உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 30

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 30



வணக்கம் வாசக அன்பர்களே! சென்ற வாரம் சந்திப்பிழை நீக்குவதில் வல்லினம் மிகும் இடங்களைப் பார்த்தோம்! இந்த வாரம் வல்லினம் மிகா இடங்களைப் பார்ப்போம்!

வல்லினம் மிகா இடங்கள்

  1. வினைத்தொகையில் வல்லினம் மிகாது.
(எ.கா) விரி+சுடர்  விரிசுடர்
       பாய்+புலி பாய்புலி

  1. உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது.
எ.கா) காய்+கனி= காய்கனி
       தாய்+தந்தை =தாய்தந்தை

3.இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது.
  தமிழ்+கற்றார்= தமிழ்கற்றார்
  கதை+ சொன்னார் = கதைசொன்னார்

4.வியங்கோள்வினைமுற்றுக்குப்பின் வல்லினம் மிகாது.
  கற்க+கசடற  = கற்ககசடற
  வாழ்க+தமிழ்  = வாழ்கதமிழ்

5. விளித்தொடரில் வலிமிகாது
   கண்ணா+பாடு  = கண்ணாபாடு
   அண்ணா+கேள்  = அண்ணாகேள்

 6.அத்தனை,இத்தனை, எத்தனை என்னும் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகாது.
அத்தனை+பழங்கள்  =அத்தனைபழங்கள்
இத்தனை+ பைகள் = இத்தனைபைகள்
எத்தனை+ காய்கள் = எத்தனைகாய்கள்

 7.இரட்டைக்கிளவியிலும் அடுக்குத்தொடரிலும் வல்லினம் மிகாது.
    கல+கல  = கலகல
    பாம்பு+பாம்பு  = பாம்புபாம்பு

 8.அவை, இவை, என்னும் சுட்டுசொற்களின் பின் வல்லினம் மிகாது.
அவை+ சென்றன = அவைசென்றன
இவை + செய்தன  + இவைசெய்தன

 9.எது, யாது என்னும் வினா சொற்களின் பின் வல்லினம் மிகாது.
எது + பறந்தது  = எதுபறந்தது?
யாது+ தந்தார்   = யாது தந்தார்?

10.  அது, இது என்னும் சுட்டு சொற்களின் பின் வல்லினம் மிகாது.
      அது+ பறந்தது  = அதுபறந்தது
      இது+ கடிந்தது  = இதுகடிந்தது.

வல்லினம் மிகும் இடம் மிகாத இடங்களை அறிந்து கொண்டாயிற்று அல்லவா? இனி இவற்றைக் கொண்டு போதிய பயிற்சி மேற்கொண்டால் சந்திப்பிழையின்றி எழுதவரும்.

இதில் சில வினாக்கள் வரலாம்! வினைத்தொகை, உம்மைத்தொகை, வியங்கோள்வினைமுற்று, உரிச்சொல்தொடர், வினையெச்சம், வேற்றுமை உருபுகள் என இலக்கணப்பெயர்களாக பார்த்தோம்! இவை என்ன? இதெல்லாம் எங்களுக்குத்தெரியாதே இது தெரிந்தால்தானே பிழையின்றி எழுத முடியும் என்ற சந்தேகமும் கேள்வியும் எழுவது இயற்கை!

    முடிந்தவரை நான் கொடுத்த எடுத்துக்காட்டுகளே பிழையின்றி எழுத போதுமானது என்று நினைக்கிறேன்! இன்னும் விரிவாக இந்த இலக்கணம் அறிய இந்த தொடரை தொடருங்கள் விடை கிடைக்கும்.

இனி இலக்கிய சுவை!

அந்த காலத்தில் புலவர்கள் வறுமையில் வாடினாலும் அரசர்களிடம் பயமின்றி அவர்களின் குறைகளை எடுத்துக் கூறினர். இன்று சிறிய தொகை ஒன்றை நன்கொடை கொடுத்துவிட்டு விளம்பரம் தேடிக்கொள்வோர் பலர் உண்டு. அன்றைய அரசர்களும் கொடைவள்ளல்களாக திகழ்ந்தாலும் அவர்களின் கொடைத்திறத்தில் வேறுபாடு உண்டு. இளவெளிமான் என்னும் மன்னன் கொடுத்த கொடை குறைவு என்று  குமணனிடம் சென்று யானையை பரிசிலாக பெற்றுவந்து அதை இளவெளிமானின் காவல்மரத்தில் கட்டி இளவெளி மானை அவமானம் செய்யும் புலவரை இந்த பாடலில் பாருங்கள்.

இரவலர் புரவலை நீயும் அல்லை
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்
இரவலர் உண்மையும் காண்இனி இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண்இனி நின்ஊர்க்
கடிமரம் வருந்தத் தந்துயாம் பிணித்த
நெடுநல் யானைஎம் பரிசில்
கடுமான் தோன்றல் செல்வல் யானே.

                    பெருஞ்சித்திரனார்.


விரைவாக ஓடும் குதிரைகளையுடைய மன்னவனே! இரப்பவரை வேண்டுவனவற்றைத் தந்து பாதுகாப்பவன் நீதான் என்பது இல்லை. வேண்டியவற்றை தந்து பாதுகாப்பது உன்னையல்லாது வேறு ஒருவர் இல்லாமலும் இல்லை. இன்னமும் வரிசை அறிந்து தாராது உன்னைப்போன்றவர் தோன்றியபின்பும் இரவலர் இவ்வுலகத்தில் இருப்பதை நீ காண்பாயாக! இனி இரவலர்க்கு வேண்டியவற்றை தந்து பாதுகாக்கும் வள்ளல் இருப்பதையும் காண்பாயாக! உன் ஊரில் உள்ள காவல் மரம் வருந்தும்படி நாம் கொணர்ந்து கட்டியுள்ள பெரிய யானை நாம் இப்போது பெற்றுவந்த பரிசிலாகும் இதை நீ அறிவாயாக!


   பெருஞ்சித்திரனார் என்னும் புலவர் இளவெளிமானிடம் கொடை வேண்டி சென்றார். அவனோ புலவரின் தகுதியை அறியாது சிறிய அளவில் பரிசில் தந்து அனுப்பினான். இதனால் வருந்திய புலவர் வள்ளல் குமணனிடம் சென்று இதை சொல்லி பெரும்பரிசல்களை யானையுடன் பெற்றுவந்தார். அந்த காலத்தில் அரசர்களின் அரண்மனை முன் வேம்பு, கடப்பமரம் போன்றவை காவல் மரங்களாக வளர்ப்பர். இவை காவல்தெய்வமாக கருதப்படும். தன்னை அவமதித்த இளவெளிமானை அவமானப்படுத்த அந்த காவல்மரத்தில் தான் பெற்றுவந்த யானையை கட்டிவைத்துவிட்டு, உலகத்தில் நீ மட்டுமே கொடைவள்ளல் இல்லை! வரிசை அறிந்து பரிசளிக்காத உன்னை போன்றோர் உள்ள போதும் இன்னும் நிறைய வள்ளல்கள் உலகில் உள்ளனர். அவர்களின் வள்ளல் தன்மையை உன் வீட்டு காவல்மரத்தில் கட்டியிருக்கும் யானையைப் பார்த்து அறிந்து கொள்வாயாக! என்று பாடுகிறார் புலவர்.

  என்ன ஒரு தைரியம் பார்த்தீர்களா! காசுக்கு புகழும் இந்த கால புலவர்களுக்கும் அந்த கால புலவர்களுக்கும் உள்ள வேற்றுமை புரிகிறது அல்லவா?

மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் புதிய தகவல்களுடன் சந்திப்போம்! சென்ற பகுதிக்கு கருத்துரை அளித்து ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி! உங்கள் கருத்துரைகளை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. பெருஞ்சித்திரனார் புலவரின் பாடல் விளக்கம் மிகவும் அருமை... நன்றி... தொடர்க...

    ReplyDelete
  2. பாடலும் விளக்கமும் அருமை நன்றி

    ReplyDelete
  3. தமிழ் இலக்கணம் சார்ந்த கட்டுரைகளை படித்து முடிக்கும் போது நம்முடைய தமிழ் அறிவு எந்த லட்சணத்தில் உள்ளது என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!