பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 23


பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 23

உங்கள் ப்ரிய “பிசாசு”

முன்கதை சுருக்கம்: ராகவனின் நண்பன் வினோத் அழைத்து வரும் பெண் செல்விக்கு பேய் பிடித்திருப்பதாக முஸ்லீம் நகர் தர்காவில் சேர்க்கின்றனர். ஆனால் அவள் அங்கிருந்து தப்பித்து செல்கிறாள்.


முந்தைய பகுதிகள் படிக்க லிங்க்:

  இனி:

     ஆண்டார்குப்பம் பிரதான சாலை அந்த விடியலில் அப்போதுதான் முழித்திருந்தது. ஒன்றிரண்டு டீக்கடைகளில் அப்போதுதான் வியாபாரம் சூடு பிடித்து இருந்தது. அவர்கள் வியாபார மும்முரத்தில் செல்வி அங்கு ஓடி வந்ததையோ பின்னால் வினோத் துரத்தி வந்ததையொ கவனிக்கவில்லை! அவர்கள் வியாபாரத்தில் மும்முரமாக இருந்தார்கள்.
      மூச்சிறைக்க வந்த வினோத் ஒரு டீக்கடையின் முன் போட்டிருந்த பெஞ்சில் வந்து அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டான். இப்போதுதான் அவனை எல்லோரும் கவனித்தார்கள். அருகில் இருந்த ஒருவர் ஏன் தம்பி மூச்சு வாங்குது? ஓடி வந்தீங்க போல! இவன் கடை டீ குடிக்க அவ்வளவு அவசரமா? என்று அந்த அதிகாலையிலேயே கடுப்படித்தார்.
   வினோத் வேறு சமயமாய் இருந்தால் பதிலுக்கு ஏதாவது சொல்லியிருப்பான். இப்போது ஒன்றும் கூறவில்லை. மெலிதாய் புன்னகைத்தான். இதற்குள் டீக்கடை மாஸ்டர் யோவ்! என்ன நக்கலா? என்று அவர் மீது பாய்ந்தான்.
     ஒரு டீ கொடுங்க பாஸ் என்ற வினோத்  அடுத்து என்ன செய்வது என்று யோசித்தான். செல்வி எங்கு போயிருப்பாள். நத்தம் சென்றிருப்பாளா? அல்லது பழிவாங்குகிறேன் என்று வேறு எங்காவது சென்றிருப்பாளோ? அப்படி வேறு எங்காவது சென்றால் எப்படி அவளை கண்டுபிடிப்பது? என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே தர்காவில் இருந்து அந்த பாய் வந்து சேர்ந்தார். என்ன தம்பி சாவகாசமா டீக்கடையிலே நின்னுட்டீங்க? செல்வியை பிடிக்க முடியலையா? என்று கேட்டார்.
   எங்க பாய்! அவன் சிறுத்தை வேகத்தில இல்ல ஓடினா. ஒரு பஸ்ஸில ஏறி போயிட்டா! டீ ஒண்ணு எக்ஸ்ட்ரா போடுப்பா பாயுக்கு என்றான் வினோத்.
    அந்த டீக்கடை மாஸ்டர் இரண்டு கப் டீ சூடாக போட்டுக் கொடுக்கவும் அதை அருந்தியபடியே இருவரும்  அமர்ந்தனர்.
   அடுத்து என்ன செய்யறது பாய்?
யோசிப்போம்! செல்வி எந்த  ஊருக்கு போக வாய்ப்பிருக்கு!  இப்ப நத்தம் தான் போயிருக்கணும். உங்க ப்ரெண்டுக்கு போன் போட்டு அலர்ட் பண்ணுங்க! அவ அங்க போகாத பட்சத்தில வேற எங்க போயிருப்பான்னு கண்டுபிடிக்கணும்.
   செல்வியோட பேரண்ட்ஸ் வர்ற சமயத்துல அவ காணாம போயிட்டான்னு சொன்னா நல்லா இருக்காது பாய்!
   நல்லா இருக்காதுதான்! ஆனா நடந்து போன விசயத்துக்கு நாம ஒண்ணும் பண்ண முடியாது. முதல்ல நீங்க ராகவன் சாருக்கு போன் பண்ணுங்க!
   வினோத் டீக்கடையில் காசை கொடுத்து விட்டு செல்போனில் ராகவன் எண்ணை தேடி அழுத்தினான். சில வினாடிகளுக்கு பிறகு ரிங்க் போனது. அலோ என்ற ராகவனின் குரல் கேட்டதும் வினோத், ராகவா! நான் வினோத் பேசறேன்! செல்வி இங்கிருந்து தப்பிச்சி ஒரு பஸ்ஸில ஏறி கிளம்பிட்டா! ஒரு வேளை அங்க வந்தாலும் வரலாம்! அப்படி வந்தாள்னா உடனே எனக்கு போன் பண்ணு.
   என்னது செல்வி தப்பிச்சிட்டாளா? என்ன சொல்றீங்க?
 ஆமாம்டா! இன்னிக்கு நைட் நடந்தது எல்லாம் விசித்திரம்! அதை அப்புறம் சொல்றேன்! காலையில அவ முஸ்லீம் நகரை விட்டு ஓடிவந்து  ஒரு பஸ்சில ஏறி தப்பிச்சிட்டா! என்னால அவளை மடக்க முடியலை! இப்ப அவ செல்வியா இருந்தா பயமில்லை! அவமேல ப்ரவீணாவோட ஆவி இருக்கறதால உஷாரா இருக்கணும். எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். அதனால எச்சரிக்கையா இருக்கணும். அவ வந்தா ஜாக்கிரதையா ஹேண்டில் பண்ணு. எங்கயும் போக விடாதே! உடனே எனக்கு கால் பண்ணு.
   மறுமுனையில் சரிடா! நான் பாத்துக்கறேன்! ஆமா பாய் என்ன சொல்றார்?
 பாய் என் கூடத்தான் இருக்காரு! அவர்தான் உனக்கு போன் பண்ண சொன்னதே! அடுத்து என்ன பண்றதுன்னு இனிமேதான் யோசிக்கணும். நான் கொஞ்ச  நேரத்துல புறப்பட்டு அங்க வரேன்.
    சரிடா வைச்சிடறேன்!
ராகவன் போனை கட் செய்ததும் இருவரும் மீண்டும் நடந்து தர்காவிற்கு வந்து சேர்ந்தனர். பாய்! இப்படி எல்லாம் கூட நடக்குமா? ஆவி ஒருத்தரோட உடம்பில புகுந்து இப்படி பழி வாங்க வாய்ப்பிருக்கா?
   தன்னுடைய ஆசை நிறைவேறாம உயிரை விட்ட ஆத்மாக்கள் இப்படி அலைய வாய்ப்பிருக்கு. செல்வியோட உடம்பில புகுந்து இருக்கற ப்ரவீணா ஆத்மா அப்படிப்பட்ட  ஒரு ஆத்மா. அது தன்னுடைய பிறவியை பாதியில் முடிச்சிகிட்டதாலே இப்படி அலையுது.
   பாய் நீங்க நினைத்து இருந்தா இந்த ஆவியை அடக்கி இருக்கலாம்தானே! வினோத் சட்டென்று கேட்கவும் பதில் சொல்ல முடியாமல் திகைத்தார் அந்த பாய்!


