எருமையின் பதிலும்! மீனின் விபரீத ஆசையும்! குட்டிக்கதைகள்!


எருமையின் பதிலும்! மீனின்  விபரீத ஆசையும்! குட்டிக்கதைகள்!

எருமையின் பதில்!

   எருமை ஒன்று ஆனந்தமாக சேற்றில் படுத்து புரண்டு கொண்டிருந்தது. அது சேற்றையெல்லாம் வாரி இறைத்துக் கொண்டு மண்ணில் இப்படியும் அப்படியுமாக புரண்டு படுத்து விளையாடிக் கொண்டிருந்தது. இந்த செயலில் அது மிகவும் லயித்து உற்சாகத்துடன் காணப்பட்டது.
    அப்போது அந்த வழியே பன்றி ஒன்று வந்தது. எருமையின் இந்த சேறு பூசிய கோலத்தை கண்டு பன்றிக்கு சிரிப்பாக வந்தது. அது “ஹாஹா” வென வாய் விட்டு சிரித்து ஏளனம் செய்தது.
    பன்றியின் ஏளனச்சிரிப்பை கண்டு எருமைக்கு கோபம் கோபமாக வந்தது. “பன்றியாரே எதற்கு என்னைப்பார்த்து இப்படி விழுந்து விழுந்து சிரிக்கிறீர்? நான் என்ன கோமாளியா? என்று கோபத்துடன் கேட்டது.
   அதைக்கேட்ட பன்றி மேலும் அதிகமாக சிரித்தது. பின்னர் “எருமையாரே இதென்ன  சந்தனமா? சேறு இதை வாரி பூசிக் கொள்கிறீர்களே? உங்களைப்பார்த்து சிரிக்காமல் என்ன செய்வது? என்ன கூத்து இது? எதற்கு இப்படி வேசம் போட்டுக் கொண்டு அலைகிறீர்? என்று கேட்டது.
    பன்றியின் இந்த பேச்சு எருமைக்கு கோபம் ஊட்டியது. “ பன்றி நண்பா! பிறரை கேலி பேசும் முன் நம்மை கொஞ்சம் பார்த்துக் கொள்ளவேண்டும். நான் சேற்றை வாரி பூசிக் கொள்வது உண்மைதான்! ஆனால் உங்கள் உடலில் மட்டும் சந்தனமா பூசிக் கொண்டுள்ளீர்! சாக்கடையில் புரண்டுவிட்டு வரும் நீர் என்னை பார்த்து சிரிக்க என்ன அறுகதை உள்ளது? உன்னிடம் குறை வைத்துக் கொண்டு அடுத்தவனிடம் குறை காண்பதை விட்டு விடு! என்று சொன்னது.
   பன்றி அப்போதுதான் தன் தவறு உரைத்தது. தலை கவிழ்ந்தபடி அங்கிருந்து மவுனமாக சென்றது.

மீனின் விபரீத ஆசை!

  ஆறு ஒன்றில் மீன் ஒன்று உல்லாசமாக நீந்திக் கொண்டிருந்தது. அப்போது கரையில் பிற உயிரினங்கள் சுற்றி திரிவதை பார்த்தது. உடனே அதற்கு ஒரு விபரீத ஆசை தோன்றியது.
    நாமும் கரைக்கு சென்று வாழ்ந்தால் என்ன? எத்தனை காலம் தான் இந்த நீரிலேயே சுற்றி சுற்றி வருவது? இந்த இடம் போரடித்து போய்விட்டது. ஒருமுறை கரைக்கு சென்று அங்கேயே வாழ்ந்தால் என்ன என்று எண்ணியது.
   பாவம் அந்த அப்பாவி மீனுக்கு கரைக்குச் சென்றால் சுவாசிக்க முடியாமல் இறந்து போவோம் என்பது தெரியவில்லை! அது மெல்ல கரையோரமாக வந்து மணல் மேட்டில் குதித்தது.
   அவ்வளவுதான்! சில நொடிகளில் அது சுவாசிக்க முடியாமல் தவித்து துடித்தது.
அப்போது அதனருகே ஒரு சிறுவன் வந்தான். அட மட மீனே! நீ ஏன் கரைக்கு வந்தாய்? இங்கு உன்னால் உயிர் வாழ முடியாது. வீணாக வந்து இறக்காதே! என்று  சொல்லி மீண்டும் ஆற்றில் எடுத்து வீசினான்.
  அப்பொழுதுதான் மீனுக்கு உயிர் வந்தது. அது தன் நிலையை உணர்ந்தது. அவரவர் இருக்குமிடம் அவரவர்க்கு சிறப்பு என்று தெளிந்தது.
டிஸ்கி} இந்த இரண்டு கதைகளும் 1993ம் வருடம்  நான் நடத்திய கையெழுத்து பத்திரிக்கையில் எழுதியது. எனக்கு பிடித்து இருந்ததால்  வலைப்பூவில் பகிர்ந்துள்ளேன்!  நன்றி!
    தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. ரெண்டு கதைகளுமே நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  2. குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கக்கூடிய கதை !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2