துரத்தும் நிழல் பகுதி 2

துரத்தும் நிழல் பகுதி 2

முன்கதை: பாக்கம் கிராமத்தில் மனைவி சிறு கைக்குழந்தையோடு வசிக்கும் வைத்தியநாத குருக்கள் பக்கத்து ஊர் முருகர் கோயில் தை கிருத்திகை விழாவில் கலந்து கொண்டுவிட்டு வீட்டிற்கு வருகிறார். அங்கு அவரது மனைவிக்கு உடல் சுகவீனமாக உள்ளது.

இன்றைக்கு ஒரு மணி நேரம் மின்சாரம் இல்லாவிட்டால் ஊரே அல்லோகலப்பட்டு விடுகிறது. ஆனால் இன்றைக்கு சுமார் நாற்பது நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் நடக்கும் இந்த கதையில் இந்த கிராமத்தில் எங்கோ ஓரிரண்டு வீடுகளில் தான் மின் விளக்கு. மற்ற வீடுகள் எல்லாம் மண்ணெண்ணெய் விளக்குத்தான்.
   கிராமங்களில் அந்த காலத்தில் முன்னிரவிலேயே உணவு உண்டு முடித்து விட்டு விளக்குகளை அணைத்து விடுவார்கள். சில வீடுகளில் மட்டும் பெயருக்கு ஒரு சிம்னி விளக்கு எரிந்து கொண்டிருக்கும். வைத்தியநாத குருக்கள் வீடும் அப்படித்தான். இரண்டு லாந்தர் விளக்குகள் இரண்டு சிம்னி விளக்குகள் உண்டு. லாந்தர் விளக்குகளை சாப்பிடும்போதும் இரவு படிக்கும் போதும் பயன்படுத்துவார்கள். அந்த மாதிரி ஒரு லாந்தரை ஏற்றி வைத்துவிட்டு இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இரவு மணி பதினொன்றை கடந்து கொண்டு இருந்தது.
   ரொம்ப நாழியாயிருச்சு இன்னிக்கு! கிருத்திகைக்கு நல்ல கூட்டம்! வருமானமும் கொஞ்சம் அதிகம்தான்! நாளைக்கு குழந்தைக்கு பால் டின் வாங்கிரலாம்! என்றார் வைத்தியநாதன்.
    ஹேமா ஒன்றும் சொல்லாமல் மெலிதாய் புன்னகைத்தாள். உண்டு முடித்ததும் அடுக்களையில் பாத்திரங்களை ஒழித்துவிட்டு வந்து ஹாலில் படுத்தார்கள் குழந்தை யானையில் வீறிட்டு அலறியது.
    பசி வந்திருத்து போல! ஏழு மணி போல கொஞ்சம் கஞ்சி கொடுத்து படுக்க வைச்சேன்! இப்ப மணி பன்னிரண்டாக போறதோ இல்லையா? அதான் அழறா!
     வைத்தியநாதன் மெதுவாக எழுந்து குழந்தையை தூளியிலிருந்து எடுத்து கைகளில் பிடித்துக் கொண்டு ஆராரோ ஆரிரிரோ! என்று தாலாட்டு பாடி சமாதானப்படுத்த ஹேமா நடக்க முடியாமல் எழுந்து பால் கலக்க சென்றாள்.
    பால் கொடுத்து முடித்துவிட்டு இருவரும் படுத்து உறங்கிப் போயினர்.
    அன்று வழக்கத்தினை விட அதிகமாக தூங்கிவிட்டிருந்தார் வைத்திய நாதன்.அவர் விழித்த போது சூரியன் உதித்துவிட்டிருந்தான். பக்கத்தில் ஹேமா இன்னும் எழுந்திருக்கவில்லை! ஹேமா! ஹேமா! எழுந்திரு! மணி ஆறரை ஆயிருச்சு! சூரியன் கூட உதிச்சிருச்சு! என்று மனைவியை தட்டி எழுப்பினார்.
     கண்விழித்த ஹேமா எழுந்திருக்க முயன்று தோற்றாள். என்னங்க! என்னால எழுந்துக்க முடியலைங்க! கால் ரெண்டும் பாறையாட்டும் இருக்குதுங்க! காலை அசைக்க முடியலை! என்றாள்.
   என்ன ஆச்சு! கொஞ்சம் பதறியவாறு மனைவியின் கால்களை தொட்டுப் பார்த்தார் வைத்தியநாதன். கால்கள் இரண்டும் பெரிதாக வீங்கிப் போயிருந்தன. ஏன் இப்படி ஆச்சு! ஏதாவது பூச்சி கடிச்சு இருக்குமா? என்ற சிந்தனைகள் அவருள் ஓடின.
   இதற்குள் திண்ணையில் படுத்திருந்த பொன்னம்மா கிழவி உள்ளே வந்தாள். என்னாச்சு சாமி? அயிரம்மா ஏன் அழுகுது? என்றாள்.
    கால் ரெண்டும் வீங்கி போயிருக்கு பொன்னம்மா! என்னாச்சுன்னே தெரியலையே! என்றார் குருக்கள் கவலையுடன்.
    வீட்டை சுத்தி இவ்ளோ புதர் வளர்ந்து கிடக்கு! வெளியே நடமாடறப்போ! ஏதாவது பூச்சி பொட்டு கடிச்சிருக்கும். எனக்கு என்னமோ சிறுபாம்பு கடிச்சிருக்குமோன்னு தோணுது. எதுக்கும் நம்ம குத்தம்பாக்கத்தார்கிட்ட போயி லிங்கம் போட்டுக்கினு வந்திரு சாமி! என்றாள் பொன்னம்மா!
     என்னங்க எனக்கு பயம்மா இருக்கு! என்றாள் ஹேமா.
ஒண்ணும் பயப்படாதே ஹேமா! ஏதாவது பூச்சித்தான் கடிச்சி இருக்கும். லிங்கம் போட்டுட்டு வந்தா சரியா போயிரும். முதல்ல மெதுவா எழுந்து பல் தேய்! நான் காபி போடறேன்!
   ஹேமாவை மெதுவாக கைப்பிடித்து எழுப்பி பல் தேய்க்க அனுப்பி விட்டு மண்ணெண்ணை ஸ்டவ்வில் பால் காய்ச்ச ஆரம்பித்தார் வைத்திய நாதன்.
   சுமார் ஒரு பத்துநிமிட காத்திருப்புக்கு பின் பால் பொங்கியதும் அதை இறக்கிவைத்துவிட்டு தண்ணீர் வைத்துவிட்டு வந்தார்
 ஹேமா பல் தேய்த்து முடித்து இருந்தாள். மெதுவாக அவளை கூட்டி வந்து ஹாலில் அமர வைத்துவிட்டு காபி கலந்து வந்து அவளுக்குத் தந்துவிட்டு தானும் அருந்தினார். பின்னர்.கோயிலுக்கு வந்தார்.
  அங்கு பண்டார மாணிக்கம் நின்று கொண்டிருந்தார். சாவியை அவரிடம் தந்துவிட்டு, மாணிக்கம் கோயில்ல தீபம் ஏத்திட்டு பூ எல்லாம் பறிச்சுவை! அம்மாவை ஏதோ பூச்சி கடிச்சிருச்சி போல! பஞ்செட்டி வரை போய் வந்துடறேன்!
    சரிங்க சாமி! நீங்க கூட்டிட்டு போய் வாங்க! நான் பாத்துக்கறேன்! என்றவன் அவர் கூடவே வந்து ஹேமாவை பார்த்தான். சாமி! இது என்ன அதிசயமா இருக்கு! இப்படி வீங்கி போயிருக்கே காலுங்க! முகம் கூட கொஞ்சம் ஊதுனா மாறி இருக்கு! எதுக்கும் நீங்க ஆஸ்பத்திரிக்கும் போயிட்டு வந்துருங்க என்றான்.
    வைத்திய நாதன், தன்னுடைய சைக்கிளை தள்ளி வந்து நிறுத்தி காற்று இருக்கிறதா? என்று சரிபார்த்து விட்டு அதில் ஹேமாவை அமர்த்தி ஒரு மாதிரி தள்ளி மிதித்துக் கொண்டு பஞ்செட்டி வந்து சேர்ந்தார்.
     பஞ்செட்டியும் ஒரு கிராமமே! ஆனால் சென்னை- கொல்கத்தா சாலையின் வழியே அமைந்த ஒரு கிராமம். நிறைய புராதன சிறப்புக்கள் கொண்டிருந்த அந்த கிராமத்தில் அப்போது இருந்த சில நாட்டு வைத்தியர்களில் ஒருவர்தான் குத்தம் பாக்கத்துக்காரர். அவரது இயற்பெயர் என்னவோ? அது அவருக்கே கூட மறந்து போயிருக்கலாம்! குத்தம்பாக்கம் என்னும் கிராமத்தில் இருந்து வந்து சேர்ந்தவர் ஆதலால் அந்த பெயர் நிலைத்துவிட்டிருந்தது.
     ஒரு சிறிய குடிசை வீட்டில் வசித்துவந்தார் அவர். வாசலில் அம்மி உரல் போன்ற வஸ்துக்கள் இருக்க ஒரு பெஞ்ச் ஒன்றும் போட்டு வைத்திருந்தது. அந்த பெஞ்சில்  ஹேமாவை அமரவைத்துவிட்டு குத்தம்பாக்கத்தாரே! என்று குரல் கொடுத்தார் குருக்கள்.
   குரல் கேட்டு வெளியே வந்தார் குத்தம்பாக்கத்தார். ஒடிசலான தேகம். தலை முன் வழுக்கை கண்டிருந்தது. முறுக்கு மீசை வைத்து இருந்தார். லுங்கியும் பனியனும் அணிந்திருந்த அவர் பார்வைக்கு முரடனாய் தென்பட்டார். ஆனால் அவரது குரல் சரியாக டியுன் பண்ணாத இலங்கை வானொலி போல பிசிறு தட்டியது. என்ன ஐயரே! காலையிலே என் ஊட்டுப் பக்கம்? என்றார்.

