சென்னையில் மினி பஸ்ஸும் செய்யாத தப்புக்கு தண்டனையும்! கதம்ப சோறு பகுதி 10

கதம்ப சோறு பகுதி 10

சென்னையில் மினி பஸ்கள்;

     இன்று சென்னையில் புறநகர்களில் இயங்கும் வண்ணம் 50 மினி பேருந்துகளை இயக்கி வைக்கிறார் அம்மா. இந்த திட்டத்தை அறிவித்து ஆண்டுக்கணக்கில் ஆகியது. இதோ வரும் அதோ வரும் என்று சொல்லி சொல்லி இப்போது அமலுக்கு வருகிறது. முதல்கட்டமாக 50 பேருந்துகளும் இன்னும் சிறிது நாளில் 50 பேருந்துகளும் சென்னையில் இயங்க உள்ளன. இரண்டு நபர் இருக்கை உள்ள பத்து சீட்டுக்களும் கடைசி இருக்கையில் 6 நபர்களும் அமரும் வண்ணம் மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வண்ணம் தாழ்தள வசதியுடன் பேருந்துகள் தயாராகி உள்ளதாம். புறநகர்களை இணைக்கும் இந்த பேருந்து சேவையில் கட்டணமும் மற்றப் பேருந்துகளை விட குறைவாம். இதனால் ஷேர் ஆட்டோக்களும் ஆட்டோக்காரர்கள் மேஜிக் வண்டி ஓட்டுனர்கள் கொஞ்சம் பாதிக்கப்படலாம். அம்மா ஆட்சியில் வறவேற்க வேண்டிய பாராட்டக்கூடிய திட்டங்களில் இது ஒன்று. நிலைத்து நின்றால் நல்லதுதான். மற்ற மாவட்டங்களிலும் விரைவில் இந்த பேருந்துகள் இயக்கப்பட்டால் பேருந்து வசதியில்லாத குக்கிராமங்கள் பயனடையும் அம்மா இதை கவனிப்பாரா?

தங்கப்புதையல் தேடும் வேட்டை!

   வரவர சாமியார்கள் எதையாவது சொல்லி பேமஸ் ஆகிவிடுகிறார்கள். உத்திரப்பிரதேசத்தில் சோபன் சக்கார் என்ற புத்த சாமியார் ஒருவர் இப்படித்தான் இப்போது கிளம்பி உள்ளார். அவர் தன்னுடைய கனவில் மன்னர் வந்ததாகவும் கோட்டையின் அடியில் தங்கப்புதையல் இருப்பதாகவும் கிளப்பிவிட்டார். முதலில் இதை யாரும் கண்டுகொள்ளவில்லை. அங்குள்ள அமைச்சர் சரன் தாஸ் மகந்த் கவனத்திற்கு இது சென்றது. பின்னர் அவரது முயற்சியில் மத்திய அரசு இப்போது கோட்டையை தோண்டிப்பார்க்க உத்தரவிட்டுள்ளது. அதிரடியாக கோட்டைக்குள் அகழ்வாராய்ச்சி செய்து கொண்டிருக்கிறது தொல்லியல்துறை. இதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநலன் வழக்கையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இரண்டாயிரத்து ஐநூறுடன் தங்க புதையல் இருக்கிறது என்கிறார் சாமியார். கிடைத்து இந்தியப்பொருளாதாரம் மேம்பட்டால் சரி!

செத்துப்பிழைத்தவர்
   ஓசூரில் ஆம்பூரான் என்ற மாற்றுத்திறனாளி நோய்வாய்ப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிலமணிநேரத்தில் இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவிக்க இறுதிச்சடங்குகளில் மூழ்கினர் உறவினர்கள். இறுதி ஊர்வலம் சென்றபோது ஆம்பூரான் பாடையில் இருந்து எழுந்து கொள்ளவும் ஊர்வலம் சிதறி ஓடியது. சிறிது நேரத்தில் சகஜ நிலைமைக்கு வந்த உறவினர்கள் செத்து பிழைத்த ஆம்பூரானை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். சோக நிலை மாறி சந்தோஷ நிகழ்வுக்கு திரும்பியது ஆம்பூரான் குடும்பம்.

