உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 29
உங்களின் தமிழ் அறிவு எப்படி?
பகுதி 29
வணக்கம் வாசக நண்பர்களே! இந்த
பகுதியில் நல்ல தமிழை சில மாதங்களாக சுவைத்து வருகிறோம். தமிழை பிழையின்றி எழுதுதல்
என்பது அனைவர்க்கும் கைவந்த கலை இல்லை! ஒற்றுப்பிழைகளும், சந்திப்பிழைகளும் நாம்
எழுதும் தமிழில் மலிந்துவிட்டன. இணையத்தமிழ் நிறைய பிழைகளோடுதான் உலா வருகிறது.
இதில் என்னையும் சேர்த்துக் கொள்ளலாம். நிறைய பிழைகள் என் எழுத்திலும் காணப்படும்.
இன்று உங்களோடு நானும் திருத்திக் கொள்ள சந்திப்பிழைகளை பார்க்க போகிறோம்.
இதுகொஞ்சம் பெரிய பகுதி என்பதால் இரண்டு
வாரங்களாக இந்த பிழைகள் நீக்கி எழுதுவதை பார்க்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.
சந்திப்பிழை என்பது தேவையான இடங்களில் வல்லின மெய் சேர்க்காமல் எழுதுவது, தேவையற்ற
இடங்களில் வல்லின மெய் சேர்த்து எழுதுதல் ஆகும். சந்திப்பிழையின்றி எழுத வல்லினம்
மிகும் இடமும் மிகாத இடமும் அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகும்.
செல்லினம் தெரியும்! அதென்ன வல்லினம்? என்று
கேட்பவர்களுக்கு கொஞ்சம் பால பாடம் எடுக்க வேண்டும். இதோ.
தமிழ் எழுத்துக்கள் மொத்தம் 247. அதில்
உயிரெழுத்துக்கள் 12, மெய்யெழுத்துக்கள் 18, உயிர்மெய் எழுத்துக்கள் 216. ஆய்த
எழுத்து 1. இந்த உயிர்மெய் எழுத்துக்களை வகைப்படுத்தும் படுத்தும் போது
கசட தபற
வல்லினம்
ஙஞண நமன -
மெல்லினம்
யரல வழள
- இடையினம். என்று பிரிப்பார்கள்.
இதில் நாம் இப்போது எடுத்துக்
கொள்ள வேண்டியது கசட தபற என்ற எழுத்துக்களை. இந்த எழுத்துக்களை சேர்த்து எழுதும்
போது எப்போது வல்லினம் மிகும் எப்போது மிகாது என்று அறிந்து கொண்டால் தமிழை
பிழையின்றி எழுதலாம்.
வல்லினம் மிகுதல் என்பது. இந்த எழுத்துக்களை
சேர்க்கும் போது வல்லின ஒற்று சேரும். மிகாது என்பது ஒற்று சேராமல் வரும். ஒற்று
என்பது மெய்யெழுத்தினைக் குறிக்கும்.
வல்லினம் மிகும் சில இடங்களை நாம் இப்போது
பார்ப்போம்!
- அந்த,இந்த,எந்த, அப்படி, இப்படி,எப்படி என்னும்
சொற்களின் பின் வல்லினம் மிகும்.
(எ.கா) அந்த+தோட்டம் = அந்தத்தோட்டம்
இந்த+கிணறு = இந்தக்கிணறு
எந்த+ தொழில் = எந்தத்தொழில்
அப்படி+செய்தான் = அப்படிச்செய்தான்
- இரண்டாம் வேற்றுமை நான்காம் வேற்றுமை விரிகளில்
வல்லினம் மிகும்.
(எ.கா)
பொருளை+தேடினான் =பொருளைத்தேடினான்
புத்தகத்தை+படித்தான் =புத்தகத்தைப்படித்தான்.
ஊருக்கு+ சென்றான் =ஊருக்குச்சென்றான்.
- ஆய்,போய் என்னும் வினையெச்சங்களின் பின் வல்லினம்
மிகும்.
(எ.கா) படிப்பதாய்+ சொன்னான் =படிப்பதாய்ச்சொன்னான்.
போய்+சேர்ந்தான் =போய்ச்சேர்ந்தான்.
- சால, தவ என்னும் உரிச்சொற்களின் பின் வல்லினம்
மிகும்.
(எ.கா) சால+பேசினான் = சாலப்பேசினான்.
தவ+சிறிது = தவச்சிறிது.
5.இரண்டு
மூன்று, நான்கு, ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகைகளின் பின்
வல்லினம் மிகும்
தண்ணீர்+பானை
=தண்ணீர்ப்பானை
மரம்+ பலகை
= மரப்பலகை
சட்டை+ துணி
= சட்டைத்துணி
6.ஓரேழுத்துச் சொற்கள் சிலவற்றுடன் வல்லினம் மிகும்.
தை+ பாவை
=தைப்பாவை
தீ+ சுடர் = தீச்சுடர்
7.ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சத்தின் பின் வல்லினம்
மிகும்
ஓடா+புலி =ஓடாப்புலி
வளையா+
செங்கோல் =வளையாச்செங்கோல்
8.வன்றொடர்
குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்
பத்து+ பாட்டு =பத்துப்பாட்டு
எட்டு+ தொகை
= எட்டுத்தொகை
9.
