கண்ணா லட்டு தின்ன ஆசையா? கமலின் தவிப்பு! பாப்பா மலர்!


கண்ணா லட்டு தின்ன ஆசையா? கமலின் தவிப்பு! பாப்பா மலர்!

“கமல்! கமல்! எழுந்திருடா! மணி ஏழு ஆகப்போவுது! இன்னும் அரை மணி நேரத்துல ஸ்கூல் வேன் வந்திரும்!”
“இரும்மா! இன்னும் ஒரு பத்து நிமிஷம் படுத்து தூங்கிட்டு வரேன்!”
“ஆமாம் இப்படியே தூங்கிகிட்டு இருந்தா அப்புறம் எப்படி ஸ்கூலூக்கு போறது?”
 “எழுந்து பத்து நிமிசத்துல ரெடியாகிடுவேன்மா!”
“என்னத்தை ரெடியாகிடுவே? ஒழுங்கா பல் தேய்க்க மாட்டே! காக்கா குளியல் குளிச்சிட்டு டிபன் சாப்பிடாமா அரக்க பரக்க வேனுக்கு ஓடுவே?”
 “ இப்படி பேசியே என் தூக்கத்தை கெடுத்திட்டேம்மா!” என்று எழுந்து வந்தான் கமல்.
  இது அந்த வீட்டில் அன்றாடம் நடக்கும் தாய்க்கும் மகனுக்குமான உரையாடல்! கமல் பன்னிரண்டு வயது சிறுவன். பக்கத்து கான்வெண்டில் ஏழாம் வகுப்பு படிக்கிறான். எல்லாவற்றிலும் கெட்டிக்காரன். படிப்பில் படு சுட்டியாக இருப்பான். ஆனால் இந்த தூக்கம் மட்டும் அவனுக்கு ரொம்ப பிடிக்கும்! காலை 7.30 மணிக்கு பள்ளி வேன் வரும் என்றால் 7.15 வரை தூங்கிக் கொண்டிருப்பான். அப்புறம் அந்த பதினைந்து நிமிடத்தில் அரக்க பரக்க ரெடியாகி பல் துலக்காமல்,சரியாக உண்ணாமல் வேனைப்பிடிக்க ஓடுவான். இதனால் தாய்க்கும் மகனுக்கும் தினமும் வீட்டில் ரகளையே நடக்கும்.
      சரியாக ஏழு இருபத்தைந்துக்கு டைனிங் டேபிளில் வந்து அமர்ந்த மகனை முறைத்தாள் அம்மா! “காக்கா குளியல் சரி! ஆனா இந்த பல்லை துலக்கக் கூடாதா? பாரு பல்லெல்லாம் மஞ்சள் கறை!”
  “ஏம்மா! மனுசனுங்க தான் பல்லு விளக்கறோம்! ஆடு மாடெல்லாம் விலக்குதா? அதுங்க நல்லாத்தானே இருக்கு! என்னை மட்டும் குறை சொல்லலேன்னா உனக்கு தூக்கமே வராதா?”
“ சரி எக்கேடாவது கெட்டுத்தொலை! ஒரு நாள் இல்லேன்னா ஒரு நாள் இந்த அம்மா சொன்னது உனக்கு உறைக்கும்”
  “அப்ப உறைக்கட்டும்! இப்ப சட்னியிலே உறைப்பே இல்லை! கொஞ்சம் உப்ப போடு”
இதற்குள் வேன் சத்தம் கேட்க பாதியிலேயே எழுந்து ஓடினான் கமல்!
     இது தினசரி நடக்கும் கூத்துதான்! மாதத்தில் பாதி நாள் பல் துலக்காமல் பற்கள் மஞ்சள் படிந்து கிடந்தன. பள்ளியிலும் இதை கேட்க மாட்டார்களா? இவனை எப்படி திருத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தாள் அந்த தாய்.
     பள்ளியிலிருந்து திரும்பியிருந்தான் கமல்! அவனது தாய் காபி கலந்து கொண்டிருந்தாள். ‘என்னம்மா நீ காபி கலக்க இவ்வளவு நேரமா? ஒரே டயர்டா இருக்கு தூக்கமா வருது? சீக்கிரம் கொண்டா!”
  “இருடா வரேன்!”
கமல் அப்படியே கொட்டாவி விட அவன் வாயில் இருந்து ஒரு குள்ளன் கீழே விழுந்தான்.
  கமலுக்கு ஆச்சர்யம்! “ஏய் யாரு நீ என் வாயிலிருந்து கீழேவிழுற?
  “நான் தான் உங்கள் அடிமை! நீங்கள் தான் எனக்கு உயிர் கொடுத்த தெய்வம்” என்றது அந்த குள்ள உருவம்!
  “ஆமாம் நீ எப்படி என் வாயிலிருந்து வந்தே?”
“நீங்கதான் பல் துலக்காம என்னை வளத்து விட்டீங்க!”
“அடிமைன்னு சொல்ற? நான் எது கேட்டாலும் நீ தருவியா?”
“என்ன எஜமான் இப்படி கேட்டுட்டீங்க? நீங்க எது கேட்டாலும் நான் தருவேன்! உங்களுக்கு இப்போ என்ன வேணும்?”
  “எனக்கு லட்டு தின்னனும் ஆசையா இருக்கு! லட்டு வர வை பாக்கலாம்!”
  குள்ளன் கண்ணை மூடிக்கொண்டு “கொய், முய் சய்” என்று ஏதோ கூற லட்டு ஒன்று பறந்து வந்து டேபிளில் உட்கார்ந்தது.
   “எஜமான் உங்களுக்குத்தான் லட்டு சாப்பிடுங்க!”
குள்ளன் கூற, எடுத்து ஒரு கடி கடித்தான். மறுகணம் ஐயோ! அப்பா ! என் பல்லு போச்சே! என்றான் அவனது முன் பல் ஒன்றல்ல இரண்டும் உடைந்து கையில் வந்தது.
  “டேய் குள்ளா! எங்கேடா இருந்து வந்தே? என்னோட பல்லை உடைச்சிட்டே!”
  “எஜமான்! நான் உடைக்கலை! நீங்க தான் உடைச்சிட்டீங்க!”
 “டேய்! மரியாதையா என் பல்லை ஒட்டவை!”
  “எஜமான் அது முடியாது! என்னால புதுசா ஏதாவது கொண்டு வர முடியுமே தவிர ஒட்ட வைக்க முடியாது!”
  “அப்ப புதுசா என் பல்லை முளைக்க வை!”
“அதுவும் இப்ப முடியாது எஜமான்! ஒரு நாளைக்கு ஒரு முறைதான் என் மந்திரம் பலிக்கும்!”
 “அப்ப நான் ஓட்டை பல்லோடதான் ஸ்கூலுக்கு போகனுமா? பசங்க கேலி பண்ணுவாங்களே!”
குள்ளன் பதில் சொல்லாமல் மறைந்தான்.
  மறுநாள் பள்ளியில்! டேய்! மடை திறந்துடுச்சா! ஓட்டை பல்லா!  என்று அனைவரும் கமலை சூழ்ந்து கொண்டனர்.
  “என்னடா கமல்! இப்ப போய் உன் பல்லு விழுந்திருக்கு! அதுவும் ஒரே சமயத்துல ரெண்டு பல்லு! ராசிக்கார பையந்தான் நீ”
 “ டேய் ஓட்டை வாயா! இங்க வாடா!’ ஒருவன் அழைக்க கமல் முறைத்தான்.
“ஓட்டை வாயனுக்கு பாத்தியா எவ்வளவு கோபம்?”
  “கமல்! உனக்கு பிடிக்குமேன்னு  லட்டு கொண்டாந்திருக்கேன்! இந்தா சாப்பிடு!” அவனது நண்பன் குள்ள மணி கொண்டு வர “நோ! என்றபடி தட்டிவிட்டான் கமல்.
  “என்னடா கமல்! என்ன ஆச்சு!நான் காபி கலந்து வர்றதுக்குள்ளே குட்டி தூக்கம் போட்டு அதுலேயும் கனவா?” அவனது அம்மா கேட்க
   “ச்சே! எல்லாம் கனவா? பயங்கரமா இல்லே இருக்கு!” என்று மனதினுள் முணுமுணுத்துக் கொண்டான்.
  ஒண்ணுமில்லேம்மா! என்று காபியை குடித்தவன் மீண்டும் கனவை அசை போட்டான்.
மறுநாள் காலை அதிசயமாய் சீக்கிரம் எழுந்து பல் துலக்கும் கமலை பார்த்து அவளது அம்மா ஆச்சர்யப்பட்டாள். ஆனால் அது நமக்கு ஆச்சர்யம் இல்லை தானே!

