சாமி முன்பு குமாரசாமி சத்தியம் கர்னாடகாவில் பரபரப்பு



சாமி முன்பு குமாரசாமி சத்தியம் கர்னாடகாவில் பரபரப்பு

எதியூரப்பா, குமாரசாமியின் சவால்களால் இன்று தர்மஸ்தலா மஞ்சுநாத சாமி கோவில் நாடு முழுவதும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 800 ஆண்டுகளாக இங்கு சாமி முன்பு சத்தியம் செய்யும் நிகழ்ச்சி சத்தமின்றி நடந்து வருவது நிறையப் பேருக்குத் தெரியாது.

தென் கனரா மாவட்டத்தில் உள்ள எழில் கொஞ்சும் இடத்தில் அமைந்துள்ளது தர்மஸ்தலா. கோவில் வளாகத்தின் ஒரு பக்கம் நேத்ராவதி ஆறு அழகுற ஓடிக் கொண்டிருக்கிறது. இங்குள்ள மஞ்சுநாத சாமி கோவில் மிகவும் பழமையானது. கிட்டத்தட்ட 800 ஆண்டுகளாக இந்தக் கோவில் இப்பகுதி மக்களுக்கு அருள் பாலித்து வருகிறது.

இங்கு காலம் காலமாக ஒரு பழக்கம் நடைமுறையில் உள்ளது. அதாவது தாங்கள் சொல்வது உண்மை என்பதை நிரூபிக்க விரும்புவோர் இங்கு வந்து சாமி முன்பு நின்று, நான் சொல்வது உண்மை, சத்தியம் என்று சொல்லி நிரூபிப்பதுதான் அந்த வழக்கம். சாமி முன்பு பொய் சத்தியம் செய்தாலோ அல்லது பொய் சொன்னாலோ அவர்களுக்கு கடும் விளைவுகள் ஏற்படும் என்பது மக்களின் நம்பிக்கை. இதனால்தான், இங்கு வந்து சத்தியம் செய்வோர் சொல்வதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

அதை விட முக்கியமானது, தர்மஸ்தலாவி உள்ள மஞ்சுநாத சுவாமி கோவிலில் பல சிவில் வழக்குகளுக்கும் கூட தீர்ப்பு சொல்லப்படுகிறது. இதை கர்நாடக மாநில நீதிமன்றங்களும் ஏற்றுக் கொள்கின்றன. இந்தத் தீர்ப்புகளை வழங்குபவர்களுக்கு ஹெக்கடே என்று பெயர். தற்போது இந்த வம்சாவளியைச் சேர்ந்த 21வது ஹெக்கடேவாக, டாக்டர் வீரேந்திர ஹெக்கடே விளங்குகிறார்.

(
ஹெக்கடே என்பது ஹெக்டே என்றும் துணைப் பெயரில் அழைக்கப்படுகிறது. கர்நாடகத்தைச் சேர்ந்த பந்த் மற்றும் பிராமணர்களிடையே இந்த துணைப் பெயரை காண முடியும். ஒக்கலிகா வகுப்பைச் சேர்ந்த சிலரும் கூட இந்த துணைப் பெயரை சேர்த்து வைத்துக் கொள்வதும் வழக்கம். இவர்களில் வீரேந்திர ஹெக்கடே பந்த் சமூகத்தைச் சேர்ந்தவர். மறைந்த கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே, பிராமணர் என்பது குறிப்பிடத்தக்கது.)

இந்தியாவிலேயே கோவில் ஒன்றில் சிவில் வழக்குகளுக்குத் தீர்ப்புச் சொல்வது இரண்டே இரண்டு இடங்களில்தான் உள்ளது. ஒன்று ஒரிசா மாநிலம் சாக்ஷி கோபால் கோவில். 2வது இந்த தர்மஸ்தலா.

டாக்டர் வீரேந்திர ஹெக்கடே, மஞ்சுநாத சாமியின் பிரதிநிதியாக பார்க்கப்படுகிறார். எனவே இவர் சொல்லும் தீர்ப்பை யாரும் மறுப்பதில்லை, அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள்.

இந்த வரலாறு கொண்ட கோவிலில்தான் இன்று குமாரசாமி சத்தியம் செய்துள்ளார். சத்தியம் செய்வதாக கூறிய எதியூரப்பா ஜகா வாங்கியுள்ளார்.

இங்கு அரசியல்வாதிகள் வந்து சத்தியம் செய்வதாக சவால் விடுவதும், சத்தியம் செய்வதும் புதிதல்ல. இந்த நடைமுறையை ஆரம்பித்து வைத்த பெருமை வீரப்ப மொய்லிக்கே உண்டு.

1983
ம் ஆண்டு நாட்டை உலுக்கிய விவகாரம் மொய்லி டேப் விவகாரம். அப்போது அமைச்சராக இருந்த பைரே கெளடா, வீரப்ப மொய்லி மீது ஒரு புகாரைக் கூறினார். மொய்லி அப்போது சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். தனக்கும், சுயேச்சை எம்எல்ஏக்களுக்கும் தலா ரூ. 2 லட்சம் தருவதாக மொய்லி கூறினார் என்றும், அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ளுமாறு கூறியதாகவும் பைரே கெளடா பரபரப்புக் குற்றச்சாட்டை வைத்தார். இதுதொடர்பான ஆடியோ டேப் தன்னிடம் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனால் கோபமடைந்த மொய்லி, நீங்கள் சொல்வது உண்மை என்றால் என்னுடன் மஞ்சுநாத சாமி கோவிலுக்கு வந்து சத்தியம் செய்யுங்கள் என்று சவால் விட்டார். ஆனால் இருவருமே தர்மஸ்தலாவுக்குப் போகவில்லை, சத்தியமும் செய்யவில்லை. ஆனால் தர்மஸ்தலாவுக்கு வந்து சத்தியம் செய்யுமாறு விடப்பட்ட முதல் அரசியல் சவால் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு கடந்த ஆண்டு எதியூரப்பாவின் நம்பிக்கைக்குரியவரும், நெருக்கமானவரும், அமைச்சருமான ஷோபா கரந்தலஜே மீது குமாரசாமி பல்வேறு சொத்துக் குவிப்புப் புகார்களைச் சுமத்தினார். அப்போது மஞ்சுநாத சாமி முன்பு வந்து சத்தியம் செய்யத் தயாரா என்று ஷோபா சவால் விட்டார். ஆனால் ஷோபாவும் அதைப் பின்பற்றவில்லை. குமாரசாமியும் கண்டு கொள்ளவில்லை.

இப்படிப்பட்ட பின்னணியில்தான் இன்று குமாரசாமி மஞ்சுநாத சாமி முன்பு சத்தியம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மஞ்சுநாத சாமி முன்பு சத்தியம் செய்த முதல் அரசியல் தலைவர் என்ற பெயரையும் இதன் மூலம் குமாரசாமி பெற்றுள்ளார்.
நன்றி தட்ஸ் தமிழ்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்தினை இட்டுச் செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!


Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2