இரண்ய வாக்கம் ஸ்ரீ லஷ்மி நாராயணர்!

இரண்ய வாக்கம் ஸ்ரீ லஷ்மி நாராயணர்!


வைகுண்ட வாசன் ஏழுமலையான் பூலோகத்தில் பக்தர்களுக்கு தமது அருளினை அள்ளித்தர ஆங்காங்கே ஆலயங்களில் குடிகொண்டு அருள்பாலிப்பது வழக்கம். கருணை வடிவான எழுமலையான் ஆலயங்கள் எத்தனையோ பூமியில் அத்தனைக்கும் ஏதாகினும் ஒரு வரலாறு இருக்கும்.
   இது எங்கள் ஊர் அருகில் உள்ள எர்ணவாக்கம் எனும் இரண்யவாக்கம் ஸ்ரீ லஷ்மி நாராயணர் பற்றிய பதிவு.
    எங்கள் வீட்டில் இருந்து பார்த்தாலே இந்த எர்ணவாக்கம் ஊர் தெரியும் மிகச்சிறிய ஊர். சுமார் முப்பது வீடுகள் தான் இருக்கும். ஏழைக் கூலித்தொழிலாளர்கள் வசிக்கும் ஊர். இந்த ஊரில்தான் எழுந்தருளி இருக்கிறார் ஸ்ரீ லஷ்மி நாராயணர்.


   மஹாலஷ்மியை தனது இடதுபுறத்தில் தொடையில் அமர்த்தி வைத்தபடி அணைத்தபடி சங்கு சக்கரத்துடன் அபயவரத முத்திரையுடன் காட்சி தருகிறார் இந்த பெருமாள்.
   சுமார் ஆயிரம் வருடங்கள் பழமை கொண்டது இந்த ஊர் என்று ஊருக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு கூறுகிறது.ஊரும் சிறியது ஆலயமும் சிறியதாக இருந்தாலும் இந்த ஆலயத்தின் வரலாறு பெரியது. இது செவிவழிக் கதையாக கூறப்பட்டுவருவது ஆகும்.
    தன்னுடைய பக்தன் பிரகலாதனை காக்க நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை வதம் செய்கிறார் மஹாவிஷ்ணு. இரண்யனை ஆகாயத்திலும் பூமியிலும் கொல்ல முடியாது. இரவிலும் கொல்லமுடியாது பகலிலும் கொல்லமுடியாது. அதனால் பகலும் இரவும் சேரும் வேளையான சந்தியா காலத்தில் வாசற்படியில் வைத்து அவனது மார்பை கிழித்து கொல்கிறார் ஸ்ரீ நரசிம்மர்.

     இரண்யனை கொன்றதும் ஆவேசமாக அலைகிறார். வாயிற்படி மஹாலஷ்மியின் அம்சம். அதன் மீது வைத்து இரண்யனை கொன்றதால் மஹாலஷ்மி அவரிடம் வாசம் செய்யாமல் கோபித்து சென்று விடுகிறார். இதனால் மேலும் ஆவேசம் கொண்டு திரிகிறார் நரசிம்மர். பின்னர் சிவன் சரபேஸ்வர வடிவம் எடுத்து நரசிம்மரின் கோபம் தணிக்கிறார். நரசிம்மர் கோபம் தணிந்ததும் மஹாலஷ்மியை அடைவது எப்படி என்று யோசனை வருகிறது.
    இகணைப்பாக்கத்தில் உள்ள தற்போது நத்தம் எனப்படும் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வாலீஸ்வரரை பூஜித்து வழிபடுகிறார். மஹாலஷ்மியும் இந்த தலத்தில் அப்போது கோபித்து வந்து இருந்தார். வாலீஸ்வரரை வழிபட்டு தன்னுடைய தோஷம் நீங்கியதும் மஹாலஷ்மி மீண்டும் விஷ்ணுவை வந்தடைந்தாள்.
    இதனாலேயே இங்கு பெருமாள் ஸ்ரீ லஷ்மியை தனது இடது தொடையில் தாங்கி நிற்கிறார்.

