இலவசங்கள் தேவையா?
இலவசங்கள் தேவையா?
ஒரு வழியாய் இன்று இலவச அரிசிவழங்கும் திட்டத்தை சென்னை ஆழ்வார் பேட்டையில் துவக்கி வைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. ஆடம்பரமின்றி கட் அவுட்டுகள், பேனர்கள் பெரிய பந்தல்கள் ஏதுமின்றி எளிமையான விழாவாக இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. இது ஒரு வரவேற்கதக்க மாற்றம்! ஜெயலலிதாவின் அணுகுமுறைகளில் இப்பொழுது நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது தமிழகம் செய்த புண்ணியம். ஏனேனில் மக்கள் தி.முக தோற்க வேண்டும் என்று வாக்களித்தார்களே ஒழிய அதிமுக ஜெயிக்கவேண்டும் என்று வாக்களித்தார்களில்லை. இந்த நிலையில் அமோக வெற்றி பெற்ற ஜெயலலிதா தமிழக மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்ய வேண்டும்.குறிப்பாக விலைவாசி உயர்வையும்,மின்சாரத் தட்டுப்பாட்டையும் தமிழகத்தை விட்டு நீங்க செய்ய வேண்டும்.
ஆட்சிக்கு வந்ததும் அதிகாரிகள் மாற்றங்கள் ஏறக்குறைய முடிந்த நிலையில் நலவாழ்வு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.அதை விடுத்து இலவசங்கள் என்ற பெயரில் முந்தைய அரசு செய்த அதே தவறுகளை செய்யக்கூடாது என்பது என் அபிப்பிராயம்.
இலவசமாய் எதைக் கொடுத்தாலும் வாங்கியே பழக்கப்பட்டு விட்ட மக்களை கூடிய சீக்கிரம் திருத்தமுடியாதுதான். ஆனால் இலவசங்கள் வழங்குவதில் ஒரு கட்டுப்பாடு அவசியம். அனைவருக்கும் இலவசம் என்பதை எல்லாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இலவசங்களால் ஓட்டு வங்கி நிறைந்து விடவில்லை. அப்படி இலவசங்களுக்கு மக்கள் வாக்களித்தனர் என்றால் திமுக வென்றிருக்க வேண்டுமே? அப்படி நிகழ வில்லையே?
இந்த இலவச அரிசி திட்டத்தையே எடுத்துக் கொள்ளுங்கள், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த இலவச அரிசி தேவையா? நீங்கலும் நானும் இந்த இலவச அரிசி சாப்பிட்டுதான் வாழ்கிறோமா? 1ரூபாய் அரிசியையே மக்கள் வாங்கி வெளியில் விற்றனர்.வெளி மாநிலங்களுக்கு கடத்தினர். சிலர் தம் வீட்டு நாய்களுக்கு உணவாக பயன் படுத்தினர். நான் படிக்கும் காலத்தில் சத்துணவு ஆயா மீந்த உணவை தன் வீட்டு மாட்டிற்கு எடுத்துச் செல்வார். அதுபோல இந்த இலவச அரிசி எல்லோருக்கும் எனில் இப்படி வீணாகத்தான் போகும்
எந்த ஒரு பொருளுமே தள்ளுபடியில் கிடைக்கிறது என்றால் அதன் தரம் மலிவாகத் தான் இருக்கும் என்பது மரபு. தரமற்ற பொருட்களை இலவசமாய் எல்லோருக்கும் தருவதை தவிர்த்து உண்மையான பயனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தரமான பொருட்களை வழ்ங்கினால் பயனாளிகள் மகிழ்வர். எப்படியும் இனி 5 ஆண்டுகளுக்கு நீங்கள்தான்! எனவே துணிந்து எல்லோருக்கும் இலவசம் என்பதை மறுபரிசீலனை செய்து நல்ல திட்டமாக வரைவு செய்யவேண்டும்.
என்னைப் பொறுத்த வரையில் இலவசங்கள் என்பதே ஏமாற்று வேலை என்றுதான் சொல்வேன். இலவசமாய் அரிசிகொடுத்து டிவி கொடுத்து,மிக்சி,கிரைண்டர் கொடுத்து, தமிழனை சோம்பேறிகளாக ஆக்காமல் அவன் பிழைக்க நல்ல வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதே ஒரு நல்ல அரசின் கடமையாகும்.
ஆனால் சென்ற அரசு இலவசங்கள் என்று ஒரு மாயையை ஏற்படுத்தி மக்களை மயக்கியுள்ள நிலையில் புதிய அரசு உடனடியாக மக்களை இந்த மாயையிலிருந்து மீட்பது சற்று கடினம்தான். அதனால் சிறுக சிறுக இலவசங்களை நிறுத்தி அதனால் எற்படும் நிதி ஆதாரங்களை கொண்டு தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல வேண்டும் என்பதே இளைஞர்களின் எதிர்பார்ப்பு.
துணிச்சலுக்கு பெயர்போன நம் முதலமைச்சர் துணிந்து இதைச் செய்வாரா?இலவசங்களை அள்ளிவீசி மீண்டும் தமிழகத்தை படு பாதாளத்தில் தள்ளுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்தினை இட்டுச் செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!
Comments
Post a Comment