உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 28

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 28


அன்பான வாசக பெருமக்களுக்கு வணக்கம்! சென்ற வாரம்  கொஞ்சம் வேலைப்பளுவினால் இந்த பகுதியை தொடர முடியவில்லை! ஆர்வத்துடன் விசாரித்தவர்களுக்கு நன்றி! அதற்கு முன்பு சட்ட சம்பந்தமான சில கலைச்சொற்களை நாம் பார்த்தோம். இந்த வாரம்  நாம் பார்க்க இருப்பது தொகைச் சொற்கள்.
   தொகைச் சொற்கள் என்றால் என்ன? சில மாணவர்களின் தமிழ் கேள்வித் தாளை வாங்கி பார்த்தால் அதில் தொகைச்சொற்களை விரித்தெழுதுக என்று கொடுத்து முக்கனி, ஐம்பூதங்கள், மூவேந்தர்கள் என்று கொடுத்திருப்பதை பெற்றோர்கள் பார்த்திருக்கலாம்.
     தொகை என்னும் சொல்லுக்கு தொகுத்தல் என்று பொருள். தொகுத்து எழுதப்படும் சொல் தொகைச் சொல் எனப்படுகிறது.
   சில தொகைச் சொற்களை இப்போது நாம் விரித்து எழுதி பொருள் விளங்கி கொள்வோமா?

இருவினை  -  நல்வினை, தீவினை; தன்வினை, பிறவினை
இருதிணை   - உயர்திணை, அஃறிணை; அகத்திணை, புறத்திணை.
முத்தமிழ்  - இயல், இசை, நாடகம்.
முப்பால் – அறம்,பொருள், இன்பம்.
மூவிடம்  -  தன்மை, முன்னிலை, படர்க்கை.
மூவேந்தர்    - சேரர், சோழர், பாண்டியர்.
முக்கனி      -     மா, பலா, வாழை.
நாற்றிசை  - கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு.
நானிலம்  -  குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்.
ஐந்திணை  - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை.
ஐம்பால்  - ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்.
ஐம்புலன்   - தொடு உணர்வு, உண்ணல், உயிர்த்தல், காணல், கேட்டல்.
ஐம்பொறி- மெய், வாய், மூக்கு, கண், செவி.
ஐம்பூதம்  - நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு.
அறுசுவை-  இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, உப்பு,, காரம்.


இதே மாதிரி தொகுத்து எழுதிக் கொண்டு செல்லலாம். இவைதான் தொகைச் சொற்கள் என்று சொல்லப்படுகின்றது. இன்று ஒரு புதிய விசயத்தை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி தானே! நன்றி.
  இப்போது இலக்கிய சுவையில் நுழைவோம்!

புறநானூற்று பாடல் ஒன்றை காண்போம்!
   
  பொன்னும் துகிரும் முத்தும் மணியும்
  மாமலை பயந்த காமரு மணியும்
  இடைப்பட சேய ஆயினும் தொடை புணர்ந்து
  அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
  ஒருவழித் தோன்றி யாங்கு என்றும் சான்றோர்
  சான்றோர் பாலர் ஆப
  சாலார் சாலார் பாலர்  ஆகுபவே.
                         கண்ணகனார்.


இந்த பாடலை பாடியவர் கண்ணகனார். இவர் கோப்பெருஞ்சோழனின் அவைக்கள புலவர்களில் ஒருவர். கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த போது  பிசிராந்தையாரின் வருகைக்காக காத்திருந்தான். அப்போது அவருடன் இருந்தவர் கண்ணகனார். சோழன் உயிர் துறந்த போது வருந்திய பாடிய பாடல் இது.

பொருள்:  பொன்னும் பவளமும் முத்தும் நிலைத்த பெருமலையில் பிறக்கக் கூடிய மாணிக்கமும் தோன்றும் இடங்களால் ஒன்றுக்கொன்று தொலைவிலும், மாறுபாடும் கொண்டிருப்பினும், மாலையாக கோர்த்து மதிப்பு மிக்க அணிகலனாக அமைக்கும் போது தம்முள் ஒருங்கு சேரும். அது போல சான்றோர் என்றும் சான்றோர் பக்கமே இருப்பர். சான்றாண்மை இல்லாதவர் தீயவர் பக்கமே சேர்வர்.
   என்ன அழகிய கருத்துள்ள பாடல்!

மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் இன்னும் பல தகவல்களுடன் சந்திக்கிறேன்! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

 1. புறநானூற்று பாடல் விளக்கம் அருமை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. உடனடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

   Delete
 2. தொகைச் சொற்களும், புறநானூறு பாடல் விளக்கமும் அருமை, பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 3. பள்ளியில் படித்த அருமையான செய்யுளை நினைவு படுத்தி விட்டீர்கள்

  ReplyDelete
 4. மீண்டும் பள்ளியில் அமர்ந்து படிப்பது
  போல் உள்ளது. அருமை !

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2