நான் ரசித்த சச்சின்!

நான் ரசித்த சச்சின்!


இந்தியாவின் கிரிக்கெட் கடவுள் தன் ஓய்வை அறிவித்து விட்டார். சுமார் 24 ஆண்டுகள் கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்த சச்சின் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் தன் ஓய்வை அறிவிக்க வேண்டியதாகி விட்டது.
   சச்சின் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைக்கும் சமயம் நானும் ஏறக்குறைய சம வயதினன். அது 1989 ஆம் ஆண்டு. அதற்கு சில வருடங்கள் முன் இந்தியாவில் உலககோப்பை போட்டிகள் நடைபெற்றபோதுதான் எனக்கு கிரிக்கெட் அறிமுகம் ஆனது. அப்போதுதான் கவாஸ்கர், கபில்தேவ், ரவிசாஸ்திரி, அமர்நாத், மணீந்தர்சிங், போன்றவர்களை பற்றி அறிந்துகொண்டேன். அப்போது தூர்தர்ஷன் மட்டும்தான். இந்தியாவில் நடைபெறும் போட்டிகளை ஒளிபரப்பும். வெளிநாட்டில் போட்டிகள் நடந்தால் ஒளிபரப்பு கிடையாது.
       அந்த 1989ல் ஸ்ரீகாந்த் தலைமையில் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டது இந்திய அணி. அதில்தான் பதினாறு வயது சச்சின் தேர்வானார். அவர் ஆடிய முதல் போட்டியை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை எனக்கு. ஆனால் அதற்கடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடி போட்டி டிராவானது.

   அப்போது எங்கள் வீட்டிற்கு அப்பாவின் நண்பர் மாதவன் வருவார். உன் வயசுதான் அவனுக்கு எப்படி விளையாடறான் பாரு! என்று சொல்லுவார். அந்த சமயத்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் எங்கள் தெருவிற்கு நான் தான் கேப்டன். எட்டணா காசிற்கு உயிரைக் கொடுத்து விளையாடுவோம். அறுவடை நடந்த வயல்கள் எல்லாம் எங்கள் கிரிக்கெட் மைதானங்கள்தான். சச்சினின் ஆட்டம் என்னை மிகவும் கவர்ந்தது.
    அப்போது இந்திய அணி சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் இல்லாமல் தடுமாறிக் கொண்டு இருந்தது. சித்து, ரவிசாஸ்திரி, மனோஜ்பிரபாகர், டபிள்யு,வி ராமன் ஆகியோர் அந்த இடத்திற்கு பரிசீலிக்கப்பட்டனர். நண்பர்களுடன் பேசும்போது ஓபனிங் சச்சின் பண்ணா நல்லா இருக்கும்டா! என்றேன். ஆனால் அது நிறைவேற நீண்ட நாட்கள் ஆனது. அவர் ஓபனர் ஆனபின் இந்திய அணி நிறைய சாதனைகளை குவித்தது. 1989ல் ராவல் பிண்டியில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அவர் அப்துல் காதிரின் பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்டது மறக்க முடியாத ஒன்று.
    அதுபோல 1992ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் அதுதான் சச்சினுக்கு முதல் உலக கோப்பை. பாகிஸ்தானுக்கு எதிராக அவர் அடித்த அரைசதம் மற்றும் முக்கியமான தருணத்தில் ஜாவித் மியாந்தத்தை அவுட்டாக்கி இந்தியாவுக்கு வெற்றி பெற்றுதந்தது மறக்க முடியாத ஒன்று.
   இந்த போட்டி பயங்கர டென்சனாக அமைந்த ஒன்று. இதில் அடிக்கடி அவுட் கேட்ட கீப்பர் கிரன்மோரே குதித்து குதித்து கேட்டார். அதை ஜாவித் மியாண்டட் நய்யாண்டி செய்து அதேமாதிரி குதித்து காட்டினார். மியாண்டட் களத்தில் இருக்கும்வரை வெற்றி அவர்கள் பக்கம் இருந்தது. சச்சின் அவரை எல்பி டபிள்யு முறையில் அவுட்டாக்க வெற்றி நம் பக்கமானது.
   ஆனாலும் சுற்றுப் போட்டிகளில் இந்த வெற்றியைத் தவிர வேறு எதையும் நாம் வெல்லவில்லை! அதனால் முதல்சுற்றோடு பரிதாபமாக நாம் வெளியேற வேண்டியதாயிற்று. ஆனாலும் நமது ரன் குவிப்பில் டெண்டுல்கர் பெரும் பங்கு வகித்தார்.

   அதன் பின் எத்தனையோ போட்டிகள்! குறிப்பாக சார்ஜாவில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆடிய இரண்டு சூறாவளி ஆட்டங்கள் மறக்க முடியாதவை! இவருடன் கங்குலி இணைந்த பின் இந்த ஜோடி உலகின் சிறந்த ஓபனிங் ஜோடிகளுல் ஒன்றானது.
     நியுசிலாந்திற்கு எதிராக 185 ரன்கள் குவித்த ஒரு ஆட்டம் சிறப்பான ஒன்று. வங்கதேசத்தில் சுதந்திர தின கோப்பையின் இறுதி ஆட்டத்தில் 18பந்துகளில் நாற்பது ரன்கள் விளாசிய ஒரு ஆட்டம் மிக சிறப்பு! அந்த போட்டியில் இன்னும் ஒரு அரைமணிநேரம் சச்சின் களத்தில் இருந்திருந்தால் இந்தியா எளிதாக வென்றிருக்கும். அதன் பின் கங்குலி நிலைத்து நின்று ஆட கடைசிபந்து வரை ஆட்டம் திரில்லாக சென்று இந்தியா வென்றது வேறு விசயம்.
   ஒரு முத்தரப்பு தொடரில் ஜிம்பாப்வேயின் ஹென்றி ஒலேங்கா வீசிய பந்தில் சச்சின் விரைவாக ஆட்டம் இழக்க அனைவரும் விரைவாக ஆட்டமிழந்து தோல்வியைத் தழுவினார்கள். அடுத்த போட்டியில் அதே ஒலேங்காவின் பந்துகளை சிக்சர்களாகவும் பவுண்டரிகளாகவும் சச்சின் பறக்கவிட இந்தியா பிரம்மாண்ட வெற்றிபெற்றது. வெற்றி பெற்றதும் இது நேற்று விரைவில் ஆட்டமிழந்தமைக்கு பழி வாங்கலா? இப்படி ஒலேங்காவின் பந்துகளை சிதறடித்து விட்டீர்களே என்ற போது, சச்சின் அமைதியாக சொன்னார் அவர் ஒரு சர்வதேச பந்துவீச்சாளர். நான் ஒரு சர்வதேச மட்டையாளன்! நேற்று அவருடைய நாள். இன்று என்னுடைய நாள். இன்று நான் சிறப்பாக ஆடிவிட்டேன்! நேற்று அவர் சிறப்பாக வீசினார். அவ்வளவுதான் என்றார்.
    இப்படி பல வெற்றிகளை அவர் குவித்து இருந்தாலும் இந்திய அணியின் கேப்டனாக இரண்டு முறை தேர்வாகியும் பிரகாசிக்கவில்லை! அதுவும் தென் ஆப்பிரிக்கவுடனான உள்நாட்டு டெஸ்ட் தொடரில் தோல்வியைத் தழுவ தன் கேப்டன் பதவியை ராஜினாமா செய்து கங்குலிக்கு வழங்கினார்.  இந்திய அணிக்கு நல்ல வீரர்களை அறிமுகம் செய்தவகையிலும் சச்சின் பெருமை அடையலாம். கங்குலி, தோனி போன்றவர்களின் திறமையை அறிந்து அவர்களை வளர்த்துவிட்டவர் சச்சின் எனலாம்.

   முதல் டி 20 உலக கோப்பை அணிக்கு தோனியை கேப்டனாக பரிந்துரை செய்தவர் சச்சின். இப்படி பலசிறப்புக்கள் கொண்ட சச்சின் சமீபகாலமாக பார்மில் இல்லாததால் அணியில் நீடிக்க வேண்டுமா? என்று பலர் பேச ஆரம்பித்து விட்டார்கள். ஓய்வு பெற நிர்பந்திக்கப்பட்டதாக கூட பேசினார்கள். தனது 200வது டெஸ்டில் விளையாடும் சச்சின் அதன் பின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
  ஒரு காலத்தில் சச்சின் இல்லையேல் அணி இல்லை என்று இருந்தது. நாங்கள் எல்லாம் சச்சின் அவுட்டானால் கிரிக்கெட் பார்க்காமல் எழுந்து சென்றுவிடுவோம். இன்று பல நட்சத்திரங்கள் மின்ன ஆரம்பித்துவிட்டன. இருந்தாலும் சச்சின் இல்லாமல் ஒரு போட்டியை காண்பது என்னைப் போன்ற சச்சின் ரசிகர்களுக்கு ஓர் வெறுமையே!
   சச்சினிடம் நான் ரசித்தவைகள் அவ்வப்போது பதிவாகும்! வாசகர்கள் ஆர்வத்தை பொறுத்து அது தொடரும்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. அந்த வங்கதேச தொடரில் கனிட்கர் அடித்த கடைசி பவுண்டரி இன்னும் கண் முன்னால் இருக்கிறது.

    இந்தியா பெற்ற செம 'த்ரில்லிங் வின்' அது.

    ReplyDelete
  2. சார்ஜாவில் இரண்டு ஆட்டங்கள் மறக்க முடியாதவை...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2