   இரண்யனை வதம் செய்த பெருமாள் வசிக்கும் இடமாததால் இரண்யவாக்கம் என்றழைக்கப்பட்ட கிராமம் இப்போது மறுவி எர்ணவாக்கம் என்று அழைக்கப்படுகிறது.
   மிகச்சிறிய ஆலயம் கிராமத்தின் தொடக்கத்தில் கிழக்கு நோக்கி இருக்கிறது. ஒருவேளை பூஜை நடைபெறுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் விசேஷ அபிஷேகங்கள் நடைபெறும். சித்திரா பவுர்ணமி அன்று சுவாமி வீதி உலா வருவார்.
  அன்று சுற்றுப்புறங்களில் உள்ள கிராம மக்கள் திரண்டு வருவர். விழா விமரிசியையாக நடைபெறும்.
  இந்த ஆலயத்திற்கு போதுமான வருமானம் இல்லை! கிராம மக்களே முன்வந்து தங்களால் இயன்ற தொகையை போட்டு நிர்வாகம் செய்து வருகின்றனர்.

   ஆலயத்தில் முதலில் உற்சவர் இல்லாது இருந்தது. அந்த சமயத்தில் எனது தந்தையார் சிமெண்ட் கலவையில் விக்கிரகம் செய்து கொடுத்தார் அதைக்கொண்டு உற்சவம் நடைபெற்றுவந்தது. இப்போது பஞ்சலோக உற்சவர் சிலை செய்யப்பட்டு உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த கோயில் அருகே ஓடும் ஒரு மடுவில் பள்ளம் எடுத்தபோது சில சிலைகள் உடைபட்ட நிலையில் கிடைத்தனவாம். அதில் ஒன்றுதான் விநாயகர். இது இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இந்த ஊரில் அக்ரஹாரம் இருந்ததாகவும் செவிவழிக் கதைகள் உண்டு. மிகச்சிறிய அழகிய கிராமம். அழகான கோயில்.
  

 இந்த சிற்றூரில் வீற்றிருக்கும் ஸ்ரீ லஷ்மி நாராயணரை தரிசனம் செய்து ஆனந்த களிப்படைவோம்!
  டிஸ்கி} ஐப்பசி அன்னாபிஷேக பதிவில் எங்கள் ஊர் சிவன் கோயிலில் நடக்கும் அன்னாபிஷேகம் சங்கட நிவாரண ஹோமம் பற்றி கூறுவதாக சொல்லி இருந்தேன்.

    கடந்த வெள்ளியன்று ஸ்ரீ வாலீஸ்வரருக்கு வெகு சிறப்பாக அன்னாபிஷேக வழிபாடு நடைபெற்றது. கிராமமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நண்பர் திரு ஆத்தியப்பன் அன்னாபிஷேக அபிஷேகத்தின் உபயதாரராக இருந்து விழாவினை சிறப்பித்தார். அடுத்த முறை இன்னும் சிறப்பாக செய்யலாம் என்று கூறியுள்ளார். அவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

  சென்ற செவ்வாய் கிழமை 22-10-13 அன்று மழை மிரட்டியபோதும் சங்கட நிவாரண ஹோமம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கிராம மக்களும் பக்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஹோமத்தின் இறுதியில் ஸ்ரீ காரிய சித்தி கணபதிக்கு கலச அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டது. இந்த இரண்டு விழாக்களும் மிகச் சிறப்பாக நடைபெற்று அதில் பங்குபெற்றது குறித்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.
  (ஆலயத்தில் மூலவர் வாலீஸ்வரர் படம் போதிய வெளிச்சம் இன்மையால் சரிவர எடுக்க முடியவில்லை!)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!






Comments

  1. உங்க ஊர் கோயிலின் சிறப்பு தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
  2. ஊர்க் கோவில் வரலாறு அறிந்து கொண்டேன்.
    நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
  3. ஆகா! பதிவு என்பது நம்மையும் நம்ம ஊரையும் அடையாளபடுத்துவதாக இருக்க வேண்டும் என்று ஒரு கருத்து எனக்குண்டு. அந்த வகையில் அசத்தி விட்டீர்கள் சகோததரே... அழகான கோவில் வரலாறு, நல்லதொரு தரிசனம் கிடைத்த மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றீங்க.

    ReplyDelete
  4. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2