கிணற்றில் விழுந்த இந்தியா! கதம்ப சோறு பகுதி 7

வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை! சுப்ரீம் கோர்ட் அதிரடி!
    நமது நீதித்துறை அவ்வப்போது அரசியல் வாதிகளுக்கும் ஆளும் அரசுக்கும் ஷாக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கும். குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட தடை என்ற தீர்ப்பை வழங்கிய உடன் சட்ட தீர்திருத்தம் கொண்டு வந்து மகிழ்ந்து கொண்டிருந்த அரசுக்கு இப்போது இன்னொரு ஷாக் கொடுத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். பீப்புள் யூனியன் ஆப் சிவில் லிபர்ட்டி என்ற தன்னார்வ அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவின் விசாரணையின் போது நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரையும் பிடிக்கவில்லை எனில் அவர்களை நிராகரிக்கும் உரிமை வாக்காளர்களுக்கு உண்டு. இது அவர்களின் அடிப்படை உரிமை. நம் அரசியல் சட்டம் வாக்காளர்களுக்கு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் வழங்கியுள்ள நிலையில் வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமையை வாக்காளர்களுக்கு வழங்கவில்லை என்றால் அது சட்டத்தை மீறிய செயல் என்று வர்ணித்துள்ள நீதிமன்றம் ஜனநாயகத்தில் எதிர்மறை ஓட்டு அளிக்க மக்களுக்கு உரிமை உண்டு எனவே மின்னனு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்களுக்கு மேல் யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்ற பட்டனை பொருத்த தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. என்னதான் 49 ஓ என்று காது கிழிய கத்தினாலும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை! கிராமப்புற மக்களுக்கு இந்த தகவல் சென்றடைவதும் இல்லை! ஓட்டளிப்பு இயந்திரத்திலேயே வந்தாலும் கூட இதனால் பெரிய மாற்றம் ஏற்படும் என்று நம்புவதற்கில்லை என்றாலும் வாக்காளனின் உரிமை காப்பாற்றப்படுவதில் ஒருவிதத்தில் மகிழ்ச்சிதானே!

ஒரே செடியில் விளையும் தக்காளியும் உருளைக்கிழங்கும்!

     விஞ்ஞானம் வளர வளர அழிவுதான் என்று சும்மாவா சொன்னார்கள். காய்கறிகள், பழங்கள் செடிகள் என அனைத்திலும் ஹைபிரிட் பண்ணுகிறேன் என்று என்னென்ன மாற்ற முடியுமா அத்தனையும் செய்து வருகிறார்கள். அந்த வகையில் இப்போது பிரிட்டனை சேர்ந்த தாம்சன் அண்டு மார்கன் என்ற நிறுவனம் விவசாயத்தில் புதுமையை புகுத்தும் விதமாக ஒரே செடியில் இரு வேறு விதமான காய்கறிகளை உருவாக்கும் விதத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றுள்ளது.
   அதன்படி உருளைக் கிழங்கையும் தக்காளியையும் ஒரே செடியில் விளைவித்து அறுவடையும் செய்துள்ளது. இரு வேறு காய்கறிகளை ஒரே செடியில் விளைவிப்பது கடினமான காரியம். மரபியல் மாற்றங்கள் செய்து இது போன்ற செயல்களில் விஞ்ஞானிகள் வெற்றிக் கண்டுள்ளனர். ஆனால் மரபியல் முறையில் செய்யாமல் இயற்கையான முறையில் இரு செடிகளை இணைத்து அவற்றில் விளையும் காய்கறிகளை ஒரே செடியில் முதல் முறையாக விளைவித்துள்ளோம் என்கிறது இந்த நிறுவனம். என்னமோ போங்க! இத சாப்பிட்டு மனிதனுக்கு எந்த நோயும் வராதிருந்தா சரி!

நாய்க் கடிச்சா என்ன செய்யனும்?