   என் ஆத்துக்காரியை ஏதோ பூச்சி கடிச்சிருச்சு போல! காலெல்லாம் வீங்கி போயிருக்கு! நீங்க தான் மந்திரிச்சு விடனும்.
   குத்தம்பாக்கத்தார் ஹேமாவை பார்த்தார். வீங்கியிருந்த கால்களை பார்த்தார். கண்களை உற்றுப் பார்த்தார்.
   சாமி! நீங்க இடம் மாறி வந்துட்டீங்க! இது பூச்சிக் கடி இல்லை! நீங்க யாருக்கோ வச்ச தீ! இப்ப உங்களை பிடிச்சிருக்கு! இதை அணைக்கிறது கஷ்டம் என்றார்.
   என்ன சொல்றீங்க?
ஆமா சாமி! இது பூச்சிக் கடி இல்லை! இந்த கடிக்கு என்கிட்ட மருந்து இல்ல! மருந்து குடிச்சாலும் தீராது இந்த வியாதி! என்றார் அவர் தீர்க்கமாக!
                          நிழல் துரத்தும். (2)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. அட அப்படி என்ன வியாதி ?
  மூடு மந்திரமாக இருக்கிறதே !
  சரியான இடத்தில புல் ஸ்டாப் வைத்து விட்டீர்களே .....

  ReplyDelete
 2. அப்படி என்னங்க வியாதி...?

  ஆவலுடன்...

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2