“விலங்குகளின் தெரசா” சாதனா! சாதனை மனுஷி!

 திருவள்ளூர் மாவட்டம், பூண்டி நீரேற்று நிலையத்துக்கு அடுத்துள்ளது, கச்சூர் கிராமம். அங்கிருந்து, மூன்று கி.மீ., நடந்து சென்றால், வெங்கடாபுரம் வருகிறது. அங்கிருந்து, நீண்ட தூரம் நடந்து சென்றால், ஒற்றையடி பாதை. அதிலிருந்து அரை கி.மீ., பயணித்தால், 250க்கும் மேற்பட்ட மாடுகள், சுறுசுறுப்பாக, துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருக்கின்றன. 

ஒரு புறம் கோழிகளும், மறுபுறம் நாய்களும் திரிகின்றன. அவர்களின், பாதுகாவலனாக, கோசாலைக்கு நடுவில் தங்கி இருக்கிறார், சாதனா,65. கோமிய, சாண வாசங்களுக்கு இடையில், விலங்குகளுக்கு சேவை செய்து வரும், அவர், லண்டனில் படித்த மருத்துவர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆச்சர்யமாக கேட்டால், சிரித்தபடியே பதில் அளிக்கிறார்...

''நான் யார் என்பதை விட, நான் என்ன செய்து வருகிறேன் என்பதற்கே முக்கியத்துவம் கொடுங்கள்'' லண்டனில் மருத்துவம் படித்து, சாணி அள்ள வாழ்க்கை வடிவமைத்துக் கொண்டதற்கு, அதீத இரக்கமும் அக்கறையும் மட்டுமல்ல; அதையும் தாண்டிய அர்ப்பணிப்பு வேண்டும். அதை, நடைமுறையில் சாத்தியமாக்கிய சாதனா, விலங்குகளின் தெரசா. கசாப்பு கடைக்கு கொண்டு செல்லும் வழியில் மீட்கப்படும் மாடுகள்; கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்டு, அறநிலையத் துறையின் மூலம் வழங்கப்படும் மாடுகள்; கால்நடைத் துறையின் மூலம் வழங்கப்படும் மாடுகள் என, 500க்கும் மேற்பட்ட மாடுகளை பராமரிக்கிறார். வெங்கடாபுரத்தில் மட்டுமல்ல; சென்னையில் உள்ள நீலாங்கரையிலும், இவரது கோசாலையில், 350க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன.

எப்படி இவருக்கு பசுக்கள் மீதும், விலங்குகள் மீதும் ஈர்ப்பு வந்தது?

''எனது பூர்வீகம், பெங்களூரு. எனக்கு சிறுவயதில் இருந்தே, விலங்குகள் மீது பிரியம். நாளுக்கு நாள் அந்த எண்ணம் அதிகரித்து வந்தது. அப்போதே, விலங்குகளுக்கான பராமரிப்பு நிலையம் அமைக்க நினைத்தேன். இருப்பினும் பெற்றோர் வற்புறுத்தலால், லண்டனில் மருத்துவம் படித்தேன். நம் நாட்டுக்கு திரும்பி வந்தபோது, அந்த எண்ணம் அதிகரித்தது,'' ''கடந்த, 1973ல், குடும்ப சொத்துக்களைப் பகிர்ந்தளித்த போது, என் பங்காக, ஒரு கோடி ரூபாய் கிடைத்தது. அதையடுத்து, அந்த திட்டத்தை செயல்படுத்த நினைத்தேன். பெற்றோரும் முழு சம்மதம் அளித்தனர். 1974ல், மயிலாப்பூரில் கோசாலை அமைத்தேன்; பின், மந்தைவெளி, நீலாங்கரை என, அந்த பணி தொடர்ந்தது,'' தீர்க்கமாக சொன்னார் சாதனா.

அதிகாலை 5:00 மணிக்கு, பணியாளர்கள் கோசாலையை சுத்தம் செய்து, மாடுகளுக்கு தீவனம் வைக்கின்றனர். பொட்டுக்கடலை, உளுந்தம் பருப்பு, உப்பு என, ஆரோக்கியமான உணவு வகைகள், மாடுகளுக்கு கொடுக்கப்படுகின்றன. பின், சொற்ப வருமானம் தரும், பால் கறப்பு நடக்கிறது. அதன்பின், உடல்நிலை சரியில்லாத மாடுகளுக்கு, மருத்துவம் பார்க்கப்படுகிறது. அசை போட்டபடி, மாடுகள் உறங்குகின்றன. மீண்டும், மாலை 4:00 மணிக்கு, கோசாலையை சுத்தம் செய்யும் பணி நடக்கிறது.

