பட்டாசு விளையாட்டு! பாப்பாமலர்!

பட்டாசு விளையாட்டு! பாப்பாமலர்!


   தீபாவளி தினம் ராஜேஷ் பட்டாசுகளை எடுத்துக் கொண்டு வாசலுக்குவந்தான். காம்பவுண்ட் வாசலில் நின்றுகொண்டு சாலையில் யாராவது போகிறார்களா என்று பார்த்தான். வயதான பெரியவர் ஒருவர் அந்த தெருவழியே வருவதை கவனித்தான்.
    உடனே அவனது முகம் பிரகாசமானது வேகமாக உள்ளே வந்த அவன் கையில் தற்போது ஒரு மிளகாய் வெடி இருந்தது. மற்றொரு கையில் ஒரு ஊதுவத்தி, மீண்டும் வாசலுக்கு வந்து அந்த பெரியவர் இந்த பக்கமாக வருகிறாரா? என்று பார்த்தான். அவர் மெதுவாக ராஜேஷ் வீட்டு வாசலை கடக்கும் சமயமாக கையில் இருந்த மிளகாய் வெடியை கொளுத்திப் போட்டான். அந்த வெடி அவரது அருகில் விழுந்து  ‘டமால்’ என வெடித்து சிதற அந்த பெரியவர் திடுக்கிட்டு போனார். அவர் சுற்றும் முற்றும் பார்த்தார். அவர் கண்ணில் படாதவாறு ஒளிந்து கொண்டான் ராஜேஷ்.
    சுற்றிலும் யாரும் இல்லை என்று தெரிந்து அவர் பாட்டுக்கு எதையோ முணுமுணுத்து சென்றுவிட்டார் அந்த பெரியவர். ராஜேஷ் அடுத்த இரைக்காக காத்திருந்தான். இப்போது வந்தது ஒரு சின்னவயது பையன் அவன் அருகில் வரும்போது மறைந்திருந்து கொளுத்திப் போட அவன் அலறி அடித்து ஓட வாய்விட்டு சிரித்து மகிழ்ந்தான் ராஜேஷ்.
       தீபாவளி நெருங்கியது அடம்பிடித்து நிறைய பட்டாசுகளை வாங்கி குவித்துவிட்டான் ராஜேஷ். ஒரே மகன் என்பதால் அவரது தந்தையும் நிறைய வாங்கி கொடுத்தார். ஆனால் ராஜேஷிற்கு இந்த பட்டாசு விளையாட்டு ரொம்பவே பிடித்துவிட்டது. யார் அருகிலாவது அவர் அறியாமல் பட்டாசை கொளுத்திப் போட்டு அதில் அவர் திடுக்கிட்டு பயப்படும்போது மனதிற்குள் பெரிய ஹீரோவாக நினைத்து சிரித்து மகிழ்வான் ராஜேஷ். பலர் அவனை வாய்க்கு வந்தபடி திட்டி செல்வதை அவன் சட்டை செய்வதே இல்லை! அவர்கள் கண்ணில் படாதவாறு ஒளிந்துகொள்வான்.
     சில சமயம் சிலர் அவனைக் கண்டுபிடித்து திட்டினாலும் அதையெல்லாம் துடைத்து எறிந்துவிட்டான். சிலர் நல்லபடியாக அறிவுரையும் கூறினர். தம்பி! நீ செய்யறது சரியில்லை! யார் மேலயாவது பட்டாசு பட்டு தீக்காயம் ஆச்சின்னா ரொம்ப கஷ்டமாயிரும்! இது கெட்ட விளையாட்டு! சின்ன பிள்ளையாக இருக்கிறயேன்னு விடறவங்க அப்ப சும்மா இருக்க மாட்டாங்க! உனக்கு மட்டும் இல்லே உன் வீட்டுல எல்லாருக்கும் திட்டு விழும்! வேணாம் விட்டுரு! என்று சிலர் சொல்லும் போது நல்ல பிள்ளையாக கேட்டுக் கொள்வான். ஆனால் அவர்கள் அந்த பக்கம் சென்றதுமே இவன் இந்த பக்கம் விளையாட்டை ஆரம்பித்து விடுவான்.
     இப்படி பலரை பயமுறுத்துவதின் மூலம் ஒரு சுகத்தையே அவன் கண்டான். இது விபரீத விளையாட்டு என்பதை அவனது விளையாட்டு மனம் உணரவில்லை! எனவே இந்த விளையாட்டை தொடர்ந்து கொண்டிருந்தான். காலையில் அலுவலகம் சென்றுவிடும் அவனது தந்தை இரவில்தான் திரும்புவதால் மகனின் விளையாட்டு அவருக்குத் தெரியவில்லை! அன்று அவர் அலுவலகம் செல்லும் போது வழி மறித்த பெரியவர் ஒருவர், ஏம்பா! உன் பையனை கொஞ்சம் அடக்கிவை! போற வர்றவங்க மேல எல்லாம் பட்டாசு கொளுத்தி போடறான் என்றதும்தான் விசாரித்தார். மகன் செய்யும் தவறு அப்போதுதான் தெரிந்தது அவருக்கு. கண்டிச்சு வைக்கிறேங்க! என்று அப்போதைக்கு சொல்லிவிட்டு எப்படி அவனை திருத்தலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்.
    அன்று  ராஜேஷ் வழக்கம் போல பட்டாசு கொளுத்திப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தான். தீபாவளி தினம் என்பதால் கூடுதல் உற்சாகம் வேறு. அவன் பட்டாசு வெடியில் பயந்து செல்வோரை பார்த்து இடி இடியென சிரித்துக் கொண்டிருக்கும் போதுதான்  அவனது தந்தை நெற்றியில் கட்டுடன் வந்தார்.
   என்னப்பா! என்னப்பா ஆச்சு! நெத்தியிலே கட்டு போட்டிருக்கீங்க? எப்படி அடிபட்டுச்சு? பதறிப் போய் கேட்டான் ராஜேஷ்.
   பதட்டப் படாதே ராஜேஷ்! சின்ன காயம்தான்!
சின்ன காயமா? நீங்க கீழே விழுந்துட்டீங்களா? எப்படி ஏற்பட்டுச்சு?
   இல்ல ராஜேஷ்! கீழ விழலை! தெருவழியா போயிட்டிருந்தப்ப ஒரு பையன் பட்டாசு கொளுத்தி போட்டுட்டான்! நான் குறுக்கே போயிட்டேன்! அது சரியா என் மேல விழுந்து வெடிச்சது! நல்ல வேளை கண்ணுக்கு ஒண்ணும் பாதிப்பில்லாம போயிருச்சு! இன்னும் கொஞ்சம் கீழே பட்டிருந்தா கண்ணும் போயிருக்கும்!
   பசங்களுக்கு அறிவு வேணாம்! இப்படியா மனுசங்க மேல பட்டாசு கொளுத்தி போடுவானுங்க! நீங்க சும்மாவா வந்தீங்க!
    எதோ சின்ன பையன் தெரியாம செஞ்சிட்டான் சரிவிட்டுத் தள்ளு!
   எப்படிப்பா விட்டு தள்ளுறது! அவன் செஞ்சது நல்ல காரியமா? உங்க கண்ணுல பட்டு கண்பார்வை பாதிப்படைஞ்சிருந்தா என்ன பண்றது பட்டாசுகளை தெருவிலயா கொளுத்திப் போடுவாங்க? அவனை சும்மா விடக்கூடாது! அவனுங்களை சேர்த்து வைச்சு உதைக்கணும் அப்பத்தான் புத்திவரும்!
   சரி ராஜேஷ்! உதைச்சிரலாம்! ஆனா முதல்ல உன்னை என்ன செய்யறதுன்னு நீயே சொல்லிரு!
   என்னப்பா சொல்றீங்க?

  நீ கூடத்தான் தெருவில போற வர்றவங்க பயப்படற மாதிரி பட்டாசு கொளுத்தி போடற?  நம்ம கிட்ட குத்தம் வச்சிக்கிட்டு அடுத்தவன் குற்றத்தை எப்படி தட்டிக் கேக்கறது?
   உனக்கொரு நியாயம் அவங்களுக்கு  ஒரு நியாயமா? அப்படி அவங்களை கேட்க உனக்கு என்ன அருகதை இருக்கு? உன்னாலே பாதிக்கப்பட்டவங்களும் இப்படிதானே கோபப்பட்டு இருப்பாங்க! அவங்க வசவ தீபாவளி திருநாளில் வாழ்த்தா எடுத்துக்க போறீயா? தந்தையின் கேள்விகள் முள்ளாய் ராஜேஷின் நெஞ்சில் குத்தின.
   தலைகுனிந்து நின்றான் ராஜேஷ். அவன் கண்களில் கண்ணீர்! அப்பா! என்னை மன்னிச்சிருங்கப்பா! இனிமே இந்த பட்டாசு விளையாட்டை விட்டுடறேன்! இது ஒரு போதையா மாறி என் கண்ணையே மறைச்சிருச்சு! தக்க சமயத்திலே உங்களுக்கு பட்ட அடி என் கண்ணை திறந்திருச்சு! இந்த விபரீத விளையாட்டை இதோடவிட்டுடறேன்! என்றான்.
   மாறமாட்டேயே ராஜேஷ்? தந்தை கேட்க! கண்டிப்பா மாறமாட்டேன் அப்பா! இனி பட்டாசோட விளையாட மாட்டேன்! என்றான்.
  அப்ப இந்த நெத்திக் கட்டுக்கு அவசியம் இல்லே! என்று கட்டை அவிழ்த்த தந்தை உன்னை திருத்தத் தான் இந்த நாடகம்! என்றார்.
  அப்பா! நீங்க பெரிய நடிகர்தான்! பிரமாதமாய் நடிச்சு என் தவறை உணர்த்திட்டீங்க! என்று ராஜேஷ் சிரிக்க அவனது தந்தையும் சிரிப்பில் கலந்து கொண்டார்.

நீதி: பட்டாசுகளை தெருவில் கொளுத்தி போடாதீர்கள்! அக்கம் பக்கத்தினரை பாதிக்காத வண்ணம் தீபாவளி கொண்டாடுங்கள்! நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. ம்ம்ம்... நாடகம் போட்டுத் திருத்திய தந்தை சர வெடி !
    இனி என்ன முகத்தில் மத்தாப்பு தான் ....நல்ல கதை !

    ReplyDelete
  2. அருமையான நீதிக் கதை ஐயா நன்றி

    ReplyDelete
  3. அன்பின் சுரேஷ் - கதை அருமை - தவறு செய்யும் பிள்ளையை - நாடகமாடித் திருத்தும் தந்தை - கதை அருமை - இரசித்தேன் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!