எறும்பும் ஈயும்! பாப்பாமலர்!


எறும்பும் ஈயும்! பாப்பாமலர்!
(செவிவழிக்கதை)
ஒரு ஊரில் எறும்பும் ஈயும் கணவன் மனைவியா வாழ்ந்து வந்துச்சுங்க. காலை சாப்பாட்டுக்கு அரிசி தேட எறும்பு கிளம்புச்சு. ‘தன்னோட கணவனுக்கு கறின்னா ரொம்ப பிடிக்குமே’ ன்னு ஈ கறி தேட போச்சு.
 எறும்பு அரிசிய கொண்டுவந்து சாப்பாடு செஞ்சு முடிச்சிட்டு மறுபடியும் வெளியே போயிடுச்சு. ஈ வந்து குழம்பு செஞ்சது. குழம்பு கொதிக்குதான்னு சட்டிக்குள்ள எட்டிப்பார்க்க போக அதோத கால் தவறி ஈ குழம்புக்குள்ள விழுந்துடுச்சு! அவ்வளவுதான்! ஈயோட கதையும் அதோட முடிஞ்சு போச்சு.
   வெளியே போயிருந்த எறும்பு வந்து ஈயக் கூப்புட்டு கூப்புட்டுப் பார்த்துச்சு. பதிலே வரலை. வீடு முழுக்க தேடுச்சு. எங்கேயும் ஈயக்காணோம். கடைசியா வந்து பார்த்தா குழம்புக்குள்ள செத்துக்கிடக்குது! ‘சரி நம்ம மனைவியே செத்து போயிட்டா! அப்படின்னு துக்கப்பட்டுகிட்டு தூக்குப் போட்டு சாகுறதுக்கு எறும்பு தயாராச்சு.
  அத ஒரு காக்கா எப்படியோ பார்த்துடுச்சு!
எறும்பண்ணா! எறும்பண்ணா! ஏன் நீ தூக்குப் போட்டுக்க போறே?ன்னு காக்கா கேட்டுச்சு!
எம் மனைவியே செத்துட்டா அப்புறம் நான் எதுக்காக வாழனும்னுதான் தூக்குப்போட்டுக்க போறேன்னு எறும்பு பாவமா சொல்லிட்டு ஒரு ஒப்பாரி வச்சது.
 “ ஈ சாக எறும்பு நான் தூக்கு போட
 உன்னோட கண்ணு குருடாகட்டும்!”
உடனே காக்காவோட கண்ணு குருடாயிருச்சு.
காக்கா நேரா  ஒரு ஆலமரத்துப் பக்கம் பறந்து போச்சு. அந்த ஆலமரம் , என்ன காக்கா அண்ணே?! இப்ப நல்லாத்தானே பறந்து போனீங்க. இப்ப என்னடான்னா குருடா வர்றீங்களே”ன்னு கவலையா கேட்டுச்சு.
   “அது ஒரு பெரிய கதை”ன்னுட்டு மரத்த பார்த்து காக்கா ஒரு பாட்டு பாடிச்சு.
“ஈயக்கா சாக எறும்பண்ணன் தூக்குப் போட
எங்கண்ணு குருடாக
இந்த ஆலமரம் விழுக!”
உடனே ஆலமரம் கீழ சாய்ஞ்சது.
அந்த சமயமா அந்தப்பக்கம் ஒரு யானை எப்பவும் போல மரத்து நிழல்ல படுக்க வந்துச்சு. வந்து பார்த்தா ஆலமரம் சாய்ஞ்சு கிடக்குது!
“என்ன ஆலமரமே நீ நேத்துக்கூட நல்லாதானே இருந்தே? இப்ப ஏன் சாய்ஞ்சு கிடக்கிற”ன்னு ஆலமரத்த யானை ஆச்சர்யமா கேட்டுச்சு.
  அது ஒரு பெரிய கதை!ன்னுட்டு யானையை பார்த்து மரம் ஒரு பாட்டுய் பாடிச்சு
“ ஈயக்கா சாக, எறும்பண்ணன் தூக்குப் போட
 காக்கா கண்ணு குருடா போக
நான் சாய்ஞ்சு கீழே விழ, உன்னோட தும்பிக்கை உடையட்டும்!
யானையோட தும்பிக்கை பட்டுன்னு ரெண்டா உடைஞ்சி போச்சு. உடைஞ்ச தும்பிக்கையோட யானை தண்ணி குடிக்க குளத்துக்கு போச்சு. யானையோட தும்பிக்கை உடைஞ்சி கிடக்கிறதை பார்த்த குளம் எண்ணன்னே இப்ப நல்லாத்தானே போனீங்க! அதுக்குள்ள என்ன ஆச்சு? தும்பிக்கை உடைஞ்சி வர்றீங்களேன்னு அக்கறையோட கேட்டுச்சு.
 அது ஒரு பெரியகதைன்னுட்டு குளத்த பார்த்து யானை ஒரு பாட்டு பாடிச்சு!
“ ஈயக்கா சாக எறும்பண்ணன் தூக்குப்போட
 காக்கா கண்ணு குருடாக
ஆலமரம் சாய எந்தும்பிக்கை உடைய
குளத்து தண்ணி வத்தி போகட்டும்!

