பசுமை நிறைந்த நினைவுகள்- 6



பசுமை நிறைந்த நினைவுகள்- 6

ஆசான பூதூரில் அகலம் குறைந்த அந்த நீளமான வீட்டில் பூனைகள் ஏராளமாக வசித்து வந்தன பல்வேறு நிறங்களில் பல்வேறு வயதில் அந்த பூனைகள் இருந்தன. குறைந்தது பதினைந்து முதல் இருபது பூனைகள் இருக்கும். வீட்டில் எங்கெங்கு காணிணும் பூனைகள் காட்சி தரும்.
  பூனைகள் மிகவும் சொகுசு பேர்வழிகள்! யார் மடியிலாவது படுத்துக் கொள்வதை விரும்பும்! தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொள்ள வாலை குழைத்தபடி மியாவ் மியாவ்! என்று கத்தியபடி நம்மையே சுற்றி வரும்! ஆணும் பெண்ணுமாக நிறைய பூனைகள் இருந்ததால் அடிக்கடி பூனைகள் குட்டிப்போட்டு பூனை பண்ணை என்னுமளவுக்கு பூனைகள் பெருகி விட்டது.
   வீட்டில் மீந்திருக்கும்பழைய சாதத்தை பாட்டி பூனைகளுக்கு போட்டு அதில் மோர் விடுவார். திண்று விட்டு அடுக்கியிருக்கும் நெல் மூட்டைகளின் மீதோ இல்லை தூணங்களின் மீதோ படுத்து கிடக்கும் இரவில் நம் கூட படுக்கையில் வந்து படுத்துக் கொள்ளும் சிறு குட்டிகளை பிடித்துவைத்துக் கொண்டு நான் விளையாடுவேன்! குட்டி போட்ட தாய் பூனை மற்றவர்களை அருகில் நாட விடாது. சீறி அடிக்கும் ஆனால் நான் போனால் சும்மா இருக்கும் அந்த அளவிற்கு பூனைகளுக்கும் எனக்கும் ஒரு பாசப் பிணைப்பு ஏற்பட்டு விட்டது.
  இந்த பூனைப் பாசத்திற்கும் ஒரு வேட்டு வந்தது! நான் நாலாம் வகுப்பு படிக்கையில் என்னுடைய மாமாவிற்கு திருமணம் நடந்தது. மாமியை காண நாங்கள் அனைவரும் ஆவலாக இருந்தோம். திருமணம் கோலாகலமாக திருப்பாலை வனத்தில் நடந்து மாமி வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.
    மாமியிடம் என் பூனை பாசத்தை காட்ட பூனை ஒன்றை தூக்கிக் கொண்டு அவரிடம் சென்ற போது அவர் ச்சீ ச்சீ என்று தூர விரட்டினார்! என்ன இது பூனையெல்லாம் கையில புடிப்பாங்களா? அதும் முடி கொட்டுச்சின்னாலே பாவம்! தூரப்போ கிட்ட வராதே என்று விரட்டினார்.
   அவருக்கு பூனைகள் என்றாலே அலர்ஜி! அவருக்காக வீட்டில் இருந்த பூனைகள் ஒவ்வொன்றாக ஒழிக்க பட்டன. சிறு குட்டிகளை ஒரு கோணிப்பையில் போட்டு தொலை தூரத்தில் விட்டு விட ஏற்பாடு செய்தனர். பெரிய பூனைகளும் நாளடைவில் காணாமல் போனது.
   சில வருடங்களுக்கு பிறகு நான் நத்தம் வந்து சேர்ந்த போது இங்கு சாம்பல் நிறத்தில் ஒரு கடுவன் பூனை இருந்தது. எலி பிடிப்பதற்காக வளர்ப்பதாக அப்பா கூறினார். ஆனால் அது திருட்டுப் பூனை எலி பிடிக்காது! பாலை உருட்டி குடித்துவிட்டு ஓடி விடும். ஒரு சமயம் அது பால் சொம்பில் தலையை விட்டு விட்டது எடுக்க முடியவில்லை! மியாவ்! மியாவ்! என்று கத்தியபடி சுவரில் முட்டிக் கொண்டது. என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தோம்.
  என் அம்மா சொம்பை இழுக்க நான் பூனையை இழுக்க என்று ஒரு ஐந்து நிமிட போராட்டத்தில் பூனை விடுபட்டது சொம்பில் இருந்து! அத்தோடு கொஞ்ச நாள் அது வீட்டு பக்கம் திரும்ப வில்லை! இதற்குப் பிறகு ஒரு புஸுபுஸு பூனை ஒன்று பலவண்ணக் கலரில் வளர்த்தோம்! “பியாண்டால்” என்று என் தங்கை அதை செல்லமாக அழைப்பார்.
