய சேர்மன் மது, ஒன்றிய பொருளாளர் சிட்டி ஜெகதீஷ் மற்றும் உள்ளூர் அ.தி.மு.க., வினர், ஆதரவற்ற பாஸ்கரன் குழந்தைகளுக்காக அவரது சொத்துகளை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், துணைத்தலைவர் தேர்தலில் ஓட்டுபோடுவதற்காக அவரிடம் பெற்ற பணத்தை மனதாபிமானமுள்ள சில கவுன்சிலர்கள், அவர்களாக முன்வந்து அந்த பணத்தை கொடுக்க உள்ளனர். அவர்களை போல, பாஸ்கரனிடம் பணம் பெற்ற அனைத்து கவுன்சிலர்களும் ஓட்டு போடுவதற்காக வாங்கிய பணத்தை அவரது குழந்தைகள் எதிர்கால வாழ்க்கைக்காக திருப்பி ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். பணம் பலம் படைத்த கவுன்சிலர்கள், உடனடியாக அந்த பணத்தை திருப்பி வழங்கவும், அந்த பணத்தை செலவு செய்த கவுன்சிலர்கள், விரைவில் வர உள்ள துணைத்தலைவர் தேர்தலில் வேட்பாளராக வரக்கூடியவர்கள் வழங்க உள்ள பணத்தை பெற்று பாஸ்கரன் குழந்தைகள் பெயரில் வங்கியில் டிபாஸிட் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

ஓசூர் நகராட்சி தலைவர் பாலகிருஷ்ணாரெட்டி கூறியதாவது: துணைத்தலைவர் தேர்தலில் ஓட்டுபோட அவரிடம் பெற்ற பணத்தை மனதாபிமானமுள்ள கவுன்சிலர்கள், பாஸ்கரன் இறந்ததும், அவர்களாகவே, அந்த பணத்தை கொடுக்க முன்வந்தனர். தற்போது, அனைத்து கவுன்சிலர்களும் பாஸ்கரனிடம் பெற்ற பணத்தை கொடுக்க முடிவு செய்துள்ளனர். வசதியுள்ள கவுன்சிலர்களிடம் உடனடியாக பெற்று கொடுக்கவும், வசதியில்லாத கவுன்சிலர்களிடம் விரைவில் வரவுள்ள துணைத்தலைவர் தேர்தலில், வேட்பாளராக வரக்கூடியவர்களிடம் இருந்து பெற்று, பாஸ்கரன் குழந்தைகள் எதிர்கால வாழ்க்கைக்காக திருப்பி ஒப்படைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார். உள்ளூர் அ.தி.மு.க., வினரிடம் இந்த மனிதாபிமான முயற்சி, அனைத்து தரப்பினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

நன்றி தினமலர்

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2