துரத்தும் நிழல் பகுதி 3
துரத்தும் நிழல் பகுதி 3
முன்கதை; பாக்கம் கிராமத்தில்
வசிக்கும் ஏழை குருக்கள் வைத்தியநாதனின் மனைவிக்கு கால் வீங்கி நடக்க முடியாமல்
போகிறது. வைத்தியரிடம் சென்ற போது இந்த வியாதியை குணப்படுத்த முடியாது என்று
சொல்கிறார்.
குத்தம்பாக்கத்தாரே! என்ன சொல்றீங்க?
ஆமாம் ஐயரே! இது எந்த
பூச்சிக் கடியினாலும் ஏற்பட்ட வீக்கம் மாதிரி தெரியலை! என் அனுபவத்திலே இதுக்கு
மருந்து கிடையாது.
எதுக்கும் ஒரு லிங்கம் போட்டுடுங்க!
இல்லாத நோய்க்கு மருந்து
கேக்கறீங்களே சாமி!
எங்க திருப்திக்கு நீங்க மருந்து கொடுத்துடுங்க!
சாமி! நான் மந்திரிச்சி கயிறு
போடுறேன்! ஆனா இது அதனாலே குணமாவாது! நீங்க யாராவது நல்ல டாக்டரா பாருங்கோ!
என்றார் குத்தம்பாக்கத்தார்.
இதற்குள் ஹேமாவின் கையில் இருந்த குழந்தை
சிணுங்கியது. குழந்தைக்கு பசிக்குது போல! நீ பால் கொடும்மா! அப்புறமா நான்
மந்திரிக்கிறேன் என்றார் பெரியவர்.
ஒரு பத்து நிமிட காத்திருப்புக்கு பின் ஹேமாவை
மீண்டும் சோதித்த அந்த பெரியவர் ஒரு துணி ஒன்றினை கயிறு மாதிரி கிழித்து வாயில்
ஏதோ முணுமுணுத்து மூன்று முடிச்சுக்கள் அந்த கயிறில் போட்டு அதை ஹேமாவின்
கழுத்தில் கட்டினார். இன்னையிலிருந்து ரெண்டு நாளைக்கு உப்பில்லாம சாப்பிடனும்.
எண்ணை சேர்த்துக்க கூடாது. தேங்காய் சேர்த்துக்காதீங்க! என்றார்.
அவரிடம் விடைபெற்ற பின் பஸ் நிறுத்தம்
வந்ததும் வைத்தியநாத குருக்கள் சொன்னார். ஹேமா நீ வேணா உங்க ஆத்துக்கு போய் நோய்
கொஞ்சம் குணமானதும் வர்றியா?
நம்ம ஆத்துல துணைக்கு யாரும் இல்லை! நான்
பூஜைக்கு போயிட்டா நீ தனியா இருக்கணும் நோயோட நீ எப்படி தனியா இருப்பே? இப்ப டைம்
ஒண்ணும் ஆகிடலை! உன்னை உங்காத்துல விட்டுட்டு வந்து நான் பூஜை பண்ணிக்கிறேன்! என்ன
சொல்றே?
எதுக்குங்க எங்காத்துக்கு எல்லாம் போயிட்டு!
ஏற்கனவே எங்கப்பா ஏடா கூடம்! இப்ப போய் நின்னா ஒருமாதிரி பேசுவாரு!
அவரு கிடக்கிறாரு விடு! நீ நம்ம ஆத்துல தனியா
இருந்து நடக்க முடியாம அசவுகர்யமா இருக்கும்! அங்க ரெண்டு நாள் தங்கினா உங்கம்மா
கூட மாட ஒத்தாசையா இருப்பா! கால் கொஞ்சம் சுகமானதும் நானே வந்து கூட்டிக்கிட்டு
வந்துடறேன்! குழந்தையும் வச்சிக்கிட்டு உன்னாலே இங்க கஷ்டப்பட முடியாது.
சரிங்க உங்க இஷ்டம்!
அந்த பஸ் நிறுத்தத்தில் அரைமணிநேரம்
காத்திருப்புக்கு பின் வந்த ஒரு தனியார் பேருந்தில் மெல்ல ஏறி பொன்னேரி வந்தனர்.
அங்கிருந்து ஒரு ரிக்ஷா பிடித்து ரயில் நிலையம் சென்றனர். அங்கிருந்து
அனுப்பம்பட்டிற்கு ஒரு டிக்கெட் எடுத்து வந்த ரயிலில் ஏறி ஹேமாவின் வீட்டிற்கு
வந்தனர்.
அனுப்பம்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து
கொஞ்ச தூரத்தில் இருந்தது அந்த கிராமம். கொஞ்சம் பசுமையான கிராமம்தான். ஒரு குதிரை
வண்டியில் ஏறி மாமனாரின் இல்லத்திற்கு மருமகன் வந்தடையும் போது நண்பகல்
ஆகிவிட்டது.
என்ன மாப்ளே! திடீர் விஜயம்? மாமனார் சண்முக
குருக்கள் கேட்டபடி வாசலில் வரவேற்றார்.
ஒண்ணுமில்லே மாமா! சும்மாதான்!
