விஸ்வரூபம் சிக்கல்களுக்கு காரணம் யார்? ரஜினி அறிக்கை! தடைசெய்ய அதிகாரம் இல்லை மத்திய அரசு காட்டம்!
விஸ்வரூபம் படம் சந்திக்கும் பல சிக்கல்களுக்கும் காரணமே, கோடம்பாக்கத்தின் 'புதிய சக்ஸேனா- ஐயப்பன்' என்று வர்ணிக்கப்படும் இருவர்தானாம். இதில் ஒருவர் ஒரு முக்கியமான டிவி நிர்வாகி என்றும், மற்றொருவர் ஹீல்ஸ் செருப்பால் தாக்கப்பட்டதாக புகார் கூறிய ஆடிட்டர் என்றும் சொல்கிறார்கள். டிடிஎச் விவகாரத்தில் கமலை முழுக்க முழுக்க தவறாக வழிநடத்தியதே இந்த இருவர்தான் என்கிறார்கள். குறிப்பாக இந்த ஆடிட்டர், ஏதாவது ஒரு வழியில் பணம் வந்தால் போதும் என்று நினைத்து டிடிஎச் முதலில், தியேட்டர்களில் பிறகு என முதலில் யோசனை கூறி, பின்னர் கமலை பின்வாங்க வைத்தாராம். கைமாறிய சேட்டிலைட் உரிமை... இன்னொரு பக்கம், அரசின் பார்வை விஸ்வரூபத்தின் மீது இத்தனை கடுமையாக இருக்கக் காரணம், இந்தப் படத்தின் சேட்டிலைட் உரிமை வேறு சேனலுக்கு கைமாறியதுதான் என்கிறார்கள். ஆரம்பத்தில் பெரும் விலைக்கு ஜெயா டிவி வாங்கியிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இப்போது அதை விஜய் டிவிக்கு கைமாற்றியுள்ளார் கமல். இதெல்லாம் நிஜமா.. அல்லது வெறும் அனுமானங்களா... என்பதையெல்லாம் காலம்தான் சொல்ல வேண்டும்!
விஸ்வரூபம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையால் கமல் எவ்வளவு துன்பத்துக்கு ஆளாகியிருப்பார் என்பதை நினைத்து மனம் கலங்குகிறேன் என்று சூப்பர் ஸ்டார் ரஜினி தெரிவித்துள்ளார்.
இன்று ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த சில நாட்களாக ‘விஸ்வரூபம்' திரைப்படப் பிரச்சினைகளை அறிந்து மிகவும் வேதனைப்படுகிறேன்.
கமல் எனது 40 ஆண்டுகால நண்பர். யாருடைய மனதையும் புண்படுத்தும்படியாக நடந்து கொள்ளாதவர் என்பதை நன்கு அறிவேன். இத் திரைப்படம் தணிக்கையான பிறகு தியேட்டர்களில் வெளியிடுவதற்கு முன்பே இஸ்லாமிய சகோதரர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு திரையிட்டு காண்பித்ததிலிருந்தே இஸ்லாமிய சமூகத்தின் மீது கமல் கொண்டுள்ள மதிப்பையும், மரியாதையையும் தெள்ளத் தெளிவாக காட்டுகிறது.
மேலும் கமலஹாசன் இந்த படம் தயாரிக்க சுமார் 100 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு என்னென்ன சிரமங்கள் அனுபவித்திருக்கிறார் என்பதை அறியும்போது என் மனம் கலங்குகிறது.
கமல் ஒரு சாதாரண கலைஞன் அல்ல. தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு செல்வதற்கு ஒரு காரணமாக உள்ள மகா கலைஞன். இதையெல்லாம் மனதில் கொண்டு இந்த படத்தை முழுசா தடை செய்ய வேண்டும் என்ற கருத்திலிருந்து மாறி, கமல் வந்த பிறகு கலந்து பேசி, கதைக்கு பாதிப்பு வராத வகையில் சரிசெய்து படத்தை வெளியிட உறுதுணையாக இருக்குமாறு மிலாதுநபி வாழ்த்துக்களுடன் இஸ்லாமிய சகோதரர்களை கேட்டுக்கொள்கிறேன். ஜெய்ஹிந்த்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விஸ்வரூபம் படத்தைத் தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. டெல்லியில் இதுதொடர்பாக மத்திய செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சர் மணீஷ்திவாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், படங்களை வெளியிட அனுமதி அளிப்பது தொடர்பான விஷயத்தில், தணிக்கைக்குழுவின் கருத்து மற்ற அனைத்தையும் கட்டுப்படுத்தும் என சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே இயக்குநர் பிரகாஷ் ஜா வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது. ஒரு படத்தை தடை செய்வது என்பது மாநில அரசின் அதிகார வரம்பில் வரவில்லை. குறிப்பாக தணிக்கைக்குழு அனுமதி அளித்த பிறகு, ஒரு படத்தை தடை செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. அரசியல் சாசனச் சட்டத்தின் பிரிவு 246, ஏழாவது அட்டவணை, பட்டியல் ஒன்று, பதிவு 1, சினிமா படங்களை திரையிடுவதற்கு சான்றிதழ் அளிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. எனவே ஒரு முறை மத்திய தணிக்கைக்குழு, படத்தை திரையிட அனுமதி அளித்த பிறகு, பிற அனைத்தையும் அது கட்டுப்படுத்தும். பிரகாஷ் ஜா வழக்கில், திரைப்பட காட்சி சட்டத்தின் அனைத்து வழிவகைகளையும் சுப்ரீம் கோர்ட் ஆராய்ந்தது. இந்த (தணிக்கைக்குழுவின்) அதிகாரத்தை, அரசியல் சாசனச்சட்டம் மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ள சட்டம்-ஒழுங்கு அதிகாரத்துக்கு எதிர் நிலையில் வைத்துள்ளது. எனவே, தமிழக அரசு இதில் ஒரு முடிவு எடுக்கும் முன்பாக, பிரகாஷ் ஜா வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே அளித்துள்ள தீர்ப்பை மிகக் கவனமாக ஆராய வேண்டும். ஏனெனில், ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக அது மோதுகிற வகையில் அமைந்துவிடக்கூடாது என்றார்.
நன்றி: தட்ஸ் தமிழ்
நன்றி: தட்ஸ் தமிழ்
சினிமாவை நேசிக்கும்,சினிமாவையே சுவாசிக்கும் ஒரு கலைஞனுக்குத் தேவையில்லாத பிரச்சினைகள்!அவர் நம்பாத கடவுள் காப்பாற்றட்டும்!
ReplyDeleteரஜினி இப்போதாவது குரல் கொடுத்தாரே!
ReplyDelete