நெசவாளிக்கு உதவிய விஷ்ணு!

நெசவாளிக்கு உதவிய விஷ்ணு!

செவிவழிக் கதை (விக்கிரமாதித்தன் கதை)


முன்னொருகாலத்தில் கௌட தேசத்தில் புண்டரவர்த்தனம் என்ற ஒரு நகரம் இருந்தது. அந்த நகரத்திலே தச்சன் ஒருவனும், நெசவாளி ஒருவனும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தார்கள். இருவரும் அவரவர் தொழிலில் திறமை வாய்ந்தவர்கள். அதன் மூலம் நல்ல வருவாயும் ஈட்டிவந்தனர். நல்ல வருமானத்திற்கு குறைவில்லாததால் கேளிக்கைகளில் இருவரும் கலந்து கொள்வார்கள். ஊரில் எங்கு விழா, உல்லாசம், கேளிக்கை நடக்கிறதோ அங்கு அவர்களை காணலாம்.
   அப்படி ஒருசமயம், ஊரில் நடைபெற்ற உற்சவம் ஒன்றில் அவர்கள் இருவரும் கலந்து கொண்டபோது மிகவும் அழகிய பெண் ஒருத்தி அந்த உற்சவத்தை காண வந்திருந்தாள். அவள் அழகில் திருமகளை ஒத்திருந்தாள்.எல்லோருடைய கண்களும் அந்த பெண்ணையே மொய்த்தன. அவள் அந்த நகரத்தின் அரச குமாரி என்று விசாரித்து அறிந்து கொண்டனர். நெசவாளிக்கு அந்த மங்கையின் மீது காதல் வந்துவிட்டது. அந்த இடத்தைவிட்டு பிரிய மனமின்றி கிளம்பினான்.
   வீட்டுக்குச்சென்ற பின்பும் அவன் அரச குமாரியின் நினைவிலேயே இருந்தமையால் அவனது நண்பன், என்ன ஏது என்று விசாரித்தான். நெசவாளியும் தான் அரசகுமாரி மீது மையல் கொண்டிருப்பதை கூறினான். அவள் இல்லாமல் தன்னால் உயிர்வாழமுடியாது என்று கூறினான்.
  தச்சனோ, நண்பா! அவள் அழகில் மஹாலஷ்மியை ஒத்திருந்தாள். அவளுக்கு மஹாவிஷ்ணுவே கணவராக பொருத்தம்! உன்னை அவள் ஏறிட்டுக் கூட பார்க்கமாட்டாள் ஏன் இந்த வீண் ஏக்கம்! என்று அறிவுரை பல கூறினான். ஆனால் காதல் மயக்கம் நெசவாளியை படுத்தி எடுத்தது.
   மறுநாள், தச்சன், கருடன் போன்ற பறவை ஒன்றை விசைப்பொறியாக வடிவமைத்து எடுத்து வந்தான். நண்பா! நீ விஷ்ணுவாக வேடம் தரித்து இந்த பொறியின் மீது அமர்ந்து அரசகுமாரியின் அரண்மனைக்கு செல். அவள் அரண்மனை மேன் மாடத்தில் உறங்குகிறாள். நீ யாரும் அறியா வண்ணம் இந்த பொறி மீது அமர்ந்து சென்று அவளை சந்திக்கலாம்.  இது ஆகாயத்தில் பறந்துசெல்லும் நினைத்த இடத்தில் இறங்க செய்யும் அது மாதிரி வடிவமைத்து உள்ளேன் என்றான்.
   அந்த கருடப்பறவை அவ்வளவு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. நெசவாளி நல்ல அழகன். அவன் விஷ்ணுவாக வேடம் தரித்து அந்த பொறி மீது அமர்ந்து அரண்மனைக்கு சென்று அரண்மனை மேன் மாடத்தில் அரசிளம்குமரியை சந்தித்தான்.
   மஹாவிஷ்ணுவே தன்னை சந்திக்க வந்தது நினைத்து அரசகுமாரி மகிழ்ந்தாள். நெசவாளியும், பெண்ணே!  உன் பொருட்டுதான் பூலோகம் வந்தேன். முற்பிறப்பில் நீ என் தேவி! ஒரு சாபத்தால் இந்த அரசனின் மகளாக பிறந்துள்ளாய்! இதுவரை நாமே உன்னை காப்பாற்றியது!  உன்னை காந்தர்வ முறையில் மணந்து கொள்ள இப்போது வந்துள்ளேன் என்றான்.

  அரசகுமாரியும் அவனது பேச்சை நம்பி அவனை காந்தர்வ விவாகம் செய்து கொண்டாள். தினமும் நெசவாளி இரவில் அரண்மனை அந்தப்புரம் வந்து சென்று கொண்டிருந்தான். இவ்விசயம் பணிப்பெண்கள் மூலம் ராஜாவிற்கு தெரிந்து அவர் அரசியை விசாரித்தார். அரசி மகளை அழைத்து விசாரித்தார். மகள் தான் முற்பிறப்பில் மகாலட்சுமி என்றும் தன்னை ரட்சிக்க மஹாவிஷ்ணுவே வந்து காந்தர்வ விவாகம் செய்து கொண்டார். என்றும் சொன்னாள்.
     இதை நம்பாத அவர்கள் மறுநாள் மகள் அறியாத வண்ணம் ஒளிந்திருந்து பார்த்தார்கள். தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட கருட வாகனத்தில் விஷ்ணு வேசத்தில் நெசவாளி வந்து இறங்குவதை பார்த்த அவர்களுக்கு மகிழ்ச்சி தாளவில்லை! தம் மகள் பொய் சொல்லவில்லை! சாட்சாத் மஹா விஷ்ணுவே மகளின் கணவன். தமக்கு மாப்பிள்ளை என்ற மகிழ்ச்சியில் திளைத்தனர்.
   இந்த அரசன் விக்கிரமசேனன் என்ற அரசனுக்கு கீழ்படிந்தவன். அவனுக்கு வருடம் தோறும் கப்பம் கட்டுபவன், இந்த வருடம் மஹாவிஷ்ணு மாப்பிள்ளை ஆகிவிட்டார் என்ற கர்வத்தில் கப்பம் செலுத்த வில்லை! கட்டமுடியாது என்று சொல்லி அனுப்பிவிட்டான்.
    விக்கிரமசேனன், உடனே நால்வகை சேனைகளையும் கூட்டிக்கொண்டு படையெடுத்துவிட்டான். எந்த முன்னெச்சரிக்கையும் செய்யாமல் இருந்த அரசன், மகளிடம் இந்த செய்தியை தெரிவித்து மகாவிஷ்ணுதான் இந்த நாட்டை காப்பாற்றவேண்டும் என்று முறையிட்டான்.
    அரசகுமாரியும் நெசவாளியிடம் தந்தை சொன்னதை தெரிவித்தாள். அப்போதைக்கு, அசுரர்களையே சமாளித்த எமக்கு விக்கிரம சேனன் எம்மாத்திரம்? நாளை போருக்கு புறப்படுகிறேன் என்று சொல்லிவிட்டான் நெசவாளி.
   அரசகுமாரி தந்தையிடம் கணவர் போருக்கு வருவதை உறுதி செய்ததும், அரசனும் நகர் முழுவதும் விஷ்ணு தமக்கு போரில் உதவி செய்ய இருப்பதால் போருக்கு தயாராகும்படி மக்களுக்கு அறிவித்தான். நகர மக்களுக்கு இந்த செய்தி வியப்பு ஏற்படுத்தியது. விஷ்ணுவே தம்முடன் போரில் கலந்து கொண்டால் வெற்றி உறுதி என்று உற்சாகம் அடைந்தனர். போருக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டனர்.

   இந்த செய்தி அறிந்த நெசவாளி, பொய்சொல்லி விஷ்ணு வேடம் போட்டாயிற்று! இனி போருக்கு செல்வதை தவிர வேறு வழியில்லை! கருடன் மீது ஏறி ஓடிப்போய்விடலாம்? ஆனால் அரசகுமாரியை பிரிந்து வாழ முடியாது! எனவே போருக்கு சென்று தமக்கு தெரிந்ததை கொண்டு போரிடுவோம்! மரணம் அடைந்தாலும் பரவாயில்லை என்று முடிவு செய்தான்.
       நெசவாளியின் இந்த நிலையை கருட பகவான் அறிந்தார். அவர் மஹாவிஷ்ணுவிடம் முறையிட்டார். விஷ்ணுவே! அந்த நெசவாளி காதலிக்காக உயிரை விட துணிந்து விட்டான். அவன் போரில் தோற்றுவிட்டால் சாதாரண ஒரு மனிதப்பிறவியிடம் மஹாவிஷ்ணு தோற்றுவிட்டார் என்ற அவப்பெயர் ஏற்படும்! என்ன செய்வது என்று கேட்டார்.
  விஷ்ணுவும் நன்கு யோசித்து, கருடா! நீ சொல்வது உண்மைதான்! விஷ்ணு தோற்றான் என்ற அவப்பெயர் வரக்கூடாது. காதலுக்காக உயிரை விட துணிந்த அந்த நெசவாளிக்கு நாம் உதவுவோம்! அவன் போருக்கு செல்லும் சமயம் அவன் உடலில் நான் புகுந்து என் சக்ராயுதத்தை இயக்குகிறேன்! நீயும் அந்த கருடபொம்மையின் உடலில் புகுந்து கொள். என்றார்.

   மறுநாள் நெசவாளி போருக்குப் புறப்பட்டான். அவனது உடலில் விஷ்ணு புகுந்து சங்க நாதம் முழங்கினார். மஹாவிஷ்ணுவே போருக்கு வருவதை அறிந்த எதிரிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை! இந்த வேடிக்கை போரை காண தேவர்களும் வானில் குவிந்தனர். விஷ்ணுவின் சக்ராயுதம் பலரை கொன்று குவித்தது.
   விக்கிரமசேனன், தன் சேனைகள் அழிவதைக் கண்டு அஞ்சி, தாம் தவறு செய்துவிட்டோம் என்று நெசவாளியின் காலில் விழுந்து கெஞ்சினான். மஹாபிரபு காத்தருள வேண்டும்! தாங்கள் இந்த அரசனின் மாப்பிள்ளை என்று அறியாது தவறு செய்துவிட்டேன்! மன்னித்து அருள வேண்டும் என்று வேண்டினான்.
    நெசவாளியின் உடலில் இருந்த விஷ்ணு கோபம் தணிந்தார். விக்கிரம சேனா! நீ இந்த அரசனை சக்ரவர்த்தியாக ஏற்றுக் கொள்ளவேண்டும்! இவருக்கு கப்பம் கட்டிவரவேண்டும்! என்ன சொல்கிறாய்?
   உத்தரவு மஹாபிரபு! என்று சரணாகதி அடைந்தான் விக்கிரமசேனன்.
   போர் நிறுத்தம்  செய்யப்பட்டது. நெசவாளிக்கு உதவிய விஷ்ணு வைகுண்டம் சென்றடைந்தார். விஷ்ணுவின் வேடம் தரித்த நெசவாளியினால் சிற்றரசன் பேரரசன் ஆனார். நெசவாளியும் இளவரசியும் சுகமாக வாழ்ந்தனர்.

  உற்சாகம், காரியத்தில் வேகம்,தொழில்பக்தி,தைரியசாலி, தீயவழிகளில் போகாதவன்,செய்நன்றி மறவாதிருத்தல், காரியத்தில் உறுதியோடு இருத்தல்,ஆகிய குணங்களை உடையவனை லஷ்மி தானாக வந்தடைகிறாள்.
  மேற்ச்சொன்ன குணங்கள் கொண்ட நெசவாளி தன்னுடைய இந்த விசேச குணங்களினால் மஹாலஷ்மிக்கு ஒப்பான அரசிளங்குமரியை அடைந்து சுகப்பட்டான்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. // உற்சாகம், காரியத்தில் வேகம்,தொழில்பக்தி,தைரியசாலி, தீயவழிகளில் போகாதவன்,செய்நன்றி மறவாதிருத்தல், காரியத்தில் உறுதியோடு இருத்தல்,ஆகிய குணங்களை உடையவனை லஷ்மி தானாக வந்தடைகிறாள்.///
    நன்றி ஐயா

    ReplyDelete
  2. ஆழமான பொருள் கொண்ட
    அற்புதமான கதை
    கரந்தயாரின் பின்னூட்டத்தை
    மிகவும் ரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அருமையான கதை... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. வணக்கம் அய்யா,
    அழகான கதை. ரசித்து படித்தேன். நல்ல குணநலன்கள் உள்ளவர்களின் உள்ளங்களிலும் இல்லங்கங்களிலும் லஷ்மி வாசம் செய்வாள் என்று சொல்வார்கள். அழகான செவிவழிக்கதையைப் பகிர்ந்தமைக்கு நன்றீங்க அய்யா.

    ReplyDelete
  5. நல்ல கதை....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!