பசுமை நிறைந்த நினைவுகள் பகுதி 12

பசுமை நிறைந்த நினைவுகள் பகுதி 12

நேருசிறுவர் சங்கம் என்ற அமைப்பினை என்னுடைய 13வது வயதில் துவக்கிய நான் அந்த அமைப்பின் சார்பாக ஏதாவது விழாக்களை சிலவருடங்களுக்குப் பின் கொண்டாடி வந்தேன். ஆசான பூதூரை விட்டு நத்தம் வந்த பின் இந்த அமைப்பில் புதிய நண்பர்கள் சேர்ந்தார்கள். இதில் குறிப்பிடத் தக்கவர்கள் ராஜி என்ற ராஜேந்திரகுமாரும் அவரது தம்பி ஜெயேந்திர குமாரும்.
    இவர்கள் என் அமைப்பில் சேர்ந்த பின் நமது அமைப்பின் சார்பாக விழா எடுக்கலாம் என்று சொல்லி சுதந்திர தின விழா குழந்தைகள் தின விழா என ஏதாவது ஒரு சிறு விழா நடத்தி குழந்தைகளுக்கு (நாங்கள் மட்டும் என்ன பெரியவர்களா?) சிறிய அளவில் பரிசு அளித்து வந்தோம். ராஜி எங்கள் குருப்பிற்கு வந்தபின் அவரது நட்பு வட்டமும் எங்கள் கூட்டணியில் இணைந்தது. ஒரு கால கட்டத்தில்  எங்கள் அனைவருக்கும் வயது கூட சிறுவர் சங்கம் நண்பர்கள் சங்கமாக மாறியது. இந்த நண்பர்கள் சங்கத்தின் 10வது ஆண்டு விழாவை கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாட தீர்மானித்தோம்.
   இதற்காக உள்ளூரிலேயே படிக்கும் சில மாணவ மாணவிகளுக்கு டிரெய்னிங் கொடுத்து ஆடவிடுவோம். என்னுடைய தந்தை சவுண்ட் சர்வீஸ் வைத்து இருந்தார் அப்போது! எனவே டேப்ரிகார்டருக்கும் கேசட்களுக்கும் பஞ்சமில்லை! ஒரு பத்து பதினைந்து சினிமா பாடல்கள் தேர்வு செய்து நடனமாட ஒத்திகை ஆரம்பித்துவிட்டோம் ஒரு மாதம் முன்னரே. என்னுடைய தங்கைகள்தான் நடனமாஸ்டர்கள். கோயில் மரநிழலில் இந்த நடன ஒத்திகைகள் நடக்கும். இது தவிர விளையாட்டு போட்டிகள் நாடகம் க்விஸ் என்று பல்வேறு வகையான போட்டிகள் ஆண்டு விழாவில் உண்டு.
    எங்கள் சங்கத்தில் இருந்த ஒரு நண்பருக்கு ஆட வந்த ஒரு பெண்ணின் மீது கண்டதும் காதலாகிவிட்டது. சொன்னால் வியப்பீர்கள் நண்பர் படித்துக் கொண்டிருந்தது பத்தாம் வகுப்பு ஆட வந்த பெண் படித்தது எட்டாம் வகுப்பு. நிகழ்ச்சியை நடத்தும் நாங்கள் கல்லூரி படிப்பை முடித்தும் சிலர் தொடர்ந்து கொண்டும் இருந்தோம்.
   அந்த நண்பருக்கு தன் காதலை அந்த பெண்ணிடம் சொல்ல தயக்கம்! எனவே தன்னுடைய நண்பரை அந்த பெண்ணிடம் தூது அனுப்பினார். இந்த நண்பர் சோஷியல் பேர்வழி யாருடனும் கலந்து விடுவார். இந்த மூவருமே உள்ளூர்க்காரர்கள் வேறு. சோஷியல் நண்பர் நேராகவே அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுவிட்டார். அந்த பெண்ணின் அண்ணன்கள் இவருடன் படிப்பவர்கள். எனவே அதை சாக்காக வைத்து பெண் வீட்டிற்கு சென்று விட்டார். பெண்ணிடம் தன் நண்பனின் காதலை சொல்லியும் விட அந்த பெண் கேட்ட கேள்வி என்ன தெரியுமா?
