கன்னியில் இருந்து துலாம் ராசிக்குப் பெயர்ந்த சனிபகவான் – திருநள்ளாறில் லட்சக்கணக்கானோர் தரிசனம்

திருநள்ளாறு: நவகிரகங்களில் நாயகனாக திகழும் சனி பகவான் இன்று காலை காலை 7.51 மணிக்கு கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்குப் பெயர்ச்சி அடைந்தார். இதனை ஒட்டி திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சனி என்றாலே எல்லோருக்குமே அச்சம்தான். ஏனென்றால் நாடு ஆண்ட மன்னர்களையும் காட்டுக்கு அனுப்பிய புண்ணியவான். அதனாலேயே சனி ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டுக்கு பெயர்ந்தாலே சற்று நடுக்கம்தான்.

பனிரெண்டு ராசிகளில் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகளுக்கு அமரும் சனிபகவான் தனது முழு பயணத்தை முப்பது ஆண்டுகளில் முடிக்கிறார். சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகர இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்வதால் மந்தன் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

நேர்மையானவர் சனி

சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை கெடுப்பாரும் இல்லை என்று கூறுவதற்கேற்ப அல்லாமல் வாழ்வில் கெட்டு நிற்போரையும் தலைநிமிர வைக்கும் ஆற்றல் படைத்தவர் சனி. இவர் மிக நேர்மையானவர், தவறிழைப்பவர்களைத் தண்டிக்கக் கூடியவர், நலம் வேண்டுவோருக்கு ஏராளமாக வாரி வழங்குபவர் என்ற பெருமை உடையவர்.

திருநள்ளாறு நாயகன்

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். பொதுவாக உக்ரமூர்த்தியாகிய சனிபகவான் இக்கோயிலில் அனுக்ரக மூர்த்தியாக கிழக்கு நோக்கி அபயமுத்திரையுடன் அருள் வழங்குகிறார்.இக்கோயிலில் வேறு நவகிரஹங்கள் பிரதிஷ்டை கிடையாது என்பது சிறப்பம்சமாகும். இந்த ஆலயத்தில் தர்ப்பைப் புல்தான் தல விருட்சமாக உள்ளது.

நளன் நீராடிய தீர்த்தம்

நளசக்கரவர்த்தி தன்னைப் பிடித்திருந்த சனி அகல, திருநள்ளாறு வந்து அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, பிரதான தெய்வமாக அருள்பாலிக்கும் ஸ்ரீ தர்பாரண்யேசுவரரை வழிபட்ட காரணத்தால், சனி விலகியது. நளன் திருநள்ளாற்றில் வந்து நீராடியதாலேயே இந்த தீர்த்தத்துக்கு நளதீர்த்தம் என்ற பெயரும் உண்டானது.

நளசக்கரவர்த்திக்கு சனி தொல்லை நீங்கியவுடன் இறைவனை வணங்கி வரம் வேண்டினார். அப்போது தம்மைப் போல் இங்கு வந்து இறைவனையும், சனீஸ்வரனையும் வணங்கும் பக்தர்களுக்கு துன்பம் போக்கி நலம் சேர்க்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டாராம். அதனை ஏற்றுக்கொண்டு சனிபகவா அவ்வாறே வரமளித்தார் என்பது தலவரலாறு. இதன் காரணமாகவே ஒவ்வொரு சனிப்பெயர்ச்சியின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறு ஆலயத்திற்கு வந்து நளதீர்த்தத்தில் நீராடிவிட்டு சனிபகவானை தரிசித்து செல்கின்றனர்.

உற்சவரை காண வரும் பக்தர்கள்

சனிப்பெயர்ச்சி விழாவின்போது உற்சவ மூர்த்தியான சனீஸ்வரபகவான் தங்கக் காக வாகனத்தில் வீற்றிருந்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.மூலவரை தரிசிப்பதுபோன்று எந்த நேரத்திலும் இக்கோயில் உற்சவரை தங்க காக வாகனத்திலிருந்தவாறு தரிசிக்க முடியாது. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாத பிரமோற்சவத்தின் ஒரு நாளில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தின் மீது அமர்ந்து நான்கு மாட வீதியுலா உலா வருவது வழக்கம். அன்றைய தினம் தவிர இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவின் போது மட்டுமே தங்கக் காக வாகனத்தில் சனீஸ்வர பகவான் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இவ்வகையில் பகவானை உரிய வாகனத்தில் இருந்தவாறு தரிசிப்பது அரிது என்பதால், இக்காலகட்டத்தில் உற்சவரை காண வருவோர் அதிகம்.

7 லட்சம் பக்தர்கள் தரிசனம்

சனிப்பெயர்ச்சியை ஒட்டி செவ்வாய்கிழமை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறு ஆலயத்தில் குவியத் தொடங்கினர். நேற்று மாலை உற்சவமூர்த்தி தங்க காக வாகனத்தில் ஏறி வலம் வந்ததை பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை மூன்று மணியில் இருந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. சரியாக காலை 7.51 மணிக்கு சனி பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்த போது மூலவருக்கு சிறப்பு ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதனை குழுமியிருந்த லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.

காரைக்கால் சிறிய நகரம் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் தங்குவதற்கு சரியான இடவசதி இல்லை. எனவே காரைக்காலினை சுற்றியுள்ள நாகப்பட்டினம், வேளாங்கண்ணி உள்ளிட்ட நகரங்களில் தங்கிக் கொண்டு சனிபகவானை காண வந்திருந்தனர். 7 லட்சம் பக்தர்கள் வரை திருநள்ளாறில் திரண்டதால் 2000த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பு கருதி காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தட்ஸ் தமிழ்

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2