துரத்தும் நிழல்! பகுதி 5

துரத்தும் நிழல்! பகுதி 5

ஏழை குருக்கள் வைத்தியநாதனின் மனைவிக்கு வித்தியாசமான நோய் தாக்குகிறது. இதனிடையே அவரது அக்காள் மகள் இறந்து போகிறாள்.


புதைகுழியில் சிக்குண்ட ஹேமாவின் முகத்தில் மரணத்தின் நிழல்விழுந்தது. அவளது கண்கள் காப்பாற்றமாட்டாயா என்று இறைஞ்சின. வைத்தி பதட்டத்துடன், ஹேமா! ஒண்ணும் ஆகாது இதோ கையைக் கொடு என்று நீட்ட ஹேமாவால் கை நீட்ட முடியவில்லை! அவள் கண்களும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து முழுதும் மூழ்கிப்போனாள். எல்லாம் ஒரு நிமிடத்தில் நடந்தேறிவிட்டது போல் இருந்தது. ஐயோ! ஹேமா! என்னை விட்டுட்டு போயிடாதே! என்று அலறியபடி எழுந்தார் வைத்தி.
   அவரது முகம் வியர்த்துக் கொட்டியது! நேரம் சரியாக இரவு மணி ஒன்று. எல்லாம் கனவு! எப்படிப்பட்ட கனவு இது! கெட்ட கனவு! இது ஏன் இப்போது வர வேண்டும். வெளியே சென்று சிறுநீர் கழித்துவிட்டு வந்தவர் அருகில் இருந்த சொம்பில் இருந்த ஜலத்தை குடித்து முடித்தார். முகத்தை துடைத்துக் கொண்டார்.
   படுக்கையில் படுத்தவருக்குத் தூக்கம் வரவில்லை! கடந்த இரு தினங்களாக நடந்த நிகழ்வுகள் அவரை துவம்சம் செய்தன. ஹேமாவுக்கு திடீரென ஏன் நோய் வந்தது? அதற்கும் இந்த கனவிற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ? இந்த மாதிரி ஒரு கனவு வர என்ன காரணமாக இருக்கும்? பலவாறு சிந்தனைகள் ஓட தூக்கம் கலைந்து போனது. ஒரு வழியாய் விடிகாலையில் உறங்க ஆரம்பித்த அவரை எழுப்பினான் கோயில் பண்டாரம் ஏகாம்பரம்.
    சாமி! சாமி! பொழுது விடிஞ்சிருச்சு! எழுந்திருங்க! சாவி கொடுங்க! பூ பறிக்கணும்!
  மெதுவாக எழுந்து கதவை திறந்த வைத்தியின் கண்கள் சிவந்து போய் இருந்தது. என்ன சாமி! ராத்திரி சரியா தூங்கலியா? கண்ணெல்லாம் சிவந்து கிடக்கு! நான் வேற வந்து உங்க தூக்கத்தை கலைச்சுட்டேன் போல!
   அதெல்லாம் ஒண்ணுமில்ல ஏகாம்பரம்! நீ போய் வேலையை பாரு! நான் குளிச்சிட்டு கோயிலுக்கு வரேன்!
   காலைக் கடன்களை முடித்து குளித்து கோயிலுக்குள் நுழைந்தார் வைத்தி. ஏகாம்பரம் அதற்குள் கோயிலை சுத்தம் செய்து தீபம் ஏற்றி பூஜைக்குத்தேவையான பூக்களை பறித்து வைத்து இருந்தார்.
  எல்லாம் இருந்தும் குருக்களின் மனம் பூஜையில் லயிக்கவில்லை! சிந்தனை எங்கோ இருக்க பூஜை முடிய கூடுதல் நேரம் ஆனது. ஏன் சாமி ஒரு மாதிரி இருக்கீங்க! என்கிட்ட சொல்லக் கூடாதா? என்றார் ஏகாம்பரம்.
   வைத்தி தான் கண்ட கனவை கூறினார். ஏகாம்பரம் ரெண்டு மூனு நாளா மாத்தி மாத்தி ஏதொ ஒண்ணு கெட்டதாவே நடந்துகிட்டு இருக்கு. இப்ப என்னடான்னா இந்த கனவு! மனசே சரியில்லை! ஐயிரம்மாவை மாமனார் வீட்டுல விட்டு ரெண்டு நாள் ஆயிருச்சு! நோய் சுகமாச்சா இல்லையா ஒருதகவலும் தெரியலை!
   போயி பார்க்கவும் நேரம் சரியா அமையலை! இந்த கனவு கண்டதும் மனசே ஒருமாதிரி ஆயிருச்சு! என்றார் குருக்கள்.
   ஒன் நல்ல மனசுக்கு எதுவும் ஆகாது சாமி! ஏதாவது துர்சேஷ்டை ஏதாச்சும் உலாத்தி இருக்கும்! நம்ம சாமி திருநீறு பூசி சாமியை வேண்டிக்கோ சாமி! எல்லாம் நல்லதே நடக்கும்.
   சரி நேரமாச்சு! வீட்டுக்கு கிளம்புவோம்! சமையல் வேற செய்யனும்! சாயங்காலம் விளக்கு வெச்சிரு! நான் சாப்பிட்டுட்டு மாமனார் வீட்டுக்கு போயிட்டு வந்துடறேன்!
   சரிங்க சாமி!

