ராஜா கொடுத்த சன்மானம்! பாப்பா மலர்!

ராஜா கொடுத்த சன்மானம்! பாப்பா மலர்!


முன்னொரு காலத்தில் தர்மபுரி என்னும் நாட்டை மன்னன் தர்மசீலன் ஆண்டு வந்தான். அப்படி ஆண்டுவருகையில் மன்னன் பல ஊர்களுக்கு நகர்வலம் வருவதுண்டு. அப்போது மக்களின் குறைகள் கண்டறியப்பட்டு அவை நிவர்த்தி செய்யப்படும்.
    இப்படி ஒரு நாள் மன்னன் அந்த ஊருக்கு விஜயம் செய்யப் போவதாக தகவல் வந்தது. உடனே ஊர் மக்கள் அனைவருக்கும் மன்னனை பார்க்க ஆவல் வந்துவிட்டது. வெல்லத்தில் மொய்க்கும் எறும்பு போல மன்னனின் வருகையை எதிர்பார்த்து ஓரிடத்தில் குவிந்து கிடந்தனர்.
   இப்போதெல்லாம் சினிமா ஷூட்டிங்க் நடந்தால் ஹீரோ ஹீரோயின்களை காண ஒரு கூட்டம் குழுமுமே அப்படி ஒரு கூட்டம் மன்னனை காண குழுமியிருந்தது. ராஜா விஜயம் செய்கிறார். அவர் ஏதாவது பரிசு கொடுப்பார் என்று அந்த ஊரில் இருந்த எல்லோரும் பணிக்கு கூட செல்லாமல் காலை முதலே ராஜாவின் விஜயத்தை எதிர்நோக்கி இருந்தனர்.
   இந்த இலவச மோகம் அன்றும் கூட மக்களை விட்டு வைக்க வில்லை போல! ராஜா நம்மை ஒரு பார்வை பார்த்து நமக்கு ஏதாவது ஒரு பரிசை வழங்கினால் போதும் என்று காத்திருந்தனர் பலர்.
  அந்த ஊரில் ஒரு வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வந்தார். அவருக்கு உழைப்பின் மீது அபாரநம்பிக்கை! இந்த வயதிலும் உழைத்து உண்ணுபவர் அவர். இந்த கூத்துக்கள் களேபரங்கள் எதையும் அவர் சட்டை செய்ய வில்லை! அவருக்கு தெரிந்த தொழிலான கூடை முடைதலில் மும்முரமாக இருந்தார் அந்த பாட்டி!
   அப்போது அவர் முன் நிழலாடியது! பாட்டி நிமிர்ந்து பார்த்தார். கட்டுமஸ்தான இளைஞன் ஒருவன் நின்றிருந்தான். என்ன தம்பி! வேணும்? என்று வினவினார் பாட்டி. தாகமாய் இருக்கிறது பாட்டி! கொஞ்சம் குளிர்ந்த நீர் கிடைக்குமா? என்றான் இளைஞன்.
    சில்லென்று பானை நீரை கொண்டுவந்து கொடுத்தார் பாட்டி! இளைஞன் கேட்டான். பாட்டி! ஊரே மன்னர் வருகிறார் என்று ஒரே களேபரமாக இருக்கிறதே! அவரை பார்க்க வீதியில் மக்கள் குவிந்து நிற்கிறார்களே நீ போகவில்லையா? என்றான்.
    தம்பி! ராஜா வந்தா என்ன? மந்திரி வந்தா என்ன தம்பி! நம்ம உழைப்பை நாம கைவிடலாமா? உழைச்சாத்தான் என் மனசுக்கு நிம்மதி! வேலையை பாரமா நினைக்கிறவங்கதான் ராஜா வராரு! ஏதாவது கிடைக்கும்னு போயிருப்பாங்க! எனக்கு என் வேலைதான் முக்கியம்! என்றாள் பாட்டி.
   கடகடவென சிரித்தான் அந்த இளைஞன்! சரியா சொன்னீங்க பாட்டி! உழைக்காத சோம்பேறிங்கதான் இப்படி ராஜாவை பார்க்க போயிருக்காங்கன்னு பொட்டில் அடிச்சு சொன்னீங்க! இந்தாங்க பாட்டி! என்று ஒரு முத்திரை மோதிரத்தை நீட்டினான்.
  அதை பார்த்ததும் பாட்டி அசந்து போனாள். மஹாராஜா! நீங்களா! இந்த ஏழை வீடு தேடிவந்தது? என்று மகிழ்ந்து போனாள்.
   உழைத்து பிழைக்கும் உங்களை பார்க்க நான் வந்ததில் வியப்பேதும் இல்லை! என்னை பார்க்க போனவர்கள் திரும்பி வந்ததும் உழைச்சுப் பிழைக்கிற என்னை தேடி ராஜாவே வந்தாருன்னு சொல்லி இந்த முத்திரை மோதிரத்தை காட்டுங்கள்! அப்படியாவது அவர்களுக்கு புத்தி வரட்டும் என்ற ராஜா விடைபெற்றார்.
    ராஜா ஆடம்பரமாக வருவார் என்று வழிமேல் விழிவைத்து காத்திருந்த மக்கள் வழிப்போக்கன் வேடத்தில் பாட்டி வீட்டிற்கு வந்து சென்றதை அறிந்தனர். பாட்டிக்கு கிடைத்த சன்மானம் தமக்கு கிடைக்காமல் போனது உழைப்பை கைவிட்டதால்தான் என்று உணர்ந்தனர். உழைப்பவரையே உயர்மக்கள் விரும்புவர் என்ற உண்மை அறிந்தனர்.

நீதி: உழைப்பே உயர்வு.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

 

Comments

 1. உழைப்பே உயர்வு. மிக சரி.

  நல்ல பதிவு, நன்றி.

  ReplyDelete
 2. உழைப்பின் மீது அபாரநம்பிக்கை! //அதனால்தான் இன்னும் துடிப்போடு வாழ்ந்தார்

  ReplyDelete
 3. நல்லதொரு நீதிக்கதை

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2