உங்களின் தமிழ் அறிவு எப்படி? கொஞ்சும் தமிழ்!


உங்களின் தமிழ் அறிவு எப்படி?
சில தமிழ் சொற்களை இந்த பகுதிகளின் வாயிலாக கடந்த வாரங்களில் அறிந்து கொண்டோம்! இந்த முறை கொஞ்சம்  கொஞ்சும் தமிழை பார்ப்போமா? இவை நான் பழைய புத்தகங்களில் படித்து ரசித்தவை! இவை தமிழுக்கே உரியன!  தமிழ் அத்தனை வளமையும் இனிமையும் கொண்டது. இனி நான் ரசித்த தமிழை பார்ப்போமா?
முகம் தெரியும் போது வந்துவிடு!
திருமணமான கொஞ்ச நாள் சென்றதும் மாப்பிள்ளை மாமனார் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றான். போகுமுன் தாயாரிடம், “ நான் எப்பொழுது திரும்பி வர?”  எனக் கேட்டான்.அவன் தாய் எதையும் உள் அர்த்தமுடனும் சுருக்கமாகவும் பேசக்கூடியவள். “முகம் தெரியும் போது வந்துவிடு” என்று கூறி அனுப்பினாள்.
         பையன் புறப்பட்டுச் சென்றான். மாமியார் வீட்டில் நல்லவிதமாக கவனித்தனர்.ஒரு மாதமாயிற்று. மவுசு மெல்லக் குறைந்தது. வாழை இலை தையல் இலை ஆயிற்று.பிறகு கிண்ணத்தில் சாப்பாடு வந்தது. ஒரு நாள் மாப்பிள்ளை சாப்பிடுவதற்கான கிண்ணத்தை குனிந்து எடுத்தான். அன்று கஞ்சிதான் தரப்பட்டது. அதில் அவர் முகம் தெரிந்தது. உடனே தாயார் சொன்னது நினைவுக்கு வந்தது. அன்றே கிளம்பி விட்டான் வீட்டுக்கு!

பெரியவர் ஒருவர் சொல்லக் கேட்டது இது.
  “காலாயுதக் கொடியோன் கையாயுத விழியாள் மாலாயுதம் என்ற மாமணியை உதிர்த்தாள்..ஏன்?” என்று கேட்டார் பெரியவர் ஒருவர் புதிராக.
 புரியவில்லை என்றேன்.
காலையே ஆயுதமாக கொண்டு போரிடுவது சேவல்.சேவற்கொடியோன் முருகன். அவன் ஆயுதம் வேல், மால் ஆயுதம் பெருமாளுடைய ஆயுதம் சங்கு. சங்கிலிருந்து தோன்றுவது முத்து. அதாவது முத்து முத்தாக கண்ணீர் வடித்தாள் ஒரு பெண் என்பதைத்தான் ஒரு தமிழ் சிற்றிலக்கியம் இவ்வாறு சொல்கிறது. அது எந்த இலக்கிய நூல் என்று கண்டுபிடியுங்கள் என்றார்.
  என்னால் முடியவில்லை! உங்களால் முடிந்தால் கண்டுபிடித்து பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

போதுமானது! சிலேடை!

ஒரு முறை சேதுபதி மன்னரை அவரது மாளிகையில் சந்தித்து பேசுவதற்காக உ.வே,சாமிநாதையர் சென்றார். சென்றபோது மன்னர் வறவேற்பறையில் மன்னர் இல்லை. அங்கே மன்னர் அமர தனி ஆசனமும் சந்திக்க வருவோர் அமர தனி ஆசனமும் போடப்பட்டிருந்தன. ஐயர் அங்கிருந்த நீண்ட ஆசனத்தில் அமர்ந்தார். மன்னரின் வருகைக்காக காத்திருந்தார்.
தனக்காக தமிழறிஞர் காத்திருப்பதை பணியாட்கள் மூலம் அறிந்த மன்னர் சேதுபதி நெடுநேரம் காக்க வைத்து விட்டோமே என்று பதட்டத்துடன் வந்தவர் தனது தனி ஆசனத்தில் அமராமல் ஐயர் அமர்ந்த அதே ஆசனத்தில் அவர் பக்கத்திலேயே அமர்ந்தார்.
  மன்னர் தன் பக்கத்தில் அமர்ந்தது கண்டு மகிழ்ந்த சாமிநாதையர் மன்னரிடம் சமஸ்தான அதிபதி அவர்களே! எனக்கு சம ஸ்தானம் தந்தீர்கள் (நிகரான இடம்) என்றார். மன்னர் அவரின் சிலேடையில் மகிழ்ந்தார். இருவரும் நீண்ட நேரம் அளவளாவிய பின்னர் மன்னர் தனது கைக்கெடிகாரத்தைப் பார்த்தார்.குறிப்பறிந்த ஐயர் அவரிடம், “போது மானது”  எனவே “போதுமானது” என்றார். “போதும்” பொழுதும் ஆனது. நேரமும் போதுமானது என்ற அவரின் சிலேடையை மன்னர் வெகுவாக ரசித்தார்.

ரசித்து இருப்பீர்கள்! மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம்! புதிய தமிழ் சொற்களுடன்! நன்றி!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. சிலேடைகள் ரசிக்கும்படி இருந்தது. !

  ReplyDelete
 2. “முகம் தெரியும் போது வந்துவிடு”
  :-)

  ReplyDelete
 3. இப்படி எல்லாம் தமிழ் இருந்து இருக்கிறதா ?
  ஆஹா...சம அந்தஸ்து செம !

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2