   ஏன்? அவன் லவ் பண்றான்னு வந்து சொல்றியே? நீ என்னை லவ் பண்ண மாட்டியா? நான் உன்னை தான் பண்றேன்  என்று சொல்லியிருக்கிறது அந்த பெண். நண்பர் ஒன்றும் பேச முடியாமல் வந்து விட்டார். தோழனிடம் எப்படி சொல்வது என்று தவியாய் தவித்தார். பின்னர் ஒருவாறு விசயத்தை சொல்லியும் விட்டார். அவனும் சரிடா அவளுக்கு ஒண்ணை பிடிச்சிருந்தா என்ன பண்ண முடியும் என் ஜாய் என்று சொல்லிவிட்டார்.
    நண்பருக்கு தலை கால் புரியவில்லை! சதா அந்த பெண் நினைப்பாகவே திரிந்தார். அதுவரை ரிகர்சல் பக்கம் எட்டி பார்க்காதவர் ரிகர்சல் நடக்கும் சமயம் சரியாக வந்து விடுவார்! இடைவேளையில் பேசிக் கொள்வார்கள் சிரித்துக் கொள்வார்கள்! நாங்களும் ஒன்றும் கண்டு கொள்ள மாட்டோம்.சிறு வயது என்பதால் அதைப்பற்றி பெரிதாக நினைக்க வில்லை! இந்த சமயத்தில் தான் இந்த ஜோடிக்கு வந்து முளைத்தான் ஒரு வில்லன். சினிமா படத்தில் வருவது போல பெண்ணின் முறைமாமன் அவன். ஊர் இதேதான் என்றாலும் சென்னையில் தங்கி படித்து வந்தான். விடுமுறைக்கு ஊர்வந்தான். அவனும் எங்கள் குரூப்பில் இணைந்தான். முறைப்பெண்ணின் காதல் விசயம் தெரிந்து விட்டது போலிருக்கிறது அவனுக்கு ஆனாலும் மவுனம் காத்து வந்தான்.
    மே முதல் தேதி ஆண்டு விழா கொண்டாட்டம்! ஏப்ரல் 29ம் தேதி அந்த பெண் தான் ஆண்டுவிழாவில் கலந்து கொள்ள முடியாது என்று கூற ஏன் என்று கேட்டேன். தன் வீட்டினர் தன்னை வேறு ஊரிற்கு அழைத்து செல்ல போவதாக அந்த பெண் கூறியதும் அதிர்ந்தேன். விடுமுறைக்கு தானே செல்கிறாய்? பங்ஷன் முடிந்ததும் செல்லலாமே என்று கேட்டேன். வீட்டில் உள்ளவர்கள் கட்டாயப்படுத்துவதாக கூறியதும் என்னுள் பொறி தட்டியது! ஆகா விசயம் வேறு மாதிரி அல்லவா போகிறது விளையாட்டு வினை ஆகிவிட்டதே என்று நினைத்தேன்.
    மொத்தமுள்ள இருபது பாடல்களில் 10 பாடல்களுக்கு அந்த பெண் நடனம் ஆட வேண்டும். ஆள் கறுப்புதான்! ஆனாலும் சொல்லி கொடுத்ததை புரிந்து சிறப்பாக ஆடக்கூடியவள்! இவள் சென்று விட்டால் அந்த பத்து பாடல்களை கேன்சல் தான் செய்ய வேண்டும். வேறு ஒருவரை மாற்று ஏற்பாடு செய்ய முடியாத நிலை! என்ன செய்வது?
