மனித குலத்துக்கு விடப்பட்ட சவால் "எய்ட்ஸ்': டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் தினம்

மனித குலத்தின் இறையாண்மைக்கும், விஞ்ஞான அறிவுக்கும் விடப்பட்ட சவால், "எய்ட்ஸ்'. உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ்க்கு தடுப்பு மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மரணத்தை சிறிது காலம் தள்ளிப்போட மட்டுமே மாத்திரைகள் உள்ளன.

இந்த நோய் பாதிப்பால், மனிதநேயமும், குடும்ப உறவுகளும் குப்பைக்கு சென்று கொண்டிப்பது வேதனைக்குரிய ஒன்று. எய்ட்ஸ் பாதித்தோரை, ஊர் மக்கள் ஒதுக்கி வைப்பதும், குடும்பத்தில் இருந்து வெளியேற்றுவதும் வாடிக்கையாக அரங்கேறுகிறது. அத்தகைய புறக்கணிப்பு, மனிதநேய மாண்பு சிதையுற்றும், சீரழிந்தும் இருப்பதையே நமக்கு உணர்த்துகிறது.இன்றைய சூழலில், எய்ட்ஸ் பாதித்தோருக்கு அன்பும், ஆதரவும் கொடுத்து பாதுகாக்க வேண்டியது அவசியம். எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு, நாட்டின் அனைத்து பகுதியிலும் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. விழிப்புணர்வு மூலம் நோய் பாதித்தோரை அரவணைக்கும் சூழ்நிலையை உருவாக்க முடியும்.உலகத்தில் வாழும் மனிதர்களுக்கு ஏற்பட்ட ஆபத்துதான் எய்ட்ஸ் நோய் என்பதை நினைவூட்டும் நாள் இன்று (டிச., 1). இந்தியாவில், ஹெச்.ஐ.வி., எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ள மாநிலங்களில், தமிழகமும் ஒன்று. கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, மிசோராம், நாகாலந்து உள்ளிட்ட மாநிலங்களிலும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

லாரி தொழிலுக்கு மையமாக இருக்கும் நாமக்கல் மாவட்டம், கடந்த 2005ல் தமிழகத்திலேயே ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் நோயால் பாதிப்படைந்தோர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. பல்வேறு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரத்தால், நாமக்கல் மாவட்டத்தில் ஹெச்.ஐ.வி., பாதிப்பு குறைந்து, முதலிடத்தில் இருந்து மூன்றாமிடத்துக்கு வந்துள்ளது.தமிழகத்தில், தேனி, கரூர் மாவட்டங்கள் ஹெச்.ஐ.வி., பாதிப்பில் முன்னணியில் உள்ளன. நாமக்கல் மாவட்டம் போன்று அம்மாவட்டங்களிலும் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

நாமக்கல் அரசு மருத்துவமனை ஏ.ஆர்.டி., மைய தலைமை மருத்துவர் டாக்டர் ரமேஷ் கூறியதாவது:நாமக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள வி.சி.டி.சி., மற்றும் ஏ.ஆர்.டி., மையத்துக்கு தினமும் சிகிச்சை, கவுன்சலிங் பெற, 250 பேர் வருகின்றனர். அதில், 20 சதவீதம் பேருக்கு நோய் தாக்கியிருப்பது உறுதி செய்யப்படுகிறது. எய்ட்ஸ் நோய் உறுதி செய்யப்பட்டோருக்கு சிகிச்சை மற்றும் மருந்து வழங்குவதற்காக, நாமக்கல் அரசு மருத்துவமனையில், 2005ல் ஏ.ஆர்.டி., சிகிச்சை மையம் (கூட்டு மருந்து) துவங்கப்பட்டது. இம்மையத்தில் ஆண்கள், 6,232 பேர், பெண்கள், 5,575 பேர், குழந்தைகள், 537 பேர், திருநங்கைகள் ஒன்பது பேர் என, எய்ட்ஸ் நோயாளிகள் மொத்தம், 12 ஆயிரத்து 353 பேர் பதிவு செய்துள்ளனர். அதில் குழந்தைகள் உட்பட, 6,916 பேர் தொடர்ந்து ஏ.ஆர்.டி., மருந்து மற்றும் சத்துமாவு உட்கொள்கின்றனர். ரத்தத்தில் வெள்ளை அணுக்கள், 200க்கும் குறைவாக உள்ளவர்களுக்கு மட்டும் ஏ.ஆர்.டி., மருந்து வழங்கப்படுகிறது.

நாமக்கல் ஏ.ஆர்.டி., மையத்தில், சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, தேனி, திண்டுக்கல், கரூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து எய்ட்ஸ் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். ஆண்டு தோறும், 700க்கும் மேற்பட்டோர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

தற்போது, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், ஏ.ஆர்.டி., மையங்கள் துவங்கப்பட்டுள்ளது. சென்னை, தாம்பரம் அடுத்து தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் தான் சிறப்பு சிகிச்சை பிரிவு உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.ஒரு நோயாளிக்கு மாதந்தோறும் நோயின் பாதிப்பை பொருத்து, 1,150 ரூபாய் முதல், 3,500 ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகிறது. நோயாளிகளுக்கு மாதந்தோறும் ஐந்து கோடி ரூபாய் அளவில் செலவு செய்யப்படுகிறது. ஒரு நபருக்கு வாழ்நாள் முழுவதும் மூன்று லட்சம் ரூபாய் வரை செலவழிக்கப்படுகிறது. ஏ.ஆர்.டி., மையம் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு கிடைத்த ஒரு வரம்.இவ்வாறு அவர் கூறினார்.

தரமான சிகிச்சை அளிக்கப்படும் நாமக்கல் அரசு மருத்துவமனை:* இந்தியாவில், மும்பை, சென்னை தாம்பரம் மருத்துவமனைகளுக்கு அடுத்ததாக நாமக்கல் அரசு மருத்துவமனையில் தான் ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் பாதிப்புக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* இங்கு ஏ.ஆர்.டி., மருந்து, ஹெச்.ஐ.வி., பாதித்தோரை தாக்கும் சந்தர்ப்பவாத நோய்களுக்கான சிகிச்சை, உடலுறவால் ஏற்படும் நோய்க்கான சிகிச்சை, தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவும் நோய்க்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகள் அனைவருக்கும் ஹெச்.ஐ.வி., பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் 0.8 சதவீதம் பேருக்கு ஹெச்.ஐ.வி., பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
* வெள்ளை அணுக்கள் பரிசோதனை மிஷின் ஏ.ஆர்.டி., சென்டரில் அமைக்கப்பட்டு, வாரம் முழுவதும் நோயாளிக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* ஏர்.ஆர்.டி., லிங் சென்டராக கொல்லிமலை, ராசிபுரம், பள்ளிபாளையம், கபிலர்மலை உள்ளிட்ட ஐந்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. அப்பகுதியை சேர்ந்தவர்கள் அங்குள்ள சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரை பெற்றுக்கொள்ளலாம்.

நன்றி தினமலர்

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2