    நண்பர் ஒருவர் பிடித்து வந்து கொடுத்த பூனை அது! ரொம்ப நாள் வரை அது ஆண் பூனை என்றே நினைத்துக் கொண்டிருந்தோம்! அதுவும் சில வருடங்கள் குட்டி ஏதும் போட வில்லை! திடீரென அந்த பூனை சில நாட்கள் காணாமல் போனது! என் தங்கை அழுதே விட்டார். அவ்வளவு செல்ல பூனை அது! பின்னர் வீடு திரும்பிய அது சில மாதங்களில் குட்டி போட்டது! கன்னங்கரேல் என்று ஒரு குட்டியும் வெள்ளையாக ஒரு குட்டியும் அதன் கலரில் ஒரு குட்டியும் போட்டது. இதனால் எங்கள் வீட்டில் பூனைகள் எண்ணிக்கை அதிகமானது!
 இந்த பூனைக்கும் என் தந்தைக்கும் தினம் ஒரு சண்டையே நடக்கும்! ஏனேனில் அது செய்யும் சேட்டைகள் அவ்விதம் இருக்கும். படுக்கையில் மலம் கழித்து விடும்! அரிசி பையில் இருந்தால் பையை கடித்து ஓட்டை போட்டு விடும் இது மாதிரி சேட்டைகள் செய்வதால் அதை விரட்டிக் கொண்டே இருப்பார் அப்பா! ஆனாலும் அது டிமிக்கி கொடுத்துவிட்டு வந்து விடும். எப்படியொஒரு நாலைந்துவருடங்கள் எங்கள் வீட்டில் வாழ்ந்த அது சில குட்டிகளை ஈன்று ஒருநாள் வயல் வெளியில் இறந்து கிடந்தது.
    மிகவும் இரக்க சுபாவம் கொண்ட என் தங்கை அழுதே விட்டாள். அவளைத் தேற்றிவிட்டு பூனையை புதைத்து விட்டோம்! அதற்கப்புறமும் சில பூனைகள் வந்தன. அவற்றில் இரண்டு பூனைகள் ரோமியோ! ஜுலியட்! என்று பெயர் வைத்திருந்தோம்! ரோமியோ ஆண்! ஜூலி பெண்! இது இறந்த அந்த பியாண்டால் கலரில் இருக்கும்! ரொம்ப சாதுவான பூனை! இது தவிர இன்னும் சில பூனைகளும் வீட்டில் இருந்தன. ஜூலி பூனை கருவுற்று கருப்பும் வெள்ளையுமாக குட்டிகளை போட்டது. வெள்ளைக் கலர் ரோமியோ பூனை வீட்டிற்கு அதிகம் வராது! வெளியிலேயே சுற்றி வரும்! ஒரு சமயம் அது வெளியே சென்றது சென்றதுதான்! வரவே இல்லை!
  ஜூலி பூனையும் இரண்டாவது முறை குட்டி போட்டுவிட்டு வெளியில் சென்றது வயல் வெளியில் இறந்து கிடந்தது. எங்கள் வீட்டை சுற்றிலும் வயல்கள்! வயலில் எலிகள் நடமாட்டம் பாம்புகள் நடமாட்டம் இருக்கும். எங்கள் வீட்டில் கூட அடிக்கடி பாம்புகள் படையெடுக்கும். விரட்டி அடிப்போம். சில சமயம் அடித்து போடுவோம். வயலுக்கு எலி பிடிக்க இரவில் சென்ற பூனை வரப்பில் இறந்து கிடப்பதாக வழியே சென்ற சிறுவர்கள் கூற சென்று பார்த்தோம்!
  பாம்பு கடித்தோ என்னமோ வாயில் நுரை தள்ளி இறந்து கிடந்தது ஜூலி பூனை! இதில் கொடுமை என்ன வென்றால் அது அப்போது தான் குட்டி போட்டிருந்தது. ஐயொ குட்டிகளும் இறந்து விடுமே என்று தவித்தோம்! என் தங்கை இங்க் பில்லரில் பால் எடுத்து குட்டிகளுக்கு புகட்டினால் சிறு குட்டிகளான அவைகளால் குடிக்க முடியவில்லை! தங்கை கண் கலங்கினாள்.
   படைக்கும் கடவுள் காக்காமலா போய் விடுவான்! ஆம் காத்தான்! எப்படி!
நாளை வரை காத்திருங்களேன்!

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2