பசுமை நிறைந்த நினைவுகள் 11

பசுமை நிறைந்த நினைவுகள்  11

1993 ம் வருடத்தின் ஜூலை மாத மாலை வேளையில் எங்கள் வீட்டருகே கோயிலில் நண்பர்களோடு புல் செதுக்கி சுத்தம் பண்ணிக் கொண்டு இருந்தோம். எங்கள் குழு விளையாட்டில் மட்டுமின்றி இப்படி சில நல்ல காரியங்களையும் செய்து கொண்டு இருந்தது. சென்ற பதிவில் சொன்ன மாதிரி நேரு சிறுவர் சங்கம் என்று அதற்குப் பெயர். என்னுடன் சில நண்பர்களும் எனது தங்கைகளும் அதில் உறுப்பினர்கள். நாங்கள் எங்கள் பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு இலவச டியுசன் எடுப்பது. போட்டிகள் நடத்தி பரிசளிப்பது என்று எதையாவது செய்து கொண்டிருப்போம். வீட்டில் இதை குறை கூறினாலும் தடை செய்ய மாட்டார்கள். அப்படித்தான் அன்று மாலை வேளையில் கோயில் சுத்தம் செய்து கொண்டிருக்கையில் போஸ்ட் மேன் வந்து கோகுலம் புத்தகம் வந்திருக்கு ஏதாவது சந்தா கட்டி இருக்கியா என்று கேட்டு புத்தகத்தை தந்தார்.
    இல்லையே சந்தா கட்டவில்லையே! எப்படி வந்தது? என்று யோசித்தேன். இதழை புரட்டி பார்த்தேன் மேலோட்டமாக ஒன்றும் புரியவில்லை! பின்னர் நிதானமாக புரட்டி பார்த்த போது தான் தெரிந்தது நான் எழுதிய கதை அதில் வந்துள்ளது என்று ஒன்றுக்கு இரண்டு குட்டிக்கதைகள் அதில் நான் எழுதி இடம் பெற்று இருந்தது. நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என் நண்பர்கள் என்னை கொண்டாடினார்கள். பெற்றோர்களும்மிகவும் மகிழ்ந்தார்கள். என் புகழை உறவினர்களுக்கெல்லாம் பரப்பினார்கள். அவர்களும் என்னை பாராட்டினார்கள். அதன் பின் நான் எழுத்துலகில் சாதிக்க வேண்டும். வாண்டுமாமா, பூவண்ணன், சுஜாதா போன்ற பிரபல எழுத்தாளராக வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். பல கதைகளையும் கவிதைகளையும் கோகுலத்திற்கு அனுப்பி வைத்தேன். அவை அனைத்தும் சுவற்றில் அடித்த பந்தாக திரும்பி வந்தன. எனக்கு வருத்தமாக போயிற்று. நன்றாகத்தானே எழுதுகிறோம் ஏன் பிரசுரமாகவில்லை காரணம் புரியவில்லை. ஒரு இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு குட்டிக்கதை கோகுலத்தில் பிரசுரமானது. ஆனால் இந்த முறை அதற்கு இதழ் கூட அனுப்பவில்லை! கடையில் வாங்கியபின் தான் கதை வந்திருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது.
    ஆனாலும் என் எழுத்தார்வம் குறையவில்லை! கையெழுத்துப் பிரதிகளை முன்பைவிட சிறப்பாக எழுதி தயாரிக்க ஆரம்பித்தேன்.தேன் சிட்டு என்ற பெயரில் இளைஞர் கையெழுத்து பிரதியை தயாரித்து வெளியிட்டேன். இந்த இதழுக்கு நண்பர்கள் மத்தியில் பெரும் வறவேற்பு கிடைத்தது. இதனுடைய வாசகர் வட்டம் அதிகரித்தது. இதனிடையே எங்களுடைய சிறுவர் சங்கம் நண்பர்கள் நலச் சங்கம் என்று மாறியது. அதன் தலைவராக பொறுப்பேற்றேன்.