சூர்யாவின் புதிய படத்தில் ரெட் டிராகன் கேமரா அறிமுகம்

     லிங்குசாமி இயக்கத்தில் சூரியா நடிக்கும் படம் ஒன்றிற்கு ஹாலிவுட்டையே மிஞ்சும் வண்ணம் ரெட் டிராகன் காமிரா பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன்.  ஹாலிவுட்டை முந்திக்கொண்டு இந்த தொழில்நுட்பம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்க திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட ஒரே ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தொழில்நுட்பத் தகவல்களை திரு பரிதி முத்துராசன் வலைப்பக்கத்தில் காணலாம்.

8000 தீபாவளி சிறப்பு பேருந்துகள்:

     தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோருக்கு வசதியாக 8000 சிறப்புப்பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது. அனைத்து மாவட்டத்தலைநகர்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து இந்த மாதம் 29ம் தேதி 700, 30 தேதி 1000, 31ம் தேதி 1200, நவம்பர் 1ம் தேதி 1400,  என 4300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
  சென்னையை தவிர்த்து மாநிலம் முழுவதிலும் இருந்து 29ம் தேதி 634, 30ம்தேதி 950, 31ம் தேதி 1256, நவம்பர் 1ம் தேதி 1210 என மொத்தம் 4050 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்து திரும்புவோருக்கு வசதியாக இதே அளவிலான பேருந்துகள் 2ம் தேதிமுதல் 5ம் தேதிவரை இயக்கப்படும்.  மேலும் tnstc.in இணைய தளத்தில் 300 கி.மீ தூரத்திற்கு மேல் செல்லும் பேருந்துகளுக்கு முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இது தவிர 25 சிறப்பு முன்பதிவு மையங்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் செயல்பட உள்ளது. ஆம்னி பஸ்களின் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க 044 24794709 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். இவ்வாறு தமிழக அரசு செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

விராட் கோலி!

   இந்திய அணியில் விராத் கோலி இடம்பெற்றபோது அவ்வளவாக என்னை ஒன்றும் ஈர்க்கவில்லை! ஆனால் உலக கோப்பை போட்டிகளில் அவரது நிலையான ஆட்டம் கொஞ்சம் கவனிக்கவைத்தது.டிராவிட்டிற்கு பின் இந்தியாவின் சிறந்த ஒண்டவுன் வீரராக வலம் வருகிறார் கோலி. சச்சினைவிட வேகமாக சதங்களை குவித்துவருகிறார். இதே வேகத்தில் இவர் சதங்களை குவித்து சச்சின் வயது வரை கிரிக்கெட் விளையாடினால் கண்டிப்பாக சச்சினின் சத சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு உள்ளது. இவரது பேட்டிங் சராசரி 50.92 ஆக உள்ளது. இதுவரை 16 சதங்கள் அடித்த கோலி அதில் 10 ஐ சேசிங்கில் அடித்துள்ளார். இவர் அணிக்கு வந்தபின் நமது வெற்றிசதவீதம் கூடியுள்ளது. மைதானத்தில் எந்த பகுதியிலும் பந்துகளை விளாசி ரன் எடுப்பதில் வல்லவரான கோலியிடம் அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு கோபப்படுவது மட்டுமே! இந்தியாவின் வருங்கால கேப்டன் என்று வர்ணிக்கப்படும் கோலி  கோபத்தை தவிர்த்துவிட்டால் கேப்டன் பதவிக்கு சரியானவர்தான்.

