பாபா ராம்தேவ் கைதும் மத்திய அரசின் தவறான முடிவும்!
பாபா ராம்தேவ் கைதும் மத்திய அரசின் தவறான முடிவும்!
ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிராக பாபா ராம்தேவின் உண்ணாவிரதப் போரை ஒருவழியாக காங்கிரஸ் அரசு ஒடுக்கிவிட்டது. பாபா ராம் தேவை கைதுசெய்து அவரைடில்லியில் இருந்து வெளியேற்றி நினைத்ததை முடித்துக்கொண்ட திருப்தி காங்கிரஸுக்கு! ஆனால் போர் ஓயவில்லை ஊழலுக்கு எதிரான எனது உண்ணாவிரதம் தொடரும் என்று ராம் தேவ் தனது ஆசிரமத்தில் கூறியுள்ளார்.
நள்ளிரவில் ராம்லீலா மைதானத்தில் நடந்த இந்த களேபரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ராம்தேவோ அல்லது அவரது பிரதான சீடர்களோ அல்ல. கண்மூடித்தனமாக அவரைப் பின்பற்றும் ஆயிரக்கணக்கான மக்கள்தான். வயதானவர்கள்,குழந்தைகள்,பெண்கள் என எல்லோரையும் மிரட்டி கண்ணீர் புகை வீசி மைதானத்தை விட்டு வெளியேற்றி இருக்கிறது டில்லி போலிஸ்.
ராம் தேவை கைது செய்ய நல்ல நேரம் பார்த்ததா டில்லி போலிஸ் என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது.நள்ளிரவில் கைது செய்யவேண்டிய அவசியமென்ன? அவர் அரசியல் வாதியா? அல்லது அமைச்சரா? ஒருஇரவு பொறுத்து காலையில் கைது செய்து இருக்கலாமே? இது அவசரகால நிலையை நினைவு படுத்துவதாக அத்வானி கூறி வருகிறார். பிரபலங்கள் பலரும் இந்த கைதை எதிர்த்து கருத்துகளை சொல்லி வருகின்றனர்.ஒரே இரவில் ஒரு யோகியை ஹீரோவாக்கி விட்டது மத்திய அரசும் டில்லி போலிஸும். இதெல்லாம் தேவையா?
ராம் தேவ் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்தவுடன் விமான நிலையத்திற்கே சென்று பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்கள் இன்று அவரை அவசர அவசரமாக கைது செய்யவேண்டிய காரணம் என்ன? யோகாசனம் நடத்த அனுமதி வாங்கிவிட்டு உண்ணாவிரதம் இருக்கிறார். யோகாசனம் கற்றுத் தருவதற்கு பதில் அரசியலாசனம் கற்றுத் தருகிறார் என்று அவர்மீது பழி சுமத்துகிறார் மத்திய அமைச்சர் கபில் சிபல்.
இதெல்லாம் உங்களுக்கு முன்னமே தெரியாதா? நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாம் ஊழலை ஒழிக்க முடியாதாம். அது சரி நீங்களெல்லாம் இருக்கும் வரையில் அது நடக்காத காரியம் தான்! அப்படி இந்தபோரட்டத்தை தடுத்து நிறுத்தவேண்டுமெனில் முன் கூட்டியே ஆரம்பிக்குமுன்னேயே கைது செய்வதுதானே? இதற்கெல்லாம் யாராவது உண்ணாவிரதம் இருப்பார்களா? இதற்குப் போய் ஆதரவு இருக்குமா? என்று நினைத்து கவனக்குறைவாக இருந்து விட்டது மத்திய அரசு.
இன்று ஊடகங்கள் பெருகிவிட்ட நிலையில் மக்களிடையெ ஒருவிழிப்புணர்வு ஊழலைக் குறித்தும் கறுப்பு பணத்தைக் குறித்தும் ஏற்பட்டுவருகிறது.இந்த தாக்கம் தான் ராம் தேவின் உண்ணாவிரதத்தில் எதிரொலித்தது. நாடு முழுக்க அவருக்கு ஆதரவு அலைகள் வீசவே உடனடியாக அதை முடக்க நள்ளிரவு கைதை அரங்கேற்றி இருக்கிறது மத்திய அரசு. இதன் மூலம் தேன்கூட்டை கலைத்தவன் கதியை அடையப்போகிறது மத்திய அரசு.

இந்த கைது நடவடிக்கையால் நாடாளுமன்ற கோடைக்கால கூட்டத்த்தொடர் பாதிக்கப்படலாம். எந்தபிரச்சனையை எழுப்பலாம் என்று காத்துக் கொண்டிருக்கும் பி.ஜே.பிக்கு இப்போது அல்வா சாப்பிட்டமாதிரி ஆகிவிட்டது. சமூக சேவகர் அன்னாஹசாரேவும் இந்த கைதை கண்டித்து ஒருநால் உண்ணாவிரதமிருக்க போவதாக அறிவித்துள்ளார்.
இந்தகைதால் லோக்பால் மசோதா வரைவு செய்வதும் தள்ளிப் போகலாம் என்பதுதான் ஒரு வருத்தமான செய்தி! ஆனால் அது அரசியல் வாதிகளுக்கு நல்ல செய்தியாக இருக்கலாம். ஒரு வேளை இதற்காகவே கூட இந்த கைது நாடகம் நிகழ்ந்து இருக்கலாம்.யோகா குரு ராம் தேவின் கைது துரதிருஷ்டமானது. சட்டம் ஒர்ழுங்கை நிலைநாட்ட இதைத் தவிர வேறு வழியில்லை என்று சப்பைக் கட்டு கட்டியுள்ளார் பிரதமர். ஒரு உண்ணாவிரதத்தினால் சட்டம் ஒழுங்கு கெட வேண்டிய அவசியம் என்ன? அப்படி கெடும் என்று நினைத்தால் முன்னதாக அனுமதி கொடுத்தது ஏன்? ராம் தேவ் ஒப்பந்தத்தை மீறி செயல் படுகிறார் என்கிறார் ஒரு அமைச்சர்.அப்படி என்ன ஒப்பந்தம் போடப்பட்டது? இதெல்லாம் மக்கள் மனதில் எழும் கேள்விகள்!

லேட்டஸ்டாக இந்த கைது விவகாரம் தொடர்பான செய்தியாளர்கள் கூட்டத்தில் செய்தியாளர் ஒருவர் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரை காலணியால் தாக்க முயற்சித்த செயலால் விஷயம் மேலும் பரபரப்பாகி உள்ளது.காங்கிரஸ் இந்த விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ் சின் தூண்டுதல் உள்ளது என்று கருத்து பரப்பி வருகிறது.அதோடு லோக்பால் மசோதாவுக்கான வரைவறிக்கையையும் தாக்கல் செய்ய முழுவீச்சில் களத்தில் இறங்கியுள்ளது.
எப்படியோ மக்களுக்கு ஊழல் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பது பாரட்டப் படவேண்டிய விஷயம்தான்.
தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்துக்களை இட்டுச் செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!
Comments
Post a Comment