ஐப்பசியில் அன்னாபிஷேகம்!

ஐப்பசியில் அன்னாபிஷேகம்!

ஐப்பசி மாத முழுநிலவு நாளில் அஸ்வினி நட்சத்திரம் கூடி வரும் வேளையில் உலகெங்கும் உள்ள சிவ ஆலயங்களில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது மரபு. ஒவ்வொரு மாத பவுர்ணமியிலும் ஒவ்வொரு அபிஷேகம் சிறப்பாகும். ஐப்பசி மாத பவுர்ணமியில் உலகம் முழுவதையும் காத்து படி அளக்கும் சொக்கநாத பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது மிகச்சிறப்பாகும்.

   தானத்தில் சிறந்தது அன்னதானம் ஆகும். ஒருவனுக்கு எதைக் கொடுத்தாலும் போதும் என்று சொல்லும் மனம் வராது. சோறு எனப்படும் அன்னம் மட்டுமே போதும் என்று சொல்ல வைக்கும். நாம் உண்ணும் உணவிற்கும் நமது எண்ணத்திற்கும் கூட தொடர்பு உண்டு. நமது உணவு நமது மனசையும் உடலையும் ஆட்டுவிக்கிறது. இதைப்பற்றிய நிறைய கதைகள் உண்டு. துறவி ஒருவர் மன்னர் ஒருவரின் அரண்மனையில் தங்கினார். அன்று அரண்மனையில் அவருக்கு தடபுடலான விருந்து பறிமாரப் பட்டது. அன்று இரவு அவர் அரண்மனையில் தங்கினார். தூங்கி எழுந்த போது விடியவில்லை! அரண்மனையில் அவர் தங்கியிருந்த அறையில் இருந்த வெள்ளி குத்து விளக்கு அவர் கண்ணில் பட்டது. அதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிட்டது. சொல்லாமல் கொள்ளாமல் அதை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்.
   மறுநாள் அவருக்கு தான் செய்தது தவறு என்ற எண்ணம் உதித்தது. எத்தகைய பாவத்தை செய்து விட்டோம்! உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்துவிட்டோமே என்று வருந்தினார். உடனே அரண்மனைக்கு சென்று, மன்னரிடம் நடந்ததை கூறி விளக்கை ஒப்படைத்து தவறுக்கு வருந்தினார்.  அனைத்தையும் துறந்த தமக்கு ஏன் இவ்வாறு நேர்ந்தது என்று பலவாறு சிந்தித்தார். பின் தாம் உண்ட உணவே இதற்கு காரணமாக இருக்க கூடும் என்று அரசனிடம் விசாரித்தார்.
   அரசன் மந்திரியிடம் கேட்டான். மந்திரி உணவுக்கூடத்தில் விசாரித்தார். முடிவில் திருடன் ஒருவனிடம் பறிமுதல் செய்யப்பட்ட அரிசி உணவுக்கூடத்திற்கு வந்து அது சமைத்து உணவாக பறிமாறப்பட்டுள்ளது தெரிந்தது. நாம் உண்ணும் உணவு நம்மை எப்படியெல்லாம் பாதிக்கின்றது பார்த்தீர்களா?
   அதனால்தான் அந்த காலத்தில் பெரியோர்கள் வெளியே யார் வீட்டிலும் உணவருந்த மாட்டார்கள். தன் வீட்டில் தானே சமைத்து உண்பார்கள்! அல்லது மனைவி சமைத்து உண்பார்கள். அன்னமே தெய்வம்! எனப்படுகிறது. இந்த காலத்தில் எப்படி எப்படியோ உணவுகள் வீணாக்கப்படுகிறது. ஒரு பருக்கை சாதம் சாக்கடையில் வீசினாலும் அடுத்த ஜென்மத்தில் புழுவாக பிறக்கவேண்டும் என்கிறது சாஸ்திரங்கள்! இரவில்  விளக்கு வெளிச்சம் இன்றி உணவை அருந்தக் கூடாது என்றும் சொல்லப்படுகிறது.

  ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம். அதை ஏன் ஐப்பசி மாத பவுர்ணமியில் செய்ய வேண்டும். மற்ற மாதங்களில் செய்யலாமே? ஐப்பசி மாதப் பவுர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறான். அது என்ன சாபம்? தெரிந்த கதைதான். சந்திரன், அஸ்வினி, முதல் ரேவதி வரையான தனது நட்சத்திர மனைவியருள் ரோகிணியிடம் மட்டும் தனி அன்பு செலுத்தி மற்றவர்களிடம் பாரபட்சம் காட்டியதால், மாமனார் தட்சனால் உடல் தேயட்டும் என்று பெற்ற சாபம். சந்திரனுக்கு ஒவ்வொரு கலையாக தேய ஆரம்பித்தது. அவன் மிகவும் வருந்திக் கெஞ்சவே, திங்களூரில் சிவனை பூஜித்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்றார், தட்சன். உடனே அவன் திங்களூர் வந்து சிவனை நோக்கி தவம் செய்யத் துவங்கினான். அவன் மேனியின் ஒளி நாளுக்கு நாள் மங்கத் துவங்கியது. மூன்றே மூன்று கலைகள் மிச்சமிருக்கும் போது சிவனார், அவன்பால் மனமிரங்கி அந்தப் பிறையைத் தனது தலையில் அணிந்து கொண்டார். கொடுத்த வாக்கை மீறிய அவனுக்கு பதினாறு கலைகளும் கிடைக்கப் பெற்றாலும் முழுப்பொலிவும் வருடத்தின் ஒரு நாள் அதாவது ஐப்பசி பவுர்ணமி அன்று மட்டுமே கிடைக்கும். அது மட்டுமல்ல அவனது ஒளி தினமும் தேயும் முழுவதும் மறைந்து பின் படிப்படியாக வளரும். இது எப்போதும் நடக்கும் ஒரு சுழற்சியாக இருக்கும் என்று அருளிச் செய்தார் விடைவாகனர். திங்கள் முடிசூடியவருக்கு மதி முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வதுதானே சிறப்பு ! ஆன்மிக ரீதியாக மட்டுமன்றி அறிவியல் ரீதியாகவும் இதற்கு ஆதாரம் இருக்கிறது. அக்டோபர் (ஐப்பசி) மாதத்தில்தான் நிலவு, பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசுகிறது என்கிறது வானவியல். நவகிரங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. இதை உணர்ந்த நமது ரிஷிகள் அந்த மாதத்தில் அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்று கண்டறிந்து அதனை நடைமுறைப்படுத்தினார்கள்.

உணவு. உணவின்றி உயிரில்லை. உயிரின்றி உலகில்லை. அன்னம் எனும் உணவே அனைத்திற்கும் ஆதாரம்.வேதங்கள் அன்னத்தை மிகவும் போற்றுகின்றன. தைத்ரீய உபநிஷதம், சாம வேதம் போன்ற ஸ்ம்ருதிகள் அன்னத்தின் புகழைப் பறை சாற்றுகின்றன. 

    ஐப்பசி பௌர்ணமி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும்  அன்னாபிஷேகம்  எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்திக்கு நடத்தப்படுகிறது. அனைத்து உயிர்களுக்கும் அன்னமான உணவை அளித்துப் பாதுகாக்கும் சிவபெருமானுக்கு சுத்த அன்னத்தைக் கொண்டு முழுக்காட்டுவது இந்த நாளின் சிறப்பாகும். இனிப்பு, காய்கறி மற்றும் பழங்களுடன் செய்யப்படும் சுத்த அன்னாபிஷேகக் காட்சி, ஆலயத்துக்கு வழிபட வரும் பக்தர்களை பரவசத்துக்குள்ளாக்குகிறது. இந்த அன்னாபிஷேக நாளன்று சிவாலயங்களில் கருவறையிலுள்ள சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனை முடிந்த பின்னர், சமைத்த சுத்த அன்னத்தைக் கொண்டு திருமுழுக்காட்டப்படுகிறது. லிங்கத் திருமேனி மறையுமளவுக்கு அன்னம் குவிக்கப்பட்டு, இனிப்புகள், பழங்கள் நிவேதனதுக்கு வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெறுகின்றன.

