கோபால் போட்ட நாடகம்! பாப்பா மலர்!
கோபால் போட்ட நாடகம்! பாப்பா மலர்!
கோபாலைக் காணாது தவித்துப் போனார் அவன் தந்தை முருகேசன். மணி எட்டு ஆகப்போவுதே!
இன்னும் ஸ்கூலில் இருந்து வரக் காணோமே! என்று வாசலுக்கும் வீட்டிற்குமாய் நடந்துகொண்டிருந்தார்.
அன்றாடம் செய்தி தாள்களில் படிக்கும் பல விசயங்கள் நினைவுக்கு வந்து அவரை களேபரப்படுத்திக்
கொண்டு இருந்தன.
என்னதான் ஸ்பெஷல் கிளாஸ் முடித்து
வந்தாலும் ஆறு மணிக்கெல்லாம் வந்துவிடுவானே! இப்போது என்ன ஆயிற்று! எட்டாகிவிட்டதே
இன்னும் காணோமே? என்று மனதிற்குள் நினைத்தவாறே வாசலை எட்டிப்பார்த்தார்.
முருகேசன் மாநகர போக்குவரத்து கழகத்தில்
ஓட்டுனர். அவருக்கு கோபால் ஒரே பிள்ளை.அதனால் பிரியம் அதிகம்.அவன் கேட்பதெல்லாம் வாங்கி
கொடுப்பார். செல்லப்பிள்ளை! அவன் இன்னும் பள்ளியில் இருந்து வரவில்லை. அவனோட பிரெண்ட்ஸ்
நம்பர் ஏதாவது இருந்தா குடு! போன் பண்ணி பார்க்கலாம் என்று மனைவி சிவகாமியிடம் கேட்டார்.
அவளும் பதற்றத்துடன் எப்படியும் ஆறு
ஆறரைக்குள்ள வந்துடுவான்! இன்னிக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே? என்று ஏதாவது நம்பர்
கிடைக்குமா என்று கோபாலின் புத்தக அலமாரியில் தேட ஆரம்பித்தாள்.
அப்போதுதான் உள்ளே நுழைந்தான் கோபால்.
ஏண்டா! கோபால். ஏன் இவ்வளவு லேட்!
உன்னை காணலியேன்னு எவ்வளவு தவிச்சி போயிட்டோம் தெரியுமா? கொஞ்ச நாளாவே லேட்டா வர்றியாமே?
எங்க போய் சுத்திட்டு வரே? என்று கோபத்துடன் கேட்டார் முருகேசன்.
தந்தையின் சந்தேகப்பார்வையை அறிந்து
கொண்டாலும் பயப்படவில்லை கோபால். அப்பா! நீங்க நினைக்கறா மாதிரி நான் ஒண்ணும் எங்கேயும்
போய் சுத்திட்டு வரலை! இப்பல்லாம் ஃப்ரி பாஸ் கொடுத்திட்டதாலே ஸ்கூல் பசங்களை கண்டாலே
பஸ் டிரைவருங்க பஸ்ஸை நிறுத்தறது இல்லே! ஸ்டாப்பை விட்டு தள்ளி போய் நிறுத்தி வேகமா
எடுத்திகிட்டு வந்திடறாங்க!ஏதாவது கேட்டா ஓஸி பாஸ்தானே உங்களை ஏத்திகிட்டு போய் என்ன
பிரயோசனம்னு சொல்றாங்க! பீக் அவர்ல நிறைய ட்ராபிக் வேற அதனாலே பஸ்ஸை புடிச்சி வரது
ரொம்ப கஷ்டமா இருக்கு! அதான் லேட் ஆகுது.
அப்படியா! செய்யறாங்க! நீ வேணா நாளையிலிருந்து
ஆட்டோவில ஸ்கூலுக்கு போயிடறியா? நேரத்துக்கு போய் நேரத்துக்கு வந்திடலாம்! ஏற்பாடு
பண்ணட்டுமா?
என்னைப்போலத்தானே மத்த பசங்களும்!
அவங்க அப்பா அம்மாவும் உங்களை போல பிள்ளைகளை காணோம்னு வருத்தப்பட மாட்டாங்களா? அவங்க
எல்லாரேலெயும் இப்படி ஆட்டோவில போக வசதி இருக்குமா?
சரி இருக்காதுதான்! ஆனா நம்ம வசதியை
நாம பார்க்கலாமே! வேணும்னா இந்த ரூட்ல வர்ற டிரைவர்கிட்ட பேசி பார்க்கறேன்!
அப்பா! சொல்றேன்னு கோபிச்சிக்காதீங்க!
நீங்க எந்த மூஞ்சியோட இந்த ரூட் டிரைவர்கிட்ட பேசுவீங்க?
முருகேசனுக்கு கோபம் தலைக்கேறியது!
என்னடா பேச்சு ஒரு மாதிரி இருக்குது! கோபால்
அதற்கெல்லாம் பயப்படவில்லை! அப்பா முதல்ல தன் குற்றம் களைந்து கொண்டு பிறர் குற்றம்
களையனும்! நம்ம கிட்ட குறை வச்சிகிட்டு மத்தவங்க குறையை களையமுயல கூடாது! அப்ப அசிங்கப்படத்தான்
நேரும்!
நீ என்னடா சொல்றே!
நீங்களும் டிரைவர்தானே! நீங்க கூடத்தான்
ஸ்கூல் பசங்களை கண்டா பஸ்ஸை தள்ளி நிறுத்தறீங்க! அப்புறம் எப்படி இந்த ரூட் டிரைவரை
போய் கேட்பீங்க?
முருகேசனுக்கு சிவுக்கென்றிருந்தது!
உண்மைதான்! பல நேரங்களில் அவர் இப்படி செய்துகொண்டிருந்தார். பள்ளி பிள்ளைகளை ஏற்றினால் வழக்கமான பயணிகளை ஏற்ற
முடியாது பேட்டா குறையும் என்று பிள்ளைகள் நிற்பதைக் கண்டால் தள்ளிப் போய் நிறுத்தி
பயணிகளை இறக்கிவிட்டு வேகமாக சென்றுவிடுவார்.
அப்பா! அந்த ரூட்ல போற பசங்களும்
என்னை மாதிரிதானே! அவங்க அப்பா அம்மாவும் உங்களை மாதிரி பிள்ளைகளை காணோம்னு வேதனை பட
மாட்டாங்களா? என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் உங்களை திட்டறப்போ எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்குத்தெரியுமா?
கோபால்! புரியுது! என்னை திருத்த நீ போட்ட நாடகம் தானே இது! எப்படியோ எனக்கு புத்தி புகட்டிட்டே! இனி நான் ஒழுங்கா
பஸ்ஸை நிறுத்தி பிள்ளைகளை ஏத்திட்டு போறேன்! நீயும் ஒழுங்கா சீக்கிரம் வீட்டுக்கு வந்திடனும்
ஓக்கேயா என்று மகனை முத்தமிட்டார் தந்தை.
தேங்க்யூப்பா! என்று தந்தையை தழுவிக்
கொண்டான் அந்த தனயன்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
மிகவும் டச்சிங்கான கதை சொல்லி இருக்கீங்க. மிகவும் நன்றாக இருக்கிறது . வாழ்த்துக்கள்.
ReplyDelete