தொடர்ந்து சாதனா கூறுகையில், ''மாடுகளுக்கு, நான்கு வயிறுகள் உள்ளன. முதல் வயிறு, அவசரமாக உண்ணும். இரண்டாம் வயிறு அசை போட்டபடி உண்ணும். மூன்றாம் வயிறு, இரண்டாம் வயிறிலிருந்து, பெறப்படும் உணவை செரிக்கும். நான்காம் வயிறு, மீதமானவற்றை சாணமாக வெளியேற்றும்,'' என்றார். மேலும், ''பல மாடுகள், சாலையில் கிடக்கும் பிளாஸ்டிக் பைகளை தின்று இறந்திருக்கின்றன'' ''நீங்கள் சாலையில், தேவைஇல்லாத பிளாஸ்டிக் பைகளை போட்டால், அதன் மூலம், ஒரு மாடு இறக்கப் போகிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்,'' என்றார்.

ஒட்டுமொத்த சொத்தையும், 40 ஆண்டுகளாக, கோசாலைக்கான நிலம் வாங்குவதிலும், மாடுகளை மீட்பதிலும், செலவிட்ட பிறகு, இன்று, நன்கொடையாளர்களையே நம்பி இருக்கிறார், சாதனா. இரண்டு கோசாலைகளுக்கும், அதிக அளவில், ஜெயின் சமூகத்தை சார்ந்தவர்களே, உதவி வருகின்றனராம். அவர்கள், மாடுகளுக்கு சேவை செய்வதை, வாழ்வில் ஒரு பகுதியாகவே நினைப்பராம். அதனால், அவர்கள் தரப்பிலிருந்து வரும் நிதியுதவியும், பொருளுதவியும், ஓரளவுக்கு கோசாலை நடத்த உதவியிருக்கின்றன. கடந்த, 40 ஆண்டுகளாக, மாடுகளுக்கு தன் வாழ்க்கையை ஒப்படைத்தாலும், அவரது நெஞ்சில் நீங்காத முள் ஒன்று உள்ளது. அவர் கோசாலை நடத்தும் பகுதிகளில் எல்லாம், பகுதிவாசிகள் புகார் செய்வது தான். ''காடுகளாக இருக்கிற போது, நாங்கள் கோசாலையை நடத்துகிறோம். நகரமான பின்பு குடியேறுகிறவர்கள், எங்களை குறை சொல்கின்றனர்,'' என்கிறார், வேதனையுடன்.

இவர் நடத்தும் கோசாலைகளில், ஒவ்வொரு மாட்டுக்கும் ஒரு பெயர் உண்டு. கோசாலை பணியாளர்கள் சுத்தம் செய்ய வரும் போது, முரண்டு பிடிக்கும் மாடுகள், சாதனாவின் கண்களை கண்டவுடன், குழந்தையைப் போல், பணிந்து போகின்றன. அங்குள்ள நான்கு நாய்களும், கிண்ணி கோழிகளும், இவரை நிழல் போல தொடர்கின்றன. அடுத்த நாளை எப்படி கழிக்கப் போகிறோம் என்ற பயமின்றி, சாதனாவின் நாட்கள் கழிகின்றன. ''ஒரு முறை காஞ்சி பரமாச்சாரியார் எங்கள் கோசாலைக்கு வந்தார். அவர் பெண்களிடம் பேச மாட்டார் என்பதால், அருகில் இருந்தவர்களிடம், 'இந்த அம்மா பெரும் சேவை செய்து வருகிறார். அவருக்கு தாகம் எடுக்கும் போது, தண்ணீர் கிடைக்கும்' என்றார். அது போலவே, நான் இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாகும் போதெல்லாம், இறைவன் மனிதர்களாக வந்து, மாடுகளுக்கு உதவுவார்,'' என்றார் உருக்கமுடன். (தொடர்புக்கு: 98404 56623)

நன்றி: தினமலர்

Comments

  1. உயர்ந்த சேவைதான் வாயில்லா ஜீவன்களை காப்பாற்றுவது.

    ReplyDelete
  2. இப்படிப்பட்ட மனிதர்களும் இருப்பதால்தான் மழை பெய்துகொண்டிருக்கிறது போலும். வாழ்த்துவோம் பாராட்டுவோம்.முடிந்தால் உதவுவோம்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் இதை வாசிக்கும்போது அவர் தயாள குணத்தை, சேவையை எண்ணி உள்ளமும் உடலும் சிலிர்க்கின்றது சகோதரரே!..

      ஜீவ காருண்ய தெரேசா!..
      அவர் இலட்சியம் நிறைவேற மனதார வாழ்த்துகிறேன்!..

      பகிர்வினுக்கும் உங்களுக்கு மிக்க நன்றி சகோ! வாழ்த்துக்கள்!

      Delete
  4. ஒரு சில நல்லவர்கள் நாட்டில் இருப்பதால்தான் நாட்டில் கொஞ்சமேனும் மழை பெய்கிறது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2