இருவரும் பேசியபடியே கோபுரவாயிலை விட்டு வெளியே வந்தபோது என்ன மாப்ளே! இப்பத்தான் பூஜை முடிஞ்சுதா? ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்கேள்? என்றபடி வந்தார் சண்முக குருக்கள்.
    வாங்க மாமா? சவுக்கியமா? உக்காருங்கோ! என்று சொல்லிவிட்டு வீட்டினுள் சென்று சொம்பு நிறைய தீர்த்தம் எடுத்துவந்து நீட்டினார் வைத்தி.
   என்ன சாமி! சவுக்கியம்தானா? பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க என்று குசலம் விசாரித்தார் ஏகாம்பரம். எல்லாம் நல்லா இருக்காங்க! உங்க வீட்டுல எல்லோரும் சவுக்கியம்தானே என்று மறு குசலம் விசாரித்துவிட்டு சொம்பு நீரை குடித்துவிட்டு தொண்டையை கனைத்துக் கொண்டார் சண்முகம்.
  என்ன மாமா? நீங்க மட்டும் வந்து இருக்கீங்க? ஹேமா வரலையா?
  ஹேமாவுக்கு இன்னும் குணமாகலை மாப்ளே!
 இன்னுமா? டாக்டர் என்ன சொல்றார்?
டாக்டரால அது என்ன வியாதின்னு கண்டுபிடிக்க முடியலை! ஏதோ மருந்து மாத்திரை எழுதி கொடுத்து இருக்கார். அவ்வளவுதான்!
  என்ன மாமா? இப்படி விட்டேத்தியா பேசறீங்க!
பின்ன என்ன பண்ண சொல்றீங்க? இது ஒரு அத்துவான காடாட்டாம் இருக்கு! ஒரு வசதி கிடையாது. கேடுகெட்டுப்போயி இங்க பொண்ணக்கொடுத்திட்டு நான் இப்ப அவஸ்தை பட்டுக்கிட்டு இருக்கேன்.
    அப்படி என்ன கொறைஞ்சி போச்சு இந்த எடத்துக்கு?
யோவ்! நீ மனுசனாய்யா! இந்த இடத்துல மனுசன் தனியா தங்க முடியுமா? சுத்திலும் புதர் காடா இருக்கு! இங்க எந்த பூச்சி எம்மவளை கடிச்சதோ?

    அதான் பூச்சிக்கடி இல்லேன்னு வைத்தியர் சொல்லிட்டாரே!
அப்ப என்ன கருமாந்திரமோ கடிச்சிருக்கு! டாக்டர் விஷம் இல்லேன்னு சொல்றாரு! ஆனா தடிப்பு குறைய மாட்டேங்குது! உடம்புல நீரும் இல்லே! அப்ப என்ன நோயின்னு சொல்றது?
    என்ன வைத்தியம் பண்றதுன்னே தெரியலையே எனக்கு?
செய்யறதையும் செஞ்சிட்டு இப்ப வைத்தியம் பண்ண தெரியலைன்னா சொல்றே?
நான் என்ன அப்படி செஞ்சிட்டேன்?
ஆத்தாளும் புள்ளையுமா சேர்ந்து என் மகளுக்கு செய்வினை செஞ்சிட்டீங்க?
 மாமா! இதெல்லாம் அதிகம்! இப்படி உங்க மக எதிரில சொல்லி பாருங்க அப்ப தெரியும்!
 அவ எப்ப உன்னை விட்டுக் கொடுத்திருக்கா? என் மக நகையை கொடுக்க மாட்டேன்னு சொன்னது உங்கம்மாவுக்கு பிடிக்கலை! அதான் என் மகளை இப்படி பண்ணிட்டா!
  எங்க அம்மா அப்படி பட்டவங்க இல்ல!
நான் சாட்சியோட நிருபிச்சிட்டா?
முதல்ல நிரூபியுங்க!
நிரூபணம் பண்ணிட்டா என்ன பண்றீங்க!
மாமா இது பந்தயத்துக்கு நேரம் இல்லை! நோயை அனுபவிக்கிறது என் பெண்டாட்டி! சரி எங்கம்மாதான் தப்பு பண்ணாங்கன்னு தெரிஞ்சா அவங்க முகத்திலே விழிக்காம இருந்துடறேன்! நீங்க சொல்றதை கேக்கறேன்!
  அப்படி வாங்க வழிக்கு!
நீங்க முதல்ல நிரூபணம் பண்ணுங்க! அப்புறம் உங்க வழிக்கு வரேன்!
 நான் நீருபணம் செய்யணும்னா நீங்க என் கூட ஒரு இடத்துக்கு வரணும்.
  ஏன்?
நீருபணம் அங்கதான் இருக்கு!
 சரி நீங்க கூப்பிடற இடத்துக்கு நான் வரேன்! எப்ப வரணும்?
நாளைக்கு போகலாம்!
மறுநாள் அந்த இடத்திற்கு வைத்தி சென்றார். அங்கு சென்ற போது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
                        நிழல் துரத்தும்(5)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள் நன்றி!




Comments

  1. என்ன அதிர்ச்சி என்று அறிய ஆவல்...

    ReplyDelete
  2. ஆகா அருமை அண்ணா! பகுதி 1 லிருந்து படிக்க வேண்டும் என்ற ஆவல் பிறந்துள்ளது. நேரம் கிடைக்கும் போது விரைந்து படிப்பேன். எடுத்தல், தொடுத்தல், முடித்தல் எனும் அத்தனை அம்சங்களும் கொண்டுள்ளது படைப்பு. பகிர்வுக்கு நன்றீங்க அண்ணா.

    ReplyDelete
  3. சஸ்பென்ஸோடு போகிறது. தொடர்ந்து எழுதுங்க..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2