முதல் பரிசு! பாப்பா மலர்!
முதல் பரிசு!
சுஜாவும் மீனாவும் உயிர்த் தோழிகள்.இருவரும் படிப்பில் மட்டும் இன்றி விளையாட்டு, பேச்சுப்போட்டி, இலக்கியம் என பலதுறைகளிலும் ஆர்வமும் திறமையும் உடையவர்கள்.பல்வேறு வகையான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளை குவித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
இவர்கள் இருவருமே போட்டிகளில் கலந்து கொண்டாலும் ஒருவர்தானே முதலிடம் பிடிக்க முடியும்.ஆனால் அவர்களிடம் போட்டி இருக்குமே தவிர பொறாமை இருக்காது.அந்த வருடம் ஆண்டு நிறைவு விழா போட்டிகள் நடத்தப்பட்டன.சுஜாவும் மீனாவும் வழக்கம் போல கலந்து கொண்டனர். அனைத்திலும் சுஜா முதலிடம் பிடித்தாள். ஓட்டப்பந்தயம் மட்டுமே இன்னும் நடத்தப்படாமல் இருந்தது. அப்போட்டிக்கு முந்தைய தினம் சுஜாவை சந்தித்தாள் மீனா.
சுஜா நாளைக்கு ஓட்டப்பந்தயம் இருக்கே வா ப்ராக்டீஸ் பண்ணலாம் என்று மீனா அழைக்க மறு பேச்சு பேசாமல் கிளம்பினாள் சுஜா.இருவரும் கடுமையான பயிற்சிகளை செய்தனர். பின்னர் பயிற்சி ஓட்டம் ஓடினர். அதில் மீனா நல்ல முறையில் ஓடி சுஜாவை முந்தி முதலிடம் பிடித்தாள். அப்போது அவள் கண்களில் ஓர் பிரகாசம் தெரிவதை கவனித்தாள் சுஜா.
இன்னிக்கு மாதிரியே நாளையும் நான் முதலாவதா வந்தா எப்படி இருக்கும்? எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்டி! என்று ஆதங்கத்துடன் உரைத்தாள் மீனா!. கவலைப் படாதே மீனா! நீ நல்லா பிராக்டீஸ் பண்ணியிருக்கே! நாளைக்கு நீ கட்டாயம் ஜெயிப்பே என்று சுஜா சொன்னபோது நிஜமா நடக்குமாடி? என்று ஏக்கத்துடன் கேட்டாள் மீனா.
கண்டிப்பா நீதான் ஜெயிப்பே கவலைப்படாம வீட்டுக்கு போய் நல்லா தூங்கு! நாளைக்கு பிரெஷ்ஷா போட்டியில கலந்துக்க வா! என்று விடை கொடுத்தாள் சுஜா.
மறுநாள் போட்டிகள் துவங்கின. சுஜா முதலாவதாகவும் மீனா இரண்டாவதாகவும் சென்று கொண்டிருந்தனர். இன்னும் ஒரு சுற்றுதான் பாக்கி எனும் நிலையில் சுஜா காலில் அடிபட்டார் போல சுருண்டு விழுந்தாள். பின்னர் சமாளித்து எழுந்தாள். அதற்குள் போட்டி முடிந்து விட்டது. சுஜாவை முந்திய மீனா முதலிடம் பிடித்தாள்.
பரிசு வழங்கும் மேடையில் ஓட்டப் பந்தயம் முதல் பரிசு மீனா என்று அழைத்தபோது மேடைக்கு வந்த மீனா பரிசை வாங்க மறுத்தாள். சார் நியாயமா இந்த பரிசு சுஜாவுக்குத் தான் சேரனும் என்றாள்! எப்படிம்மா நீதானே முதலாவதா வந்தே? என்று கேட்டார் தலைமை ஆசிரியர். உண்மைதான் சார்! ஆனா அது சுஜா விட்டுக் கொடுத்ததாலே வந்தது. நேத்து பேசிகிட்டு இருக்கும் போது முதலாவதா வந்தா சந்தோஷமா இருக்கும்னு அவகிட்ட சொன்னேன். என்னோட மகிழ்ச்சிக்காக தன்னோட முதலிடத்தை அவ விட்டுக் கொடுத்திட்டா! தனக்கு அடிபட்டா மாதிரி நடிச்சி பின் தங்கிட்டா! அவள்தான் முதல்ல வந்திருப்பா! அதனால அவளுக்கே இந்த பரிசை கொடுத்திடுங்க! என்றாள் மீனா.
தலைமை ஆசிரியர் சுஜாவை அழைத்தார். சுஜா மேடையேறினாள். சார் நான் ஒன்னும் விட்டு கொடுக்கலை! உண்மையிலேயே மீனாதான் முதல்ல வந்தா அவளுக்குத்தான் பரிசு கொடுக்கணும் என்றாள். இல்லே சார் சுஜா பொய் சொல்றா! அவலுக்குத்தான் முதல் பரிசு என்றாள் மீனா.
தலைமை ஆசிரியர் அவர்களின் நட்பின் சிறப்பை புரிந்து கொண்டார். சுஜா நீ மீனாவை திருப்தி படுத்தவிட்டுக் கொடுத்தே! அவ அதை பெருந்தன்மையா திருப்பித் தரச் சொல்லிட்டா! இது உங்க நட்ட்புக்கு சிறந்த உதாரணமா இருக்கு. இந்த குணம் எல்லோருக்கும் வராது.இது எல்லா பரிசையும் விட உயர்ந்தது. இந்த பரிசை உங்க ரெண்டுபேருக்கும் சேர்த்தே தரேன்! என்றபோது கரகோஷம் விண்ணைப் பிளந்தது.
சுஜா மீனா இருவரும் ஆனந்த கண்ணீரில் மிதந்தனர்.
அறவுரை!
திருக்குறள்
அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.
விளக்கம்} பொறாமை உடையவனிடம் நலங்கள் இல்லை! அதுபோல ஒழுக்கத்தை போற்றிக் கொள்ளாதவனிடத்து உயர்வு இல்லை!
உங்களுக்குத் தெரியுமா?
கழுதைப் பந்தயம் நடக்கும் இந்திய மாநிலம் ராஜஸ்தான்.
உலகில் மிகவும் சமவெளியாக அமைந்த நாடு மாலத்தீவு
தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!
Comments
Post a Comment