பசுமை நிறைந்த நினைவுகள்! பகுதி 1
பசுமை நிறைந்த நினைவுகள்!
எல்லோருக்கும் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் போது சுகமாக இருக்கும்! அந்த கால நினைவலைகள் நம்மை தாலாட்ட சுகமாய் சொக்கிடுவோம்! நம் வாழ்க்கையில் குழந்தைப்பருவம் மிகவும் இனிமையானது! கள்ளமற்ற வயதில் நாம் அடித்த லூட்டிகள் நம் பெற்றோர் சொல்ல கேட்டிருப்போம்! சிலது நமது நினைவில் நின்றிருக்கும். சிலது நெஞ்சில் இனிக்கும் சிலது ஆறாத வடுவாகி போயிருக்கும். பதிவுலகில் பல பதிவர்கள் தங்கள் இளமைக் கால நினைவுகளை நம்மொடு பகிர்ந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் நானும் எனது குழந்தை பருவ நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன் இந்த தொடர் மூலம். நண்பர்களும் பதிவுலகிலும் இணையத்திலும் உள்ள வாசிப்பாளர்களும் ரசித்து படிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இதை தொடர்கிறேன்!
நான் பிறந்ததே ஓர் சுவையான வரலாறு! இதை என் பாட்டியும் தாத்தாவும் (அம்மாவழி) பலமுறைச் சொல்லக் கேட்டிருக்கிறேன்!ரசித்திருக்கிறேன். என்னுடைய குழந்தை பருவம் என் தாய்வழி பாட்டி வீட்டில்தான் கழிந்தது.அது ஒரு குக்கிராமம் அன்றிலிருந்து இன்று வரை அந்த கிராமம் அப்படியேத் தான் உள்ளது அங்கே வசித்தவர்கள் பலர் நகருக்கு சென்று விட்டனர். ஊருக்குள் மினி பஸ் வந்து போகிறது அவ்வளவே அவ்வூரில் மாற்றங்கள்!
பழவேற்காடு கடற்கரையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதற்கு அருகாமையில் குறைந்தது 10 கி.மீ தொலைவில் அமைந்திருந்தது அந்த அழகிய ஆசான பூதூர் கிராமம்.அங்கேதான் எனது குழந்தைப் பொழுது கழிந்தது. என் நண்பர்கள் அன்பு, செல்லா என்ற இளங்கோ, சங்கர், என்னுடன் படித்தவர்கள் இவர்கள். எனக்கு முன் வகுப்பில் படித்தவர்களில் சதிஷ், மாலதி, தமிழ்செல்வி,போன்றோர்களும் இன்னும் என் நினைவில் நின்று கொண்டிருக்கிறார்கள். பசுமரத்தாணி போல என் குழந்தைக் கால நினைவுகளில் இவர்கள் வந்து போகிறார்கள்.
இவர்களில் யாரிடமும் இப்போது தொடர்பில் இல்லை என்றாலும் இவர்களுடம் விளையாடியகாலங்கள் சண்டை இட்ட காலங்கள் ,ஓடிப்பாடி மகிழ்ந்த நாட்கள் இனிமையானவை. ஆசான பூதூரில் என்னை முதல் வகுப்பில் சேர்ப்பதற்காக என்னுடைய மாமா பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு சிறு கட்டிடம் சீமை ஓடு வேய்ந்து காணப்பட்டது எதிரே ஒரு பெரிய பூவரச மரம். பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி ஜம்பகவல்லி .அவரே ஒன்று முதல் ஐந்து வகுப்புகளுக்கும் ஆசிரியர். ஓராசிரியர் பள்ளி அது.அவர் லீவு போட்டுவிட்டால் பக்கத்து ஊர் பள்ளியில் இருந்து ஆசிரியர் வருவார்.
எல்லாரையும் போல நான் பள்ளி செல்ல அடம் பிடிக்க வில்லை! மாமா கூட்டிச் சென்றார். அங்கே வலது கையால் தலையை சுற்றி காதை தொடச் செய்தார்கள். பின்னர் எனது பிறந்த தேதியினை கேட்டார்கள். அவ்வளவுதான்! பள்ளியில் சேர்த்து விட்டார்கள். மாமா வெத்தலை பாக்கு தாம்பூலத்துடன் ஆசிரியருக்கு தட்சணை தந்தார். அனைவருக்கும் இனிப்பு வழங்கி இனிதே பள்ளியில் சேர்ந்து விட்டேன். ஆசிரியர் ஜம்பகவல்லி சிலேட்டில் அ எழுதி என் கையை பிடித்து அதன் மேல் எழுதி காண்பித்து அப்படியே எழுதும் படி சொல்ல நானும் தொடர்ந்தேன். அன்றைய பொழுது இனிமையாக கழிந்தது.
அன்று முதல் பள்ளிக்கு தினமும் செல்ல ஆரம்பித்தேன். இரண்டு தெரு தள்ளி பள்ளிக் கூடம் அதன் எதிரே பெருமாள் கோயில் அதன் பக்கவாட்டில் தாமரைக் குளம்!. அந்த தாமரை குளத்து நீரைத்தான் அந்த ஊரே பருகியது.அவ்வளவு இனிமையாக அந்த நீர் இருந்தது.
இன்று அந்த தாமரை குளத்தில் தாமரைகள் இல்லை! தண்ணீரும் சரியாக இல்லை! ஆழ்துளை கிணறு மூலம் வரும் தண்ணீரும் கரிக்கிறது. கிராமமே கேன்களில் தண்ணீர் வாங்கி அருந்துகிறது. எண்பதுகளில் இனிமையாக இருந்த கிராமத்து குளத்தின் நீர் இன்று லாயக்கற்றதாகி விட்டது. ஏன்?
அன்று அந்த நீர்தான் கிராமத்தின் குடிநீர்! எனவே குளம் பாதுகாக்கப் பட்டது. துணி துவைத்தல் மாடு கழுவுதல் போன்ற செயல்கள் குளத்தில் செய்ய மாட்டார்கள் குழாய் நீர் வந்ததும் குளம் பராமரிப்பற்று போக இன்று காசு கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய நிலை!
சரி விசயத்திற்கு வருவோம்.பள்ளிக்கு செல்ல நான் அடம் பிடிப்பது இல்லை! காலையில் ஒரு 5மணிக்கெல்லாம் பாட்டி எழுந்து விடுவார்கள்! எழுந்தவுடன் காபி தயாராகும் தூக்கத்திலேயே எழுப்பி பேராண்டி இந்தா பெட் காபி என்று கொடுப்பார்கள். காபி குடித்துவிட்டுதான் பல் தேய்ப்பேன்! எட்டு மணிக்கெல்லாம் குளிப்பாட்டி டிரஸ் போட்டுவிட்டு தலை வாரி விடுவார்கள் மாமா ரேடியோ வைத்திருப்பார்கள் அதில் விவிதபாரதியின் வர்த்தக ஒலிபரப்பு 8.15க்கு ஆரம்பமாகும்.
நான் ரெடியாகி அதைக் கேட்டுக் கொண்டிருப்பேன்.
மணி எட்டு ஐம்பதை நெருங்கும் போது மாமா குரல் கொடுப்பார் டேய் பள்ளிக் கூடத்திற்கு கிளம்பு என்று! பையை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவேன். அங்கே என் நண்பர்கள் காத்திருப்பார்கள் வழியே! அவர்களுடன் நடந்து பள்ளிக்குப் போய் விடுவேன்.
பூவரச மரத்தின் அடியில் பள்ளியின் பிரேயர் நடக்கும் தமிழ்த் தாய் வாழ்த்து உறுதிமொழி, தேசியகீதம் மூன்றையும் ஆசிரியர் சொல்ல நாங்களும் சொல்வொம். ஆசிரியருக்கு நல்ல குரல் வளம். அருமையாக பாடுவார். பின்னர் சில ஐந்தாம் வகுப்பு மாணவிகள் சேர்ந்து வாழ்த்து பாட ஆரம்பித்தனர்.
தனித் தனி வகுப்பறை எல்லாம் கிடையாது ஒரே கட்டிடம் தான். நான்கு பக்க சுவர்களில் இருபக்கம் மட்டும் கருப்பு வண்ணம் அடித்திருக்கும் அதுதான் பிளாக் போர்டு! அது தவிர ஒரு மர போர்டும் உண்டு. மாணவர்கள் அமர பலகைகள் உண்டு ஒரு பலகையில் ஐந்து பேர் அமரலாம். அது போல ஒரு பத்து பலகைகள் உண்டு!
வகுப்பு வாரியாக எல்லாம் பிரிக்காமல் அவரவர் வசதிப்படி அமர்ந்து கொள்வோம் பாடம் நடத்தும் போது மட்டும் அந்தந்த வகுப்புகள் பிரிந்து செல்லும் அப்படி ஒரு ஏற்பாடு நமக்கு பிடித்த நண்பர்கள் பக்கத்தில் அமருவது என்றால் குஷிதானே! நான் புதியவன் என்பதால் என்னை தங்கள் பக்கத்தில் அமர்த்திக் கொள்ள ஒரு போட்டியே நடக்கும். இப்படி இனிமையாக சென்றது எனது பள்ளி நாட்களில் திடீர் என்று ஒரு வில்லன் முளைத்தார்! அவர்! அப்புறம் சொல்கிறேனே!
தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே வாக்களித்து பிரபலபடுத்தலாமே!.
மிகவும் சுவாரசியம் தாங்க நீங்களும் நல்ல சுவாரசியமாகப் பகிர்ந்துள்ளீர்கள்....
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு week cinema (28.11.2011-5.12.2011)
நம்ப முடியாத கின்னஸ் சாதனை படைத்துள்ள கனெடியத் தமிழன் guinness world record
சாந்தனை தேசத்துரோகியாக்கிய ஈழ மக்கள்