முற்றியலுகரச் சொற்களின் பின் வல்லினம் மிகும்.
திரு+குறள்
+ திருக்குறள்
பொது+ சொத்து = பொதுச்சொத்து
10.உயிரீற்று
சொற்களின் பின் வல்லினம் மிகும்.
மழை+காலம்
=மழைக்காலம்
பனி+ துளி
= பனித்துளி.
வல்லினம்
மிகும் இடங்களை அறிந்து கொண்டோம்! அடுத்த பகுதியில் வல்லினம் மிகா இடங்களை
அறிவோம். இது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். பல சொற்கள் புரியாதுதான் இலக்கணம்
கற்க, கற்க இனிமையாகும்.
இனி
இலக்கிய சுவை!
சேரமான்
கனைக்கால் இரும்பொறை பற்றி வரலாற்றில் படித்து இருப்பீர்கள். இந்த மன்னனுக்கும்
சோழ மன்னன் செங்கணான் என்பவனுக்கும் கழுமலத்தை அடுத்த திருப்போர்ப்புறம் என்னும்
இடத்தில் போர் நிகழ்ந்தது. இதில் சேரமான் கனைக்கால் இரும்பொறை தோற்றான். செங்கணான்
இரும்பொறையை குணவாயிற் கோட்டத்தில் சிறை வைத்தான். ஒரு சமயம், சேரமானுக்கு நீர்
வேட்கை( தாகம்) மேலிட காவலர்களை நீர் கேட்டான். காவலர்கள் நீர் தர தாமதம்
செய்தனர். அந்த நீரை அருந்தாது அவமானத்தினால் குன்றி உயிரை விட்டான் சேரமான்.
அவ்வாறு உயிர் நீக்கும் முன் தன் எண்ண ஓட்டங்களை ஒரு பாட்டாக வடித்தான் சேரமான்
கனைக்கால் இரும்பொறை அந்த பாடல் இதோ!
குழவி இறப்பினும் ஊன்றடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளின் தப்பார்
தொடர்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளான் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத்தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் உலகத் தானே?
பொருள்: மன்னர்கள் மரபில் குழந்தை இறந்து பிறந்தாலும்,
தசைப்பிண்டமாக பிறந்தாலும் அவற்றை ஆள் என்றே எண்ணி வாளால் வெட்டி பிளந்து அடக்கம்
செய்வர். ஆளில்லை என்று அவ்வாறு செய்யாமல் விடமாட்டார்கள். போரில் வாளால் வெட்டுண்டு மடியாது, சங்கிலியால்
கட்டப்பட்ட நாய் போல விலங்கைப் பூட்டி துன்புறுத்தி சிறையில் இட்ட
பகைவர்களிடம் வேண்டி கொண்டுவரப்பட்ட
தண்ணீரை அவரிடம் யாசித்து உண்ணமாட்டோம் என்ற மன உறுதியில்லாது, வயிற்றில் ஏற்பட்டத்
தீயை தணிக்க வேண்டி, யாசித்து உண்ணும் இழிநிலைக்கு ஆளானேனே! என்னைப் போன்ற மகனை மன்னர் பெறாதிருப்பாராக!
இந்த பாடலால் பண்டைக்கால மன்னர்களின் வீரமும்,
உறுதியும் தெரியவருகிறது. இப்பாடலை நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது
படித்தது. அப்போதே மனதை நெகிழ வைத்த ஒன்று.
மீண்டும் இந்த பாடலை தேடி உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்வடைகிறேன்!
மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில்
நிறைய தகவல்களுடன் சந்திப்போம்! உங்கள் பின்னூட்டங்களை அளித்து
ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
தளிர் அண்ணா......உங்க இலக்கணப் பாடம் ..(இதில ப்...போடலாமா..?) அருமை ..இப்படி ஏகப்பட்ட குயப்பம் எனக்கு அதனால இப்ப அதிகமாக கண்டுக்கிறதில்லை...படிக்கிறவங்க வேணும்னா திருத்திக்கொள்ளட்டும்
ReplyDeleteஇலக்கிய சுவையும் இனித்தது...
ReplyDeleteஇனிய சரஸ்வதி பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துக்கள்...
நல்ல பயனுள்ள பதிவு நண்பரே . இதை முகநூளில் நண்பர் ஒருவர் வலிமிகுதல் என்ற தலைப்பில் தொடர் பதிவு போட்டு வருகிறார் . அதை என் பக்கத்தில் பகிரலாம் என்று நினைத்திருந்தேன் . அதை விட எளிமையாக தெளிவாக இருக்கிறது உங்கள் பதிவு . இந்த சந்திப்பிழை பிரச்சனைதான் இன்னமும் தொல்லையாக இருக்கிறது . தொடர்ந்து எழுதுங்கள் .
ReplyDeleteமிகத் தேவையான பயனுள்ள பதிவு.
ReplyDeleteகலக்கிடீங்க போங்க ...