    இப்போதெல்லாம் தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகமாகிவிட்டது. இவை கடித்தால் தொப்புளை சுற்றி பதினாறு ஊசி போட வேண்டும் என்று பயந்து கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. ஆனாலும் நாய்க்கடி என்றால் சும்மா இருக்க கூடாது. அது வளர்ப்பு நாயாக இருந்தால் கூட கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும் இல்லையேல் நேராக வைகுண்ட வாசமோ சிவலோகப் ப்ராப்தியோதான். இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 20 ஆயிரம் பேர் ரேபிஸ் நோயால் இறக்கின்றனர் என்கிறது ஒரு தகவல். உலகில் ரேபிஸால் இறப்போரில் 40 சதவீதம் பேர் இந்தியர்கள் என்கிறது இன்னொரு தகவல். சரி நாய் கடித்து விட்டால் என்ன செய்ய வேண்டும். நாய் கடித்த நாள் முதல் 3,7,14, 28 என ஐந்து நாட்கள் தசை தோல் பகுதியில் ஊசி போட்டுக்கொண்டால் போதும். தடுப்பூசி போடாமல் விட்டால் மட்டுமே ரேபிஸ் பரவி இறக்க வாய்ப்பு உண்டு,
  நாய் கடித்த காயத்தை குறைந்தது 15 நிமிடங்கள் நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். கிருமி நாசினிகள் போட்டு துடைத்து எடுக்க வேண்டும். தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் போடப்படுகிறது. அங்கு சென்று போட்டுக் கொள்ளலாம். அல்லது immunoglobulin  என்ற மருந்து ரூ 400 விலையில் கிடைக்கிறது. இதை வாங்கி கொடுத்து தனியார் மருத்துவ மனைகளில் 4 முதல் ஐந்து தவணைகளில் சிகிச்சை மேற்கொள்ளலாம்.
  காயத்திற்கு தையல் போடுதல், சுண்ணாம்புதடவுதல், பச்சிலை கட்டுதல் கள்ளிப்பால் ஊற்றுதல் போன்றவை செய்ய கூடாது. செல்ல நாய்க்குட்டிகள் நாவால் நக்குதல் கடிப்பது போன்றவை விலகி இருப்பது நல்லது.

ஆழ்துளை கிணறுகளும்! அப்பாவிகளின் மரணங்களும்!

   முன்பெல்லாம் வட மாநிலங்களில் தான் இந்த ஆழ்துளை கிணறு மரணங்கள் நடைபெறும். இதை நாம் பெரிது படுத்துவது இல்லை! இப்போதோ தமிழகத்திலும் இத்தகைய மரணங்கள் தொடர ஆரம்பித்துவிட்டன. புலவன் பாடியில் ஆழ்துளையில் விழுந்த சிறுமியை  உடனடியாக மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்ட போதும் மருத்துவமனையில் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டது. முறையான  எச்சரிக்கை உணர்வு இல்லாமல் ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் இருப்பதே இது போன்ற மரணங்களுக்கு காரணம். தோண்டப்படும் இது போன்ற கிணறுகள் உபயோகப்படுத்த படாத நிலையில் இரும்பாலான மூடிகள் கொண்டு மூடி அங்கே ஒரு எச்சரிக்கை பலகையும் நட்டு வைத்தால் இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கலாம். கிணறு உரிமையாளர் விழிப்புணர்வு இல்லாமல் இருந்தமையால் அப்பாவி சிறுமி உயிரை விட்டாள். இனியாவது இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க முறையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

 மீண்டுவந்த யுவராஜ்;

     கிரிக்கெட்டில் எனக்கு யுவராஜ்சிங் ரொம்ப பிடிக்கும். அவரது முதல் போட்டி சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முக்கிய விக்கெட்டுக்கள் இழந்த போது அவர் அதிரடியாக விளையாடி 87 ரன்கள் எடுத்தார். அப்போதே அவர் பிடித்துப் போனார். பாயிண்ட் திசையில் அவர் பாய்ந்து பந்துகளை தடுக்கும் விதமும் கேட்ச் செய்யும் விதமும் அபாரம். இப்போது நிறைய நல்ல பீல்டர்கள் வந்துவிட்டார்கள்தான். ஆனால் ஒரு பதினைந்து வருடங்கள் முன்பு நம் பீல்டிங் யுவராஜைத்தான் சார்ந்து இருந்தது. இடது கை சுழற்பந்து வீச்சில் கலக்கி அணியை இக்கட்டில் இருந்து காப்பாற்றுவதில் ஆகட்டும் இறுதிகட்டத்தில் விரைவாக ரன்கள் சேகரித்து அணியை வெற்றிபெறச் செய்வதிலாகட்டும் யுவராஜிற்கு நிகர் இல்லை! சில சலசலப்புக்கள் சர்ச்சைகளில் சிக்கினாலும் அவரது ஆட்டத்திறன் எனக்கு பிடித்த ஒன்று. உலக கோப்பை நாயகனான அவர் புற்று நோய் தாக்கி அணியில் இருந்து விலகிய போது இனி அவ்வளவுதான் என்றார்கள். நோயிலிருந்து தன்னம்பிக்கை மனிதராய் மீண்டு வந்த அவருக்கு அணியில் இடம் கிடைத்தாலும் நீடிக்க வில்லை! இப்போது சாலஞ்சர் தொடரில் அசத்தி ஆஸ்திரேலியாவிற்கான ஒருநாள் தொடரில் இடம் பிடித்துள்ளார். பெஸ்ட் ஆப் லக் யுவராஜ்.