   நம்பிக்கையான ஆட்களிடமிருந்து இதற்கு காரணம் அந்த முறைப்பையன் தான் என்று தெரிந்து விட்டது. அந்த பெண்ணின் வீட்டார்கள் எனக்கு தெரிந்தவர்கள்தான் என்றாலும் அவர்களிடம் பேசுவது வீண் என்று தெரிந்து போனது. சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக் காரன் காலில் விழுவது மேல் என்று நினைத்தேன். அந்த முறைப்பையனும் எங்கள் சங்கத்துக் காரன் என்பதால் விசயம் சுலபமாகிப் போனது.
   சங்கத்தின் தலைவன் என்ற முறையில் அவனை அழைத்தேன். இந்த விசயங்கள் ஏதும் தெரியாதவனாய் அவனிடம் பேசினேன். இந்த மாதிரி முதல் தேதி விழா நடக்க உள்ளது உனக்கும் தெரியும்! இதில் உன் முறைப்பெண் தான் முக்கியமாக நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறாள். அவள் இப்போது திடீரென விழாவில் கலந்து கொள்ள முடியாது என்கிறாள். அவளை அவள் வீட்டினர் விடுமுறைக்கு எங்கோ அழைத்து செல்ல போவதாக கூறுகிறாள். நீதான் அவளிடமும் வீட்டாரிடமும் பேசி விழாவை சிறப்பாக நடத்தி தர வேண்டும். இந்த விழா நடப்பது உன் கையில் தான் உள்ளது. விழாவை நடத்தி முடிப்பது உன் பொறுப்பு என்று கூறினேன்.
    முதலில் அவன் சம்மதிக்கவில்லை! இருந்தாலும் சங்க உறுப்பினரான நீ இது கூட செய்யாவிட்டால் சங்கம் எப்படி வளரும் என்று அவனை சற்று உசுப்பேத்தி சம்மதிக்க வைத்தேன். அவனும் அந்த பெண் வீட்டாரிடம் பேசி எப்படியோ அந்த பெண்ணை நடனமாட வைத்தான். இந்த காதல் பேர்வழியையும் சற்று எச்சரித்து உங்கள் காதலை பின்னால் வைத்துக் கொள்ளுங்கள் இப்போது விழாதான் முக்கியம் என்றேன். அவர்களும் ஒத்துழைக்க விழா சிறப்பாக நடந்தது. அந்த பெண்ணுக்கு சிறப்பு பரிசும் அந்த முறைப் பையனுக்கு நினைவு பரிசும் வழங்கி விழாவை முடித்தேன் நான்.
   அந்த விடுமுறைக்கு வெளியூர் சென்ற பின் ஒன்பதாம் வகுப்பை வெளியூரில் தொடர்ந்தார் அந்த பெண். இதனால் நண்பரின் விடலைக் காதல் தொடர முடியாமல் போனது. இவர் அந்த பெண்ணை மறந்து வெறொரு பெண்ணை லவ்வ தொடங்கினார். அதுவும் கலைந்து போனது. இந்த சமயத்தில் வெறொரு நண்பர் ஒரு உடன் படிக்கும் ஒரு பெண்ணை லவ்வ அந்த பெண்ணின் தந்தை என்னிடம் வந்தார். நண்பரை பற்றி விவரங்கள் கேட்டார்.
 அவரது முகம் சொன்ன வேதனை! பெண்ணை பெற்றவர்களின் பரிதவிப்பினை படம் பிடித்துக் காட்டியது. இந்த விடலைக் காதலும் தொடராமல் ஒடிந்து போனது. இன்று இந்த நண்பர்கள் எல்லோரும் கல்யாணமாகி குழந்தைகளுடன் உள்ளார்கள். இந்த நினைவுகள் கட்டாயம் அவர்கள் நெஞ்சில் பதிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் உடனிருந்த என் நெஞ்சில் நீங்கா நினைவுகளாய் 
படர்ந்து விட்டது!
நினைவுகள் வளரும்!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!