லை-ஃபை சீனாவின் புதிய தொழில்நுட்பம்

   இணைய இணைப்புக்காக எல்.இ.டி பல்புகளை பயன்படுத்தி சமிக்ஞைகளை கடத்தும் லை-ஃபை என்ற புதிய தொழில் நுட்பத்தை சீன விஞ்சானிகள் கண்டறிந்துள்ளனர். ஷாங்காய் பியுடன் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பேராசிரியர் சி நான் தலைமையில் தொழில்நுட்பத்துறைமற்றும் இயற்பியல் துறை விஞ்ஞானிகள் இணைந்து இத்தொழில்நுட்பத்தை  கண்டறிந்துள்ளனர்.  இந்த புதிய தொழில் நுட்பத்தின் மூலம் ஒருவாட் திறன் கொண்ட எல் இ டி பல்பை கடத்தியாக பயன்படுத்தி நான்கு கணிப்பொறிகளுக்கு இணைய இணைப்பு கொடுக்கமுடியும். தற்போது ரேடியோ அலைகளை பயன்படுத்தி வை ஃபை  மூலம் இணைப்புகொடுக்கப்படுகிறது. மைக்ரோ சிப்புக்கள் பொதிக்கப்பட்ட எல்.இ.டி பல்பு கடத்தியாக பயன்படுத்தபட்டால் நொடிக்கு 150 மெகாபைட் அளவுள்ள தரவுகளை பரிமாற முடியும். இது சீனாவில் உள்ள ப்ராட்பேண்ட் சேவையைவிட வேகமானது. எங்கெல்லாம் எல்.இ.டி பல்பு உள்ளதோ அங்கெல்லாம் சேவை கிடைக்கும். பல்புகளை அணைத்துவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும். வரும் நவம்பர் 5ல் சீன சர்வதேச தொழில்நுட்ப கண்காட்சியில் இந்த கண்டுபிடிப்பு வைக்கப்பட உள்ளது.

பூனைக்கும் வந்திருச்சு சரக்கு!

   நாம் சாப்பிடும் எல்லாவற்றையும் தமது செல்லப் பிராணிகளுக்கும் கொடுப்பர் சிலர். நம்ம ஊரில் பந்தயத்திற்கு சேவலுக்கு சரக்கு ஊற்றி அனுப்புவது உண்டு. இந்த சரக்கு இப்போது நாய்களுக்கு வந்து பூனைகளுக்கும் பரவி விட்டது. ஜப்பானில் செல்லப் பிராணிகளுக்கு ஆகாரங்கள் தயாரிக்கும் பி அண்ட் எச் நிறுவனம் பூனைகளுக்கான ஒயின் ஒன்றை தயாரித்து இருக்கிறது. ‘ஞாங் ஞாங் நவ்யூ’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சரக்கில் ஆல்க்ஹால் கிடையாதாம்! நொதிக்காத திராட்சை ஜூஸ் மட்டும்பயன்படுத்தி தயாரித்துள்ளனராம். முதல் கட்டமாக 1000 பாட்டில்கள் விற்பனைக்கு வந்துள்ளதாம். வறவேற்பை பொருத்து மேலும் வருமாம். ஒரு பாட்டில் விலை 245 ரூபாய்தானாம். உங்க வீட்டு பூனைக்கு வாங்கி கொடுத்து பாருங்க! அப்புறம் அது சரக்கடிச்சிட்டு பண்ற சேட்டைகளை பதிவாவும் தேத்திடலாம்! எப்படி நம்ம யோசனை!

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!


குக்கர் பளிச் சென்று இருக்க வேண்டுமா? இரவே புளித்த மோரை குக்கரில் ஊற்றி மூடிவைத்து விடுங்கள் மறுநாள் எடுத்து தேய்த்துப் பாருங்கள் பள பளவென்று இருக்கும்.

பல்ப் கண்ணாடி பொருட்கள் உடைந்தால் சில்லுகளை சாணி உருண்டையில் ஒற்றி எடுப்பது வழக்கம். சாணி உருண்டை கிடைக்காவிட்டால் மைதா உருண்டையால் துடைத்து எடுக்கலாம்.