லாலு இப்போ ஜெயிலிலே!

    கடந்த 1997ல் பரபரப்பாக பேசப்பட்டது கால்நடைத் தீவன ஊழல். இது பீகாரையே உலுக்கிப் போட்டது. அந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட லாலுபிரசாத் யாதவ் அப்போது முதல்வர் பதவியில் இருந்து விலகினார். அப்புறம் நிறைய ஆட்சி மாற்றங்கள்! காட்சி மாற்றங்கள்! ரயில்வே மந்திரியாக கூட மாறினார் லாலு. ஆனால் உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்து தானே ஆக வேண்டும். 17 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் லாலுவும் குற்றவாளி என்று  ராஞ்சி கோர்ட் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இவரைக் காப்பாற்றத்தான் குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட உதவும் அவசர சட்டத்தை காங்கிரஸ் அரசு அவசர அவசரமாக இயற்றியது.

மோடி ஜுரம்!

    நாடு முழுக்க இப்போது மோடி ஜுரம், பற்றிக் கொண்டுள்ளது. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் மோடி. முதலில் போபாலில் துவங்கிய அவரது பிரசாரம் தமிழகத்தில் திருச்சி, அதை தொடர்ந்து டில்லியில் நடைபெற்றது. அதில் நமது பிரதமரை வாரு வாருவென்று வாரிவிட்டார் மோடி. அமெரிக்க அதிபரிடம் இந்தியா ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் இந்தியாவுக்கு அவமானம் ஏற்பட்டுவிட்டது. பாகிஸ்தான்  பிரதமர் நமது பிரதமரை கிராமத்துப் பெண் என்று அவமரியாதை செய்கிறார்.இப்படி விமர்சிக்கும் தைரியம் அவருக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை! நமது பிரதமரை ஒரு வெளிநாட்டு பிரதமர் இப்படி அவமரியாதை செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாது. என்னை நான் ஆட்சியாளாக நினைத்தது இல்லை! சேவகனாகத்தான் நினைத்துக் கொள்கிறேன்! என்றெல்லாம் பேசிவருகிறார். மோடி அலை மாற்றம் தருமா? தெரியவில்லை!

சிலேட்டில் கணக்கு!
   கம்ப்யூட்டர் மயமாகி விட்ட நவின காலத்தில் இன்றும் சிலேட்டில் கடன் கணக்கு எழுதி கடை நடத்தி வருகிறார் பார்த்த சாரதி. சென்னையில் கொத்தவால் சாவடியில் ஆதியப்பன் தெருவில் ஒரு டீக்கடையில் இன்றும் கரும்பலகையில் கடன் கணக்கு எழுதி வைக்கப்படுகிறது. இது குறித்து கடை உரிமையாளர் பார்த்த சாரதி கூறியதாவது, என் தந்தை சுப்ரமணி நடத்திய தேநீர் கடையை இப்போது நான் பார்த்துக் கொள்கிறேன். ஆரம்பத்தில் இந்த கடை கருமாரி தேனீர் கடை என்று இருந்தது. இப்போது இந்தியன் தேநீர் கடை என்று பெயரில் நடக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக இந்த கடையில் நான் வேலைப் பார்த்தும் தற்போது நிர்வகித்தும் வருகிறேன். என் தந்தை காலத்தில் இருந்து கடன் பாக்கி வைப்பவர்கள் விவரங்களை கரும்பலகையில் எழுதி வைப்போம். இரண்டு மரச்சட்டத்தால் ஆன கரும்பலகை உள்ளது. இதில் ஒன்று இரண்டாக பிளந்து விட்டது. இருந்தாலும் இன்னும் பயன்பாட்டில் உள்ளது. இங்கு கூலித்தொழிலாளர்கள் அதிகம் என்பதால் கடன் பாக்கி வைப்பவர்கள் எண்ணிக்கைக்கு குறைவில்லை! ஆனால் காலையில் பாக்கி வைத்தவர்கள் மாலையில் தந்துவிடுவர். அப்படி இல்லையேல் மறுநாள் தந்துவிடுவர். அப்படியும் தராதவர்கள் பெயரை மட்டும் காகிதத்தில் எழுதி வைத்துக் கொள்வேன். தினமும் கரும்பலகையில் மட்டும் ரூ 300 முதல் ஆயிரம் ரூபாய் வரை கடன் கணக்கு எழுதப்பட்டு பின் வரவாகிவிடும். என்னை பொறுத்தவரை இதுதான் என்றைக்கும் மாறாத ரீ ரைட்டபிள் சிடி!  என்கிறார் பார்த்த சாரதி.

டிப்ஸ்! டிப்ஸ்!

 பட்டுத்துணிகளை அலசும் போது அரை மூடி எலுமிச்சையை அரைபக்கெட் தண்ணீரில் பிழிந்துவிட்டு அலசுங்கள். துணி பளபளப்பாகிவிடும்.

மஞ்சள் தூளில் வண்டு வராமல் இருக்க சிறிது கடுகு எண்ணெய் அல்லது நல்லெண்ணையை சூடாக்கி மஞ்சள் தூளில் விட்டு கலந்து காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்தால் பலமாதங்கள் ஆனாலும் கெடாது.

தும்மல் ஜலதோசமா? இரண்டுகப் தண்ணீரில் ஒரு கைப்பிடி தூதுவளை இலை, ஐந்து மிளகு, சேர்த்து ஒரு கப் ஆகும் வரை சுண்டக் காய்ச்சி வடிகட்டி பசும்பால் சர்க்கரை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க தும்மல் போயே போச்சு!

வெள்ளைத் துணிகளுக்கு நீலம் போட வாஷிங் மிசினை பயன்படுத்தாதீர்கள். நீலத்தில் உள்ள வேதிப்பொருட்கள் இயந்திரத்தை பழுதாக்கிவிடும்.

கொசுத்தொல்லைக்கு எளிய நிவாரணம். வேப்பெண்ணை அல்லது விளக்கெண்ணை ஊற்றி அகல் விளக்கு ஏற்றினால் கொசு வராது. நமது உடலுக்கு கேடும் வராது. வேப்பெண்ணை விளக்கு எரிந்தால் தீய சக்திகளும் அண்டாது.

  கிணற்றில் விழுந்த இந்தியா!

    பள்ளிக்கூடத்தில் நான் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாள், இந்திய தேசத்திற்கு ஒரு ஆபத்து வந்தது. “இந்தியா கிணற்றில் விழுந்து விட்டது..” என்று, ஒரு பரிதாபகரமான கூக்குரல் எழுந்தது. ஆசிரியர்கள் மாணவர்கள் எல்லோரும் ஓடிப்போய் பார்த்தோம். கிணற்றில் நெருக்கடியான நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல்…
     எல்லோரும் விழித்துக் கொண்டு இருந்தனர். நான் அந்த நாளில் கேட்ட சில தேசிய பிரசங்கங்களில், “தேசத்துக்காக நீங்கள் ஒரு துரும்பையாவது எடுத்துப் போட்டது உண்டா?” என்று நம் தலைவர்கள் அலறியது அச்சமயம் என் ஞாபகத்துக்கு வந்தது.
  
    உடனே இந்தியாவுக்காக துரும்பை எடுத்துப் போடுவது என்ன? ஒரு கல்லை தூக்கியே போடலாம் என்று முடிவு செய்தேன். கிணற்றில் விழுந்து முழுகாமல் தத்தளித்துக் கொண்டிருந்த இந்தியா  பேரில் ஒரு கல்லைத் தூக்கிப் போட்டேன். இந்திய தேசம் ஒரு “கீச்” சத்தம் கூட போடாமல் தண்ணீரில் மூழ்கிப் போய் விட்டது.
   இவ்வாறு இந்தியாவுக்கு சேவை செய்ததினால் நான் அச்சமயம் அடைந்த கஷ்ட நட்டங்களை சொல்ல முடியாது. அன்று முழுவதும் ஆசிரியர் கட்டளைப் படி பெஞ்சின் மேல் நிற்கும் கஷ்டம் ஏற்பட்டது. அல்லாமலும் ஒரு புதிய இந்திய தேசப்படம் வாங்கி வந்து கொடுக்க வேண்டியிருந்தது. இதன் மூலம் மூன்றரை ரூபாய் நஷ்டமும் ஏற்பட்டது.
       கல்கியின் நகைச்சுவை என்ற நூலில் இருந்து.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!








Comments

  1. டிப்ஸ்கள் உட்பட கலவையான செய்திகளின் தொகுப்பு... நன்றிகள்...

    ReplyDelete
  2. அருமையான தகவல்கள் நண்பா..

    ReplyDelete
  3. டிப்சும் சூப்பர்..

    ReplyDelete
  4. சுவையான பதிவு.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!