டிஸ்கி} இதுவரை பாப்பா மலரில் நான் சிறுவயதில் கையெழுத்து பத்திரிக்கை நடத்திய போது எழுதிய கதைகளும் செவிவழி கதைகளும் பதிவிட்டேன்! இது இப்பொழுது நேற்று இரவு கருவில் உதித்து இன்று காலை சுடசுட நானே எழுதிய கதை! என் மகள் வேத ஜனனி பல்துலக்க மறுத்து அடம்பிடிப்பாள். அவளுக்கு நேற்று இரவு கதை சொன்னேன். அதை கொஞ்சம் மாற்றி இப்பொழுது பதிவிட்டுள்ளேன்! தலைப்பு சும்மா அட்ராசிட்டிக்கு அப்பத்தானே உள்ளே வருவீங்க! உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. நல்லா தலைப்பு வைக்கிராங்கய்யா !
    ஆனாலும் பாப்பா கதை ஓகே.

    ReplyDelete
  2. கதை நல்லாருக்கு... நல்லா பல் தேய்க்காத பசங்களுக்கு சொல்லலாம்...

    ReplyDelete
  3. கதை ரொம்ப நல்லா இருக்கு....தலைப்பை மட்டும் ரொம்ப யோசித்து விட்டிங்க போல!!!!

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2