என் காரியத்தை கெடுத்தியேடா பாவி! என்று ரவி முகேஷ் மேல் பாயவும் சுவாமிஜி அவனை நோக்கி ஒரு கையை அசைத்தார் அப்படியே நின்றான் ரவி!
  அவன் எவ்வளவு முயற்சித்தும் அவனால் சிறிதும் அசைய முடியவில்லை! அவனால் சத்தம் கூட போட முடியவில்லை! சுவாமிஜி ஒரு கேலி புன்னகை  புரிந்தார். மாதரச்சத்! பொடிப்பையா! என்கிட்டேயே வேலையை காட்டறியே!  ம்! உண்மையை சொல்லு! என்று ஒரு துளி விபூதியை எடுத்து அவன் முகத்தில் பூசினார்.
    இப்போது அவனால் பேச முடிந்தது ஆனால் அசைய முடியவில்லை! ரவியின் கண்களில் கண்ணீர் வந்தது. அழாதே! உண்மையை சொல்!  உன்னை பிடித்திருப்பது பேய் இல்லை என்று எனக்கு தெரியும்? ஏன் இப்படி செய்தாய்? அதை சொல்லிவிடு! உன் மீதுள்ள இரக்கத்தால் கேட்கிறேன்! வீணாக உன் வாழ்க்கையை நாசமாக்கி கொள்ளாதே! ஏன் இத்தனை கொலைகள் செய்தாய்?
   ரவி அப்படியே குலுங்கி குலுங்கி அழத்தொடங்கினான்!
 அழாதே! எதுவோ உன்னை பாதித்து இருக்கிறது! இல்லையென்றால் இப்படி செய்ய மாட்டாய்! அது என்ன? நான் சொல்லட்டுமா? இல்லை நீயே சொல்லுகிறாயா?
 ரவி மவுனமாக இருந்தான்!
  ரவி உன் வாயால் உண்மை வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்! உன் மனசும் என்னிடம் சொல்வதால் கொஞ்சம் சுமையை இறக்கி வைத்தார் போல இருக்கும் அல்லவா? நீ பயப்படாதே! நீ செய்த கொலைகளில் நியாயம் இருக்கிறது என்று எனக்குத் தெரியும்! உன்னை காப்பாற்றவும் என்னால் முடியும்! தைரியமாக சொல்!
   முகேஷ் வியந்து போய் நின்றிருந்தான்! சித்தப்பா என்ன சொல்கிறார்! அப்போது ரவி இத்தனை நாள் பேய் பிடித்திருப்பதாக நடித்தானா? அவனால் நம்பவே முடியவில்லை!
   முகேஷ்! என்னை மன்னித்துவிடு! சுவாமிஜி நீங்களும்தான்!  இத்தனையும் என் அக்காவிற்காகத்தான் செய்தேன்!
  அக்காவா?
ஆம்! என் அக்கா! அவளை நீ பார்த்திருக்க வாய்ப்பே இல்லை! அவள் இறந்த பிறகுதானே நானே பஞ்செட்டிக்கு வந்தேன்!
  உன் அக்காவா? யார் அது?

ப்ரவீணா!
  குலுங்கி குலுங்கி அழுதான் ரவி!

                                   மிரட்டும்(23)

தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள் நன்றி!


Comments

 1. இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 2. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்துக்கும்

  ReplyDelete
 3. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா

  ReplyDelete
 4. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  ReplyDelete
 5. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! மனம் நிறைவாய் வாழ வாழ்த்துக்கள்!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2