    சங்கத்தின் சார்பாக சுதந்திர தின விழா கொண்டாட முடிவானது. அதற்காக கலை நிகழ்ச்சிகள் தயாரித்தோம். என் தங்கைகள் உதவினர்.பொது அறிவு நூல்களை படித்து வினாடி வினா நிகழ்ச்சி தயாரித்து நடத்தினோம். அந்த வருட சுதந்திர தின விழாவிற்கு ஊர் தலைவர் மற்றும் பிரமுகர்களை அழைத்து சிறப்பாக கொண்டாடினோம். அப்போது என் தங்கை மேனிலை இறுதியாண்டு படித்து கொண்டிருந்தாள். அவளது தோழிகளும் உடன் படிப்பவர்களும் வந்து நிகழ்ச்சிகளை ரசித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு நடனமாட சிறுவர் சிறுமிகளை அனுப்ப மறுத்து பிரச்சனை செய்தனர் சிலர்.
    அவர்கள் இளைஞர் மன்றத்தின் சார்பாக டியுசன் நடத்தி வந்தனர். அங்குதான் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டசிறுவர் சிறுமியர் படித்து வந்தனர். அவர்களை நடன ரிகர்சலுக்கு போகக் கூடாது என்று தடை செய்தனர். இதனால் அவர்களுக்கு என்ன லாபமோ தெரியவில்லை! படிக்கிற வயதில் கூத்தாட்டமா? என்று கேலி பேசினர்.
   என்னுடைய வாதம் படிப்பே வாழ்க்கை கிடையாது! கூடுதல் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றுதான் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது என்பது. ஆனாலும் அவர்களின் தடையை மீறி ரிகர்சலில் குழந்தைகள் கலந்து கொண்டார்கள். பெற்றோர்களும் மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தார்கள். இதில் வேடிக்கை என்ன வென்றால் தடை செய்தவர்களே நிகழ்ச்சியை பார்க்க வந்ததுதான்!
     எனக்கு பயங்கரமான கோபம்! நிகழ்ச்சியை நடத்தவிடாமல் இடையூறு செய்துவிட்டு இப்போது பார்க்க வந்துள்ளனரே என்று நன்றியுரையில் நான் பேசும் போது அவர்களை குறிப்பிட்டு தடை செய்தவர்களையும் நாங்கள் இப்போது இழுத்து வந்து விட்டோம். இனி எங்கள் சங்கம் சார்பாக டியுசன் நடத்தப்படும் உடன் கணிணியும் கற்றுத் தரப்படும் என்று அறிவிக்க தடை செய்தவர்கள் முகத்தில் ஈயாடவில்லை!
     எங்களின் நிகழ்ச்சிக்கு கிராமத்தினர் மத்தியில் நல்ல வறவேற்பு கிடைத்து எங்கள் குழு பிரபலமடைந்தது. எங்கள்குழுவின் ஆதரவாளர் கிராமத்தின் தலைவராக பதவி ஏற்றார். சங்கத்தின் சார்பாக நூலகம் ஒன்று அமைக்க வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது. உடனே என்னிடமிருந்த புத்தகங்களை வைத்து நூலகம் ஆரம்பித்து விட்டேன். வீட்டில் குமுதம் கல்கண்டு விகடன் கோகுலம் தினமலர் போன்ற பத்திரிக்கைகளை வாங்கிக் கொண்டிருந்தோம். இவைகளில் வரும் கதைகளை வெட்டி சேகரித்து பைண்டு செய்து நூலகத்தில் அடுக்கினேன். திருவாலீஸ்வரர் கோயில் மடைப்பள்ளிதான் எங்கள் நூலக கட்டிடம் மற்றும் சங்க அலுவலகம். புத்தகங்களை அட்டை பெட்டியில் அடுக்கி வைத்திருந்தேன். சின்ன ஷெல்ப் ஒன்றும் இருந்தது. அந்த மடைப்பள்ளியில் ஒரு புறம் விறகுகள் அடுக்கி வைத்திருக்கும் மறுபுறம் எங்கள் புத்தகங்கள் இருக்கும். சிறிய அறை அது. கூறை நாம் கையை தூக்கினால் இடிக்கும் உயரத்தில் இருந்தது. மடைப்பள்ளி கட்டடத்தின் அருகே ஒரு பெரிய பாதாம் மரம் இருந்தது.
