சித்ராபவுர்ணமி விரதம்

சித்ரபுத்திரன்: இவ்வுலகின் பாவ புண்ணிபலனை அறிய சிவபெருமான் பார்வதி தேவியின் மூலம் தங்கப்பலகை கொண்டு வரச் செய்து அதில் சித்திரம் அமைத்தார். இதனை கண்டு அதிசயித்த பார்வதி இந்த சித்திரத்தை பேச வைக்க சிவனிடம் வேண்டினார். சிவனும் மந்திர உபதேசம் செய்து அந்த சித்திரத்திற்கு பேசும் சக்தியை கொடுத்து சித்ரபுத்திரன் என்ற பெயரும் வைத்தார். இந்த சித்திர புத்திரன் (சித்ரகுப்தன்) சித்ரா பவுர்ணமி தினத்தில் அவதரித்தார்.
சித்ரா பவுர்ணமி: இந்த நாளில் மரணதேவனின் விசேஷ பிரதிநிதியான சித்ரகுப்தனுக்கு விசேஷ வழிபாடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமி தினத்தில் செய்யப்படும் இந்த பூஜையால் மேல் உலகில் உள்ள தேவர்கள் திருப்தியடைந்து மனிதர்களின் செயல்களை மிகுந்த பரிவுடன் தீர்மானிக்கிறார்கள்.
பூஜை: சித்ரா பவுர்ணமியன்று செய்யப்படும் விரிவான பூஜையைப் பற்றி பல நூல்கள் தெரிவித்திருந்தாலும், நாம் எளிமையாக ஒரு கலசம் அல்லது விக்ரகத்தின் தேவதையை ஆவாஹனம் செய்து
சித்ர குப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபுத்ர தாரிணம்.
சித்ரா ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்
என்ற சித்ரகுப்தனின் ஸ்லோகத்தை தியானம் செய்து தீபம், தூபம் மற்றும் பூக்களால் அர்ச்சிப்பதுடன், நாம் செய்த தவறுகளை மன்னிக்க மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். வாசனைப் பொருள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். மேலும் இந்த நாளில் உப்பு, பசும்பால், தயிர் இவைகளை நீக்கி நாம் விரதம் இருப்பதுடன் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்து இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவோம்.
பூஜையின் பலன்: சித்ரகுப்த என்பது மறைந்துள்ள படம் எனப்படும். இந்த பூமியில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் நமக்கு மேலான சக்தி ஒன்று (நமக்கு தெரியாமலேயே நமது தோளில் சித்ரகுப்தர்களாக அமர்ந்து) இடைவிடாமல் கண்காணிக்கிறது. இந்த எண்ணத்தை நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்வதே சித்ரா பவுர்ணமி பூஜையின் மானசீக பலன் ஆகும்.
கோயில்: இந்த சித்ரகுப்தனுக்கென காஞ்சிபுரத்தில் ஒரு ஆலயமும், திருவண்ணாமலையில் ஒரு சன்னதியும் உள்ளது. இதே போல் தேனி மாவட்டம் போடி அருகே கோடங்கிப்பட்டியிலும் ஒரு கோயில் உள்ளது. எமன் தென்திசைக்கு அதிபதி என்பதால் சித்ரா பவுர்ணமி அன்று போடப்படும் கோலங்கள் தென்புற வாசலை அடைப்பது போல் கோலம் போடும் வழக்கம் இன்றும் உள்ளது. சித்ரா பவுர்ணமி மற்ற பவுர்ணமியைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்தது. இறைவன் புரிந்த அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் முதல் திருவிளையாடல் இந்திரன் பழி தீர்த்த படலம் என்பது தான். இந்த திருவிளையாடல் நடந்தது சித்ரா பவுர்ணமி தினத்தன்று தான். இத்தினத்தில் தான் இந்திரன் தன் பாவம் போக்க கடம்பவனத்தை அடைந்து அங்கிருந்த சுயம்பு மூர்த்திக்கு இந்திரவிமானம் அமைத்து வழிபட்டு தன் பாவத்தை போக்கிக் கொண்டான். இன்றும் கூட சித்ராபவுர்ணமி இரவில் தேவேந்திரனே வந்து மதுரை சுந்தரேஸ்வரருக்கு பூஜை செய்வதாக ஐதீகம். அத்துடன் சித்ரா பவுர்ணமி தினத்தில் தான் மதுரையில் சித்திரை திருவிழா நடக்கிறது. பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்ளும் இந்த விழா நாயகனான கள்ளழகர் இத்தினத்தில் தான் சிவன் உருவாக்கிய வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார்.

நன்றி தினமலர் கோயில்கள்


Comments

  1. இந்த நாளில் உப்பு, பசும்பால், தயிர் இவைகளை நீக்கி நாம் விரதம் இருப்பதுடன் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்து இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவோம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!