ஏண்டி பாக்கியம்! யாரு வந்திருக்கா பாரு!
சொம்புல தீர்த்தம் கொண்டு வா! என்று குரல் கொடுத்தார் சண்முக குருக்கள்.
வாங்க! வாங்க! சவுக்கியமா மாப்ளே! ஆத்துல
எல்லோரும் சவுக்கியம்தானே! என்று மருமகனை விசாரித்து மகளை உள்ளே அழைத்துச் சென்றாள்
மாமியார்.
அப்புறம் மாப்ளே! நேத்து தைக் கிருத்திகை முருகர் கோயில்ல
கூட்டம் எப்படி?
நல்ல கூட்டம் மாமா! சமாளிக்க முடியலை!
அப்புறம் என்ன விசேசம்
மாப்ளே! ஹேமா ஏன் சோர்வா இருக்கா?
மாமா! அது வந்து..
என்னாச்சு மாப்ளே! நேத்து கிருத்திகை முடிஞ்சு
நான் வீட்டுக்கு வந்ததிலேருந்து ஹேமாவுக்கு உடம்பு சரியில்லை!
என்ன ஆச்சு? உடம்புக்கு என்ன? ஜுரமா?
இல்ல மாமா! அவ ரெண்டு காலும் வீங்கி இருக்கு!
பூச்சிக் கடியா இருக்கும்னு லிங்கம் போட போனோம்! அவர் பூச்சிக்கடி இல்லேன்னு
சொல்லிட்டார்! மன திருப்திக்கு லிங்கம் போட்டு இங்க கூட்டிட்டு வந்திட்டேன்!
அவளாலே தனியா நடமாட முடியலை! ஆத்துல யாரும் ஒத்தாசைக்கு இல்லையே! அதான் இங்க ஒரு
ரெண்டு நாள் தங்கி வைத்தியம் பாத்துட்டு வரட்டும்னு விட்டுட்டு போக வந்தேன்!
அதானே பார்த்தேன்! சோழியன் குடுமி சும்மா
ஆடுமா? ஆ.. வூண்ணா மாமனார் வீட்டுல பொண்டாட்டியை விட்டுட்டு போயிடறேளே! நீர் என்ன
மனுசன்யா!
இல்ல மாமா! கூட யாரும் ஒத்தாசைக்கு இல்லை!
இங்கேன்னா மாமி இருக்கா!
ஏன் உனக்கு அம்மா இல்லையா? அவளை கூட்டிட்டு
வந்து வச்சிருக்கிறதுதானே!
வைத்தியநாதன் மவுனித்தார்.
ஊமை ஊரைக் கெடுக்கும்னு சொல்லுவா! ஏதாவது கேட்டா
ஊமையாடிறீர்! சரி என் தலைவிதி! என் பொண்ணை உமக்கு கொடுத்து அனுபவிக்கணும்னு
இருக்கு!
இதற்குள் சத்தம் கேட்டு ஹேமா வெளியே வந்தாள்.
என்னப்பா சத்தம்? அவரை எதுவும் சொல்லாதீங்கோ! நான் தான் அம்மா ஆத்துல
தங்கிக்கறேன்னு சொல்லிட்டு கூட்டி வந்தேன்! அவர் மாட்டேன்னுதான் சொன்னார்.
இந்த வக்காலத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே!
சரி மாமா! ஒரு ரெண்டு நாள்
பாத்துக்குங்க! நான் வந்து கூட்டிட்டு போயிடறேன்!
என்னங்க இவர்கிட்ட போயி கெஞ்சிகிட்டு! எனக்கு
வைத்தியம் செய்ய இவருக்கு உரிமையில்லையா என்ன? எல்லாம் செய்வார்! வாங்க
சாப்பிடலாம்!
இல்ல ஹேமா நான் கிளம்பறேன்! இன்னும் பூஜை கூட
பண்ணலை!
அப்பா! பாத்தீங்களா? நீங்க கோபிச்சிகிட்டதாலே
அவர் கோச்சுண்டு கிளம்பறேங்கிறார்!
மாப்ளே! தப்பா எடுத்துக்காதீங்க! வாங்க
சாப்பிடலாம்! உங்க மனுசா உதவ மாட்டேங்கிறாங்க என்ற ஆதங்கத்துல பேசிப்புட்டேன்!
இருவரும் உள்ளே நுழைய பாக்கியம் இலை போட்டு
சாதம் பறிமாறினாள்.
வைத்தியநாதன் இரண்டு கவளம் சாப்பிட்டு
முடித்திருப்பார் மூன்றாவது கவளம் எடுத்து வைக்கையில் வெளியே குரல் கேட்டது.
சாமி!
சண்முக குருக்கள் எழுந்து வெளியே சென்றார்
சிறிது நேரத்தில் உள்ளே வந்து இன்னிக்கு சோத்துல மண்ணுதான்! என்றார்
நிழல் துரத்தும்(3)
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
வந்தது யார்...? ஆவலுடன் காத்திருக்கிறேன்...
ReplyDeleteலிங்கம் போட்டதால் ஹேமாவின் நோய் தீர்ந்ததா ?
ReplyDeleteசாப்பிட முடியாமல் என்ன ஒரு ரோதனை வெளியில் ?