   பாதாம் மரத்தின் நிழல் மடைப்பள்ளியின் மேல் தளத்தில் விழும்! இதனால் கோடை வெயில் காலத்தில் கூட மடைப்பள்ளி குளுமையாக இருக்கும். எங்கள் வீடும் கோயிலும் அருகருகே அமைந்திருக்கும். கோயில் உள்ளே மடைப்பள்ளி. கோயிலை சுற்றி மரங்கள் மற்றும் வயல்கள் நிறைந்து பச்சை பசேல் என இருக்கும். கண்ணுக்கு குளிர்சியான இந்த இடத்தை நண்பர்கள் மிகவும் விரும்பினர். விடுமுறை நாட்களில் மடைப்பள்ளியில் அனைவரும் கூடி விடுவோம். பாதமரத்தடி நிழலில் கிரிக்கெட் விளையாடுவோம். பசிக்கு பாதம் கொட்டைகளை உடைத்து தின்போம். கோயில் கிணற்றில் சுவையான தண்ணீர் சுற்றிலும் குளுமையான மரங்கள் என இதை விட விளையாட அருமையான இடம் கிடைக்குமா?
    கால மாற்றத்தில் இன்று பாதமரம் வெட்டப்பட்டு புதிய மடைப்பள்ளி கட்டப்பட்டு கோயிலுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்று விட்டது. புதிய மடைப்பள்ளியினுள் குளுமைக்கு பதில் வெம்மை பரவிகிடக்கிறது. கோயிலை சுற்றியிருந்த பல மரங்கள் காணாமல் போய் விட்டன. என்னை சுற்றியிருந்த நண்பர்கள் வட்டமும் இப்போது குறைந்து விட்டது. ஆனாலும் நண்பர்கள் சந்திக்கும் போது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு கனவுலகில் மிதப்போம்.
  இந்த மடைப்பள்ளியில் விறகு கட்டைகளோடு 10 புத்தகங்களோடு துவங்கிய நூலகத்தில் ஏறக்குறைய இரண்டாயிரம் புத்தகங்கள் சேர்ந்தன.நிறைய உறுப்பினர்களும் இருந்தனர். இந்த நூலகமும் இன்று இல்லாமல் போய்விட்டது. மடைப்பள்ளி மண்சுவரிலிருந்து கரையான்கள் தோன்றி பல புத்தகங்களை அழித்து விட்டது. சில புத்தகங்கள் வாங்கியவர் திருப்பி தரவில்லை! சில புத்தகங்களை பராமரிக்க முடியாமல் எடைக்கு போயின. எனக்கு வருத்தம் தான்! ஆனால் பராமரிப்பின்றி கரையான் அழிப்பது பொறுக்காமல் சிலவற்றை விற்றோம் சில புத்தகங்களை வேறு நூலகம் நண்பர்கள் என கொடுத்து விட்டேன்.
  இந்த பகுதியில் இன்று சொல்ல நினைத்தது என் நண்பர் ஒருவரின் விடலைப் பருவ காதலை! ஆனால் எதேதோ எழுதி அதை சொல்ல முடியவில்லை! இந்த நண்பரால் எங்கள் சங்க கலை நிகழ்ச்சிக்கு பாதிப்பு வந்ததையும் அதை முறியடித்த விதத்தையும் அடுத்த பதிவில் கூறுகிறேன். காத்திருங்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!


Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!