   கங்கை கொண்ட சோழபுரத்தில் இறைவனுக்கு ஆலயம் அமைத்த ராஜேந்திர சோழன் விசேசமாக அன்னாபிஷேகம் செய்வித்து விழா கொண்டாடினான். தற்போது காஞ்சிப்பெரியவர் ஆலோசனையின் படி 108 மூட்டை அரிசி சாதம் வடிக்கப்பட்டு இறைவனுக்கு சார்த்தப்பட்டு பின்னர் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

     சோறு நம் பசிப்பிணியினை போக்கவல்லது! வயிற்றுத்தீயை அணைக்கவல்லது! யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி என்றார் திருமூலர்! அத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்து அதை பிரசாதமாக பெறுவது என்பது நம் பாக்கியம் ஆகும். இன்று அன்னாபிஷேக நன்னாள்.
   பெரும்பாலான சிவாலயங்களில் உச்சிக்காலத்தில் இந்த அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். இறைவனுக்கு பலவித அபிஷேக திரவியங்களால் அபிசேகம் செய்வித்தபின் அன்னத்தால் அபிஷேகம் செய்வித்து காய்கறிகள் பழங்களால் அலங்காரம் செய்து நிவேதனம் செய்து தீபாராதனை செய்விப்பார்கள். அரிசியே லிங்க வடிவமானது. சிவலிங்கத்திற்கு லிங்க வடிவிலான அன்னத்தால் அபிஷேகம் செய்வதை காண்பது பெரும் பாக்கியமாகும். கோடி சிவதரிசனப் பலன் கிடைக்கும்.
  
இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாது அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று இறைவனின் அன்னாபிஷேக கோலத்தை தரிசித்து மகிழுங்கள்! இறையருள் பெறுங்கள்!

செங்குன்றம் அருகே பஞ்செட்டி அடுத்துள்ள நத்தம் கிராமத்தில்( எனது ஊர்) இறைவன் வாலீஸ்வரருக்கு சாயரட்சை பூஜையில் மாலை 6.00 மணி அளவில் அன்னாபிஷெக வைபவம் சிறப்பாக நடைபெற உள்ளது.

  இதே ஆலயத்தில் ஸ்ரீ காரிய சித்தி கணபதிக்கு சங்கடஹர சதுர்த்தி அன்று (22-10-13 செவ்வாய்க்கிழமை) காலை 8.00 மணி முதல் சங்கட நிவாரண மஹா கணபதி ஹோமம் நடைபெற உள்ளது.
        ஆர்வமும் விருப்பமும் உள்ள பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவும். இது குறித்த தகவல்களை பின்னர் பகிர்கிறேன்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. அன்னதானம் செய்திடுவோம்...

  ReplyDelete
 2. விரிவான அருமையான விளக்கம்... நன்றி... ஊருக்கு சென்று சிறப்பிக்கவும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. தான் செய்த தவறுக்கு நியாயம் கற்பிக்க முயலும் அந்த துறவிக்கு தூக்கு தண்டனை கொடுத்திருக்க வேண்டும்.

  ReplyDelete
 4. அன்னாபிஷேக விவரங்கள் அருமை.
  இரண்டு கதைகளும் படிப்பினை.

  ReplyDelete
 5. அறியாத பல தகவல்களை
  இந்தப் பதிவின் மூலம்
  அறிந்து கொண்டோம்
  விரிவான பகிர்வுக்கும்
  தொடரவும்மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. மிக மிக அருமை! இதுவரை அறிந்ததில்லை இத்தகவல்கள்!

  பதிவிட்டுப் பகிர்ந்தமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2