  யானை சொன்ன உடனே குளத்து தண்ணி வத்தி போச்சு. அந்த நேரம் பாத்து அந்த குளத்துல தண்ணி எடுக்கிறதுக்கு ஒரு பெண் குடத்தோட வந்தாங்க. பார்த்தா குளத்துல தண்ணி சுத்தமா இல்ல. குளமே! குளமே!! இப்பத்தானே நிறைய தண்ணியோட இருந்த! என்ன ஆச்சு? ன்னு அவங்க பயந்து போய் கேட்டாங்க.
 அது ஒரு பெரிய கதை!ன்னுட்டு அந்த பெண்ணை பார்த்து குளம் தன் பங்குக்கு ஒரு பாட்டு படிச்சது.
 “ஈயக்கா சாக எறும்பண்ணன் தூக்குப் போட
  காக்கா கண்ணு குருடாக
ஆலமரம் சாய, யானை தும்பிக்கை உடைய
நான் வத்திப்போக உன்னோட தலை மொட்டையாகட்டும்!
 இப்படி சொன்ன உடனே அந்த பொண்ணோட தலை மொட்டையாகிடுச்சு! தன்னோட தலை மொட்டையாகிடுச்சே அழுதுகிட்டே அந்த பொண்ணு வீட்டுக்கு போனாங்க.
 அவங்கம்மா பார்த்துட்டு என்னம்மா ஆச்சு? இப்பத்தானே நல்லா போனேன்னு கேட்டாங்க!
 அது ஒரு பெரிய கதைன்னு அம்மாவை பார்த்து அந்த பொண்ணு பாட்டு பாடிச்சு.
“ஈயக்கா சாக எறும்பண்ணன் தூக்குப்போட
காக்கா கண்ணு குருடாக
ஆலமரம் சாய யானை தும்பிக்கை உடைய
குளத்து தண்ணி வத்திப் போக
எந்தலை மொட்டையாக
நீங்க போய் பரண்ல உட்காருங்க!
அப்படி சொன்னதும் அவங்கம்மா போய் பரண் மேல உட்கார்ந்துகிட்டாங்க கொஞ்ச நேரத்துல அவங்க புருஷன் வேலை முடிஞ்சி வந்தாரு. வந்து பார்த்தா அவரோட மனைவி பரண் மேல உட்காந்துகிட்டு இருக்காங்க!
  ஏம்மா! காலையிலே நல்லாத்தானே இருந்த. இப்ப எதுக்கு பரண்ல உட்கார்ந்துகிட்டு இருக்கிற:”ன்னு கேட்டாரு.
 அது ஒரு பெரிய கதைன்னுட்டு புருஷணை பார்த்து அந்தம்மா ஒரு பாட்டு படிச்சாங்க!
  “ ஈயக்கா சாக எறும்பண்ணன் தூக்குப்போட
காக்கா கண்ணு குருடாக ஆலமரம் சாய
யானை தும்பிக்கை உடைய குளத்து தண்ணி வத்திப் போக
நம்மோட தலை மொட்டையாக
நான் பரண் மேல கிடக்கிறேன்! நீங்க எப்ப வந்தீங்க?

 நானா? நாளைக்குப் போய் நேத்து வந்தேன்! வந்து கஞ்சிய ஊத்துவியா?ன்னு அவரு அலுப்பா சொன்னதும்தான் அந்தம்மா பரண்ல இருந்து இறங்கி வந்து தன்னோட புருஷனுக்கும் மகளுக்கும் கஞ்சி ஊத்தி கொடுத்திட்டு அவங்களும் குடிச்சாங்க!

டிஸ்கி} சில நாட்களாக உடல் நலம் சரியில்லை! தலைவலி மற்றும் காய்ச்சல்! மற்றும் பணிச்சுமை அதிகம்! அதனால் மற்ற வலைப்பூக்களை அதிகம் பார்வையிட முடியவில்லை! பொங்கல் கழிந்ததும் வழி பிறக்கும் என நினைக்கிறேன்! அதுவரை பொறுத்தருள்க! நன்றி!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. செவி வழிக்கதையா ஒருவருக்கு ஒருவர் சாபம் கொடுதுக்கிட்டே இருக்காங்க. பரவால்லே. நல்லா சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  2. அருமை! பகிர்விற்கு நன்றி சகோ!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2