தொட்டாச்சிணுங்கி இலையை பறித்து மைய அரைத்து முகத்தில் பற்று போட்டு ஒரு மணி நேரம் கழித்து குளித்துவந்தால் பருக்கள் கொட்டிவிடும்.

வெண் தேமல் என்னும் அழுக்குத் தேமல் மறைய உத்தாமணி இலைச்சாறை பூசி ஒருமணி நேரம் ஊறி குளித்து வந்தால் தேமல் மறையும். நாகமல்லி இலைச் சாறும் தேமலை குணப்படுத்தும்.

செய்யாத தப்புக்கு தண்டனை! ஜோக்ஸ் கார்னர்!

       ஒரு வாத்தியார் ரொம்ப ஜாலி பேர்வழி! ஒரு நாள் கிளாஸுக்கு போனா ஒரு பையன் கண்ணீரும் கம்பலையுமா எழுந்திருச்சு நின்னான்.
  வாத்தியார் பதறிப் போய் என்னாச்சுடா தம்பி! தயங்காமா சொல்லு! நான் பார்த்துக்கிறேன்! அப்படின்னு தட்டிக் கொடுத்து கேட்டார்.
  அந்த பையன் சார்! செய்யாத தப்புக்கு யாராவது தண்டனை கொடுப்பாங்களா சார்? அப்படின்னு கேவிக்கிட்டு கேட்டான்.
  செய்யாத தப்புக்கு யாருடா அவன் தண்டனை கொடுக்கிறதுக்கு! கூப்பிடு அவனை! நான் கேக்கிறேன்! என்றார் வாத்தியார்.
  இல்ல சார்! வேண்டாம்! என்றான் மாணவன்.
பரவாயில்லை! நீ சொல்லு யாரு அது செய்யாத தப்புக்கு தண்டனை கொடுத்தது அந்த வாத்தியார் வற்புறுத்தி கேட்க
நீங்க கொடுப்பீங்களா மாட்டீங்களான்னு மடக்கினான் பையன்.
  சேச்சே! நான் அப்படி பட்ட வாத்தியாரு இல்லைடா! நான் எவ்வளவு நல்லவன் தெரியுமான்னு வாத்தியார் பீலிங் ஆயிட்டாரு!
  அப்பத்தான் அந்த பையன் சொன்னான்! கண்டிப்பா நீங்க செய்யாத தப்புக்கு தண்டனை கொடுக்க மாட்டீங்கதானே!
   இல்லடா மாட்டேன்!
     சட்டுன்னு அந்த பையன் சொன்னான், சார்! நான் இன்னிக்கு ஹோம் வொர்க் செய்யலை!
அப்படியே அசந்து போயி நின்னுட்டாரு அந்த வாத்தியாரு!

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
Comments

 1. பல்சுவை கதம்பம் அருமை !

  ReplyDelete
 2. இந்த வாரம் கதம்ப சோறு மிகவும் திருப்தி... நன்றி...

  ReplyDelete
 3. கதம்ப சோறு சுவையும் அதிகம் அளவும் அதிகம்.

  ReplyDelete
 4. மினி பஸ் நல்ல விசயம் தான் ...
  அப்புறம் என்ன காமிரா வந்தாலும் பழைய பஞ்சாங்கம் தான் பாடும் தமிழ் சினிமா ...
  இறந்தவர் பிழைப்பது இப்போது சாதாரண செய்திகளாகி விட்டது அண்ணே ... அடிக்கடி அப்படி தமிழ் நாட்டில் நடப்பதால் சொல்கிறேன் ...

  கதம்ப சோறு நல்லா இருக்கு அண்ணே

  ReplyDelete
 5. கதம்ப சோறு பலவிதமான பருக்கைகளுடன் அருமை தலைவா

  ReplyDelete
 6. மாணவன் கில்லாடியா இருப்பான் போல ஹா ஹா ஹா....

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2