இசை நிகழ்ச்சியை தள்ளிப்போட அல்லது தவிர்க்க முயற்சிக்கிறேன்!- இசைஞானி இளையராஜா

சென்னை: மலையாள நிறுவனமான மலபார் கோல்ட் ஏற்பாடு செய்துள்ள இசை நிகழ்ச்சியை தள்ளிப்போட அல்லது தவிர்க்க முயற்சிக்கிறேன் என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.

நாளை மறுதினம் சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாலை 5.30 மணிக்கு, இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்கும் 'என்றென்றும் ராஜா' இசை நிகழ்ச்சி நடக்கிறது.

இந்த நிகழ்ச்சியின் மெயின் ஸ்பான்சர் மலபார் கோல்ட் என்ற கேரள நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் விளம்பரங்களிலும் இளையராஜா நடித்துள்ளார். இப்போது ஜெயா டிவியுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.

இந்த நிகழ்ச்சி குறித்து அறிவிப்பு வெளியானதும், பெரியார் திகவினர் இளையராஜாவின் திநகர் வீட்டு முன்பு குவிந்தனர். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழர்களுக்கு எதிராக இருக்கும் கேரள அரசு மற்றும் கேரள வியாபார நிறுவனங்களுக்கு இளையராஜா இசையமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி இளையராஜாவிடம் மனு கொடுப்பதற்காக வந்ததாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இளையராஜா வீட்டுக்குள் செல்ல பெரியார் திகவினருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இளையராஜா ஊரில் இல்லாததால், அவரது உதவியாளர் மனுவைப் பெற்றுக் கொண்டார்.

இந்த விவரம் வெளிநாட்டில் இருந்த இளையராஜாவிடம் போன் மூலம் தெரிவிக்கப்பட்டது. உடனே திநகர் உதவி ஆணையர் தமிழ்செல்வனை தொடர்பு கொண்ட இளையராஜா, "இந்த இசை நிகழ்ச்சி நடத்துவதற்கான ஒப்பந்தம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே கையொப்பம் ஆகிவிட்டது. என் துணைவியாரின் மரணத்திற்கு பிறகு, எந்த நிகழ்ச்சிக்கும் நான் ஒப்புக் கொள்ளவில்லை. யாருடைய விளம்பரப் படத்திலும் தோன்றவோ இசையமைக்கவோ இல்லை.

இப்போது இந்த நிகழ்ச்சியை நடத்துவது சிக்கலாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை நடத்தினால் தமிழர்களின், தமிழ் அமைப்புகளின் பலமான கண்டனத்துக்கு ஆளாவேன் என்பது எனக்கும் தெரியும். அவர்களின் உணர்வுகளை நான் புரிந்து கொள்கிறேன். மதிக்கிறேன்.

எனவே எப்படியாவது நான் நிகழ்ச்சியை தள்ளிப்போடுவதற்கோ, கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்கோ ஏற்பாடு செய்கிறேன் என்று போராட்டக்காரர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்," என கூறினார்.

இளையராஜாவின் இந்த பதில் தமிழ் உணர்வாளர்களுக்கு திருப்தியளித்துள்ளது. முல்லைப் பெரியாறு தண்ணீரால் பலன் பெறும் தேனி மாவட்டத்தில்தான் ராஜாவின் சொந்த ஊர் பண்ணைப் புரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி தட்ஸ் தமிழ்

Comments

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா?