ஓய்வு பெறும் கடவுளும்! டேக்ஸி ஓட்டிய டாக்டரும்! கதம்பசோறு! பகுதி 9

கதம்ப சோறு பகுதி 9

தசரா பலி!

ஒவ்வொரு முறையும் விழாக்காலங்களில் நெரிசல், குண்டுவெடிப்பு, இன்னும் ஏதோ காரணங்களால் மக்கள் உயிரிழப்பது இப்போது சகஜம் ஆகிவிட்டது. சென்ற முறை ஐயப்ப பக்தர்கள் ஜோதிதரிசன நெரிசலில் மாண்டனர். அதே போலத்தான் வடமாநிலத்தில் ஏதோ துர்க்கை கோவிலுக்கு சென்று நெரிசலில் மாண்டனர். இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரை நெரிசலில் மாண்டனர். இப்போது அந்த வரிசையில் தசரா பண்டிகை விழா நெரிசலில் மத்திய பிரதேசத்தில் 115 பேர் மாண்டனர். தேசிய பேரிடர் தவிர்ப்பு குழுவினால் புயல் வெள்ளம், போன்ற இடர்களில் இருந்து கூட பெரும் உயிரிழப்புக்களை தவிர்க்க முடிகிறது. ஆனால் இது போன்ற விழாக்களில் ஏற்படும் நெரிசல் தள்ளு முள்ளுகளினால் ஏற்படும் மரணங்கள் தவிர்க்க முடியாது போகிறது. இது ஆளும் அந்தந்த மாநில அரசுகளின் அலட்சியத்தையே காட்டுகிறது. குறுகலான ஒரு பாலத்தில் டிராக்டர் புகுந்ததாக ஏற்பட்ட வதந்தியே இந்த பலிக்கு காரணம் என்று சொல்கின்றனர். காரணத்தை யார் கேட்டது? இழந்த உயிர்களை திரும்ப பெற முடியுமா? இனியாவது மாநில அரசுகள் விழித்துக் கொள்ளவேண்டும்.

யானைகளை விரட்டும் டார்ஜான் பெண்

    குடியிருப்புக்களுக்குள் கூட்டமாக புகும் காட்டு யானைகளுடன் பேசி அவற்றை காட்டுக்குள் விரட்டுவதில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் நிர்மலா திறமைசாலியாக உள்ளார். சிங்கர்ஜோர் கர்வாடோலி என்ற மலைக்கிராமத்தை சேர்ந்த இவர் மலைவாழ் பழங்குடியினரின் மொழியான முண்டாரி மொழியில் பேசுவதை கேட்கும் யானைகள் பதிலுக்கு பிளிறுகின்றன. இவரது கட்டளையை கேட்டு காட்டுக்குள் திரும்பிச்செல்கின்றன. உள்ளூர் வாசிகள் நிர்மலாவை செல்லமாக ’டார்ஜான் கேர்ள்’ என்று செல்லமாக அழைக்கின்றனர். சிறுவயதில் நிர்மலாவின் குடும்பத்தை காட்டு யானைகள் தாக்கியதில் ஒருவர் உயிர் இழந்ததை கண்ட நிர்மலா யானைகளை விரட்டும் பயிற்சியில் ஈடுபட்டு இன்று வெற்றிகரமாக அந்த பணியை செய்து வருகிறார். சாதனைப்பெண்ணிற்கு வாழ்த்துக்கள்!

ஓய்வு பெறும் கடவுள்!

     கிரிக்கெட் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் தன்னுடைய சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸுடன் 200வது டெஸ்டில் பங்கேற்ற பின் ஓய்வு பெற இருப்பதாக அறிவித்துவிட்டார். இந்த ஓய்வு குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டாலும் இதைவிட அவருக்கு வேறு சிறந்த முடிவு இல்லை எனலாம். தொடர்ந்து பார்மில் இல்லாமல் இருப்பதாலும் இளம் வீர்ர்களுக்கு வழிவிட வேண்டிய நிலையிலும் 24 ஆண்டுகளாக இடையறாது வீசிக்கொண்டிருந்த இந்த கிரிக்கெட் சூறாவளி கரையேறப் போகிறது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் இந்தியாவில் விளையாட்டுத்துறையை மேம்படுத்த எம்.பி என்ற முறையில் நல்லது செய்வார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்து உள்ளது. இதுவரை சர்வதேச டெஸ்டில் முச்சதம் அடிக்காத சச்சின் தன்னுடைய கடைசித் தொடரில் அதையும் சாதித்து விடைபெற வேண்டும் என்பது நண்பர்கள் தளத்தின் ராஜினுடைய விருப்பம்! என்னுடைய விருப்பமும் அதுதான்! ஆல் த பெஸ்ட் சச்சின்!

முதல்வரை கொன்ற மாணவர்கள்!


    தூத்துக்குடி அருகே கல்லூரிக்கு தாமதமாக வந்ததை தட்டிக் கேட்டு அபராதம் விதித்த கல்லூரி முதல்வரை கொடூரமாக வெட்டிக் கொன்றுள்ளது மூன்று மாணவர்கள் குழு. வர வர கல்வி என்பதும் ஆசிரியர் தொழில் என்பதும் ஆபத்தான ஒன்றாக மாறிவருவது வேதனைக்குரியது. பரவி வரும் இண்டர்நெட்,சர்வதேச தொலைக்காட்சி, மற்றும் சமூக சீர்கேடுகளால் அதிகம் பாதிக்கப்படும் மாணவர்கள் இன்று கொலையும் செய்யும் அளவிற்கு வந்து விட்டார்கள். இறந்த கல்லூரி முதல்வரின் மனைவி பிரிந்த நிலையில் ஒரே மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இப்போது அந்த மகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது. மாணவர்களே உங்கள் நன்மைக்கு உழைக்கும் ஆசிரியர்களை கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள்! சற்று சிந்திப்பீர்!

மூடப்பட்டது உலகின் கடைசி டைப்ரைட்டர் தொழிற்சாலை!

    ஒருகாலத்தில் பத்தாவது படித்து முடித்து விடுமுறையில் டைப்ரைட்டிங்க் கிளாஸ் செல்லாதவர்கள் கிடையாது. டைப்பிங் ஷார்ட்-ஹேண்ட் கூடுதல் கல்வித் தகுதியாக இருந்தது. இப்போது கணிணி யுகத்திலும் தட்டச்சு மையங்கள் கொஞ்சம் போட்டி போட்டு முட்டி மோதி வந்த நிலையில் அதிர்ச்சியான செய்தியாக இந்த செய்தி வந்துள்ளது. 1714ல் ஹென்றி மில் வடிவமைத்த டைப்ரைட்டர் காலப்போக்கில் நவீன மயமாகி வந்தது.  இப்போது உலகின் கடைசி டைப்ரைட்டர் தொழிற்சாலையும் மூடப்பட்டுவிட்டதால் இனி டைப்ரைட்டரின் எதிர்காலம் கேள்விக் குறிதான். இப்போதே பழைய அரசு அலுவலகங்களிலும் தட்டச்சு கற்றுக் கொடுக்கும் இடங்களிலும்தான் டைப்ரைட்டரை பார்க்க முடிகிறது. இன்னும் சில நாட்களில் டைப்ரைட்டர் அருங்காட்சியகத்துக்கு சென்றாலும் கூட ஆச்சர்யப்படுவதற்கு இல்லை! கால ஓட்டத்தில் கரைந்து போன ஒன்றாகிவிட்டது தட்டச்சு இயந்திரங்கள்!

சங்ககால துறைமுக நகர் எயிற்பட்டனம் கடலுள் கண்டுபிடிப்பு!

   புதுச்சேரி- அரிக்கமேடு- கடலூர் மாவட்டத்துக்கு இடைப்பட்ட கடல்பகுதியில் கரையிலிருந்து 16 கீ.மீ தொலைவில் 42 மீட்டர் ஆழத்தில் சுமார் இரண்டரை கி.மீ நீளம் கொண்ட பிரம்மாண்ட மதில் சுவர் கண்டுபிடிக்கப்பட்டது. சுவர் பற்றிய முதற்கட்ட ஆய்வில் அது சங்ககால துறைமுக நகர் எயிற்பட்டணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
   சென்னையை சேர்ந்த டெம்பிள் அட்வென்சர் என்ற ஸ்கூபா டைவிங் பள்ளியை நடத்திவரும் அரவிந்த் மற்றும் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தை நடத்திவரும் ஒரிசா பாலு என்பவரும் சேர்ந்து கண்டறிந்த இந்த ஆய்வின் முடிவில் அது சங்ககால துறைமுக நகர் எயிற்பட்டணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழர்கள் கடல் வழியாக உலக மக்களை எப்படி இணைத்தார்கள் என்பதையும் தமிழர்களின் கலாசார தொன்மைகளையும் இது போன்ற ஆய்வுகள் மூலம் உலகுக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த சுவருக்கு வயது 10 ஆயிரம் ஆண்டுகள் தொடங்கி 25 ஆயிரம் ஆண்டுகள் இருக்க வேண்டும். இது உறுதிபடுத்தப்பட்டால் அது உலகின் முதல் கட்டடக் கலை தமிழர்களுக்கு சொந்தமானது என்பதும் நிரூபிக்கப்படும். எயிற்பட்டணம் பற்றிய தகவல் சங்க இலக்கியத்தில் சிறுபாணாற்றுப்படையில் இருக்கிறது. சங்கப்புலவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தினார்  எயிற்பட்டனத்தை ஆண்ட ஒய்மானாட்டு நல்லியக் கோடனை புகழ்ந்து பாடிய பாடலில் ‘மதிலோடு பெயரிய பட்டினம்’ என்று குறிக்கப்பட்டுள்ளது. மதில் என்னும் சொல்லுக்கு எயில் என்ற பெயர் உண்டு. கிரேக்கர்கள் இந்த ஊரை “சோபட்மா என்று குறிப்பிட்டுள்ளனர். ‘சோ’ என்றால் மதில் என்று பொருள்.
ஆராய்ச்சியாளர்களுக்கு வாழ்த்துக்கள்!

ஓட்டு இயந்திரத்தில் “நோட்டோ” பட்டன்!

 உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து ஓட்டு இயந்திரத்தில் ‘நோட்டோ” என்னும் யாரையும் தேர்ந்தெடுக்க விருப்பம் இல்லை என்ற பட்டன் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அடுத்து நடைபெற உள்ள ஐந்து மாநில தேர்தல் மற்றும் தமிழகத்தில் இடைத்தேர்தல்களில் இந்த வசதி அறிமுகத்திற்கு வருகிறது. இதனால் எத்தனை வாக்காளர்கள் ஓட்டளிக்க விருப்பம் இல்லை என்பதை தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஏராளமானோர் போட்டியிடும்போது  யாரையும் தேர்வு செய்ய விருப்பம் இல்லை என தெரிவித்தாலும் பதிவான ஓட்டுக்களில் அதிக ஓட்டுப்பெற்றவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார் என்று  தமிழக தேர்தல் அதிகாரி கூறினார். நோட்டோ பட்டன் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அப்படி ஏற்பட்டால் அரசியல் கட்சிகள் தகுதியில்லாத வேட்பாளர்களை நிறுத்த தயங்கும் நிலைவரும் என்று முன்னாள் தேர்தல் கமிஷனர் கோபால்சாமி கூறினார்.

அருள்ஜோதி அன்ன ஆலயம்!

   சென்னை பெரம்பூரில் இயங்கி வருகிறது அருள்ஜோதி அன்ன ஆலயம். கடந்த 18 ஆண்டுகளாக இங்கு காலை மதியம் இரவு என மூன்று வேளையும் பசி என்று வருவோருக்கு உணவளித்து வருகிறார் 47வயதான சதீஷ்ராஜ் அடிகளார்.
  கடந்த 1995ல் வீட்டிலேயே சொந்த செலவில் அன்னதான பணியை துவக்கினார் சதீஷ் ராஜ். பின் நன்கொடையாளர்கள் அதிகரிக்க இப்போது உள்ள கட்டிடத்தில் அன்னதானக் கூடம் அமைத்தார். தினமும் 20க்கும் மேற்பட்ட மாநகராட்சி பள்ளிகளில் உரிய அனுமதி மற்றும் கோரிக்கையின் அடிப்படையில் மாணவ மாணவியருக்கு காலை உணவாக அரிசிக் கஞ்சி வழங்கி வருகிறார் சதீஷ்ராஜ். ஆலய அன்னதானத்திலும் இந்த ஆலயம் பங்கேற்று சென்னை சுற்றுப்புறத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கோவில்களில் சுழற்சி முறையில் அன்ன ஆலயத்தில் இருந்து உணவு அனுப்பிவைக்கப்படுகிறது.
   என்னைப்பற்றி விளம்பரம் வேண்டாம் என்று சொல்லும் சதீஷ்ராஜ் புகைப்படம் எடுக்கவும் மறுத்துவிட்டாராம். ஆரம்பத்தில் நானும் வீடு வாசல் என்றுதான் சாதாரணமானவனாக இருந்தேன். ஒருநாள் மனிதனாய் பிறந்த நாம் ஏதாவது சேவை செய்ய வேண்டும் என எண்ணி அன்னதானம் செய்யத்தொடங்கினேன். வேதாத்திரி மஹரிஷி மேலுள்ள பற்றினால் பின்னாளில் சேவையே வாழ்க்கையாகிவிட்டது. ஆரம்பத்தில் சொந்த செலவில் நடந்த அன்ன ஆலயப்பணிகள் இப்போது பொதுமக்களின் நன்கொடை மூலம் குறைவில்லாமல் நடைபெறுகிறது முதலில் நேரில் சென்று நன்கொடைகள் வாங்கி கொண்டிருந்தோம். இப்போது நிறைய பேர் தேடிவந்து கொடுக்கிறார்கள்,இந்த அன்னதானப்பணியில் நான் ஒரு கருவி மட்டுமே! மக்கள்தான் இதை நடத்துகிறார்கள் என்று நெகிழ்கிறார் சதீஷ்ராஜ். வித்தியாசமான மனிதர்தான். பாராட்டுவோம்! முடிந்தால் சேவையில் ஒரு சிறு துளி பங்கேற்றுக்கொள்வோம்!

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!
 
  சீதாப்பழ விதைகளை காய வைத்து பொடியாக்கி சியக்காயில் கலந்து தேய்த்து குளித்துவர பேன் தொல்லை இருக்காது.

இஞ்சி அதிகம் இருந்தால் மிக்ஸியில் மைய அரைத்து வெள்ளைத்துணி, அல்லது நியுஸ் பேப்பரில் உலர்த்தவும். பிறகு சல்லடை அல்லது காய் வடிக்கட்டியால் மூடிவைத்து உலர்த்தி பாதுகாத்தால் நீண்ட நாட்களுக்கு பயன் படுத்தலாம்.

வேப்பமுத்து,மிளகு, கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து நல்லெண்ணையுடன் காய்ச்சவும். இதைத் தலையில் தேய்த்து குளித்துவர முடி கொட்டாமல் செழித்து வளரும்.


துத்தி இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு உருட்டி காய்ச்சிய பசும்பாலில் கலந்து குடியுங்கள் நாற்பது நாள் தொடர்ந்து காலையில் குடித்து வந்தால் மூல நோய் குணமாகும்.

 தரையை துடைக்கும் போது வாரத்தில் ஒருநாள் தண்ணீரில் உப்பு போட்டு துடைக்கவும். மற்றொருநாள் மண்ணெண்ணை சில துளிகள் சேர்த்து துடைத்தால் தரை பளபளவென்று கிருமிகள் இல்லாமல் இருக்கும்.

விசிட்டிங் பீஸ்!


ஒருவன் நடுராத்திரியில் சென்று டாக்டர் வீட்டுக் கதவைத் தட்டுகிறான்.
டாக்டர் எழுந்து "என்ன வேண்டும்?" என்று கேட்கிறார்.

வந்தவனோ ஒரு முகவரியைக் காட்டி, "இந்த இடத்திற்கு வர வேண்டும் மிகவும் அவசரம்" என்கிறான்.

டாக்டரும் காரை எடுத்துக் கொண்டு அந்த ஆளுடன் குறிப்பிட்ட ஊருக்குச் செல்கிறார்.

ஊர் வந்ததும் டாக்டரை அழைத்து வந்தவன் காரிலிருந்து இறங்கினான். 

டாக்டரைப் பார்த்து, "உங்களது விசிட்டிங் பீஸ் எவ்வளவு?" என்றான்.

டாக்டர்,"நூறு ரூபாய்" என்றார்.

உடனே அவன் நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்து விட்டு, "மிகவும் நன்றி 
டாக்டர். அங்கேயிருந்து இங்கே வர டாக்ஸிக்காரன் முன்னூறு ரூபாய் கேட்டான்" என்றான்.

( கவிதை வீதியின் முகநூல் பக்கத்தில் சுட்டது)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட்செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி
 




Comments

  1. எல்லா செய்திகளுமே நச்சுனு இருக்கு.

    ReplyDelete
  2. நீங்கள் கூறுவது மிகச் சரி காரணத்தை யார் கேட்டது, இழந்த உயிர்களை மீண்டும் பெற முடியுமா என்ன ?

    ReplyDelete
  3. நல்லதொரு தொகுப்பு... நன்றி...

    ReplyDelete
  4. அனைத